ஜெரியை எச்சரித்து அனுப்பி விட்ட இந்திரஜித், தனக்கு வரமாய் கிடைத்த தம்பிகளையும் தங்கையையும் திரும்பிப்பார்த்தான் அவர்களோ ஆளுக்கொரு முகபாவனையுடன் அவளையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
"சோ, எங்களை நிரந்தரமாக இங்கேயே தங்க வைக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க. உங்களுக்கு தெரியுமா? எங்களுக்கு குடும்பம் இருக்காங்க. அம்மா அப்பா இருக்காங்க. யாரும் எங்கள கவனிக்கிறது இல்ல தான். ஆனா எங்களுக்கு அவங்க வேண்டும். அவங்களுக்கும் நாங்க வேண்டும்." என்று தன்மையாய் தங்கள் பக்கதிலிருந்த நியாயத்தை எடுத்துரைத்தான்.
அவர்கள் இவ்வாறு கூறுவதைக் கேட்ட இந்திரஜித்துக்கு தான் கோபத்தில் முகம் சிவந்தது. இத்தனை நேரம் குற்ற உணர்ச்சியில் அமைதியாய் இருந்தவனுக்கு, தற்போது தான் அவர்களின் தமையன் தானே! ஒரு தமையனாய் அவர்களது நலம் விரும்பி நான் கூறுவதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என அவனுக்கு சினம் மூண்டெழுந்தது.
"நான் சொல்லுறது உங்களுக்கு புரியலையா? இல்ல புரியாத மாதிரி நடிக்குறீங்களா? இங்கிருந்து நீங்க எங்கயும் போக முடியாது. நீங்கள் என்னோடு இந்த பங்களாவில் தான் இருக்கணும்." என்று இந்திரஜித் கூற தனது கைமுஷ்டிகளை இறுக்கினான் ரோகித்.
"லுக் மிஸ்டர்" என்று கோபமாக பேச, சட்டென அவனது வாயில் கை வைத்துத் தடுத்தாள் சாயா.
ரோகித்திடம் எதுவும் பேச வேண்டாம் என்பது போல் தலையை அசைத்தவள் இந்திரஜித்தின் முன்னால் வந்து நின்றாள்.
"அண்ணா நான் உங்களுக்கு சத்தியம் பண்ணுறேன். நாங்க இங்கிருந்து தப்பி ஓட முயற்சி பண்ண மாட்டோம். அதே நேரம் இந்த பிரச்சனையெல்லாம் தீரும் வரைக்கும், நாங்க உங்களோட தான் இருப்போம். நாங்க இங்கிருந்து போய்டுவோமோன்னு நீங்க பயப்பட வேண்டாம். உங்களுடைய பயம் எங்களுக்கு புரியுது அண்ணா. அதே போல நீங்களும் எங்களை புரிஞ்சுக்கணும். எங்களுக்கு குடும்பம் இருக்கு. அவங்க எங்கள தேடுவாங்க. இந்த நேரம் நிச்சயமா போலீஸ் கம்ப்ளைன்ட் ஆகியிருக்கும். அவங்க கிட்ட நாங்க கண்டிப்பா பேசியே ஆகனும். குறைந்தபட்சம் நாங்க பத்திரமாய் இருக்கோம். உயிரோட தான் இருக்கோம். இதையாவது அவங்க தெரிஞ்சுக்கணும். நாங்க இந்த இடத்தைப் பற்றியோ உங்களைப் பற்றியோ இங்க இருக்கிற பிரச்சினைகள் பற்றியோ எங்க பேரண்ட்ஸ் கிட்ட பேச மாட்டோம். நாங்க அடிக்கடி எங்க பெத்தவங்க மேல கோச்சிட்டு, ஐந்து பேரும் எங்கேயாவது போய் விடுவோம். அதேபோல இப்பவும் ஊருக்கு போயிருக்குறதா சொல்லி சமாளிச்சுக்கறோம். பிளீஸ் முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க அண்ணா" என்று கெஞ்சலாக சாயா கேட்டதில் மொத்தமாக அவளிடம் தோற்றுப் போனான் இந்திரஜித். அவனால் தன் தங்கையின் கெஞ்சும் கண்களுக்கு முன்பாக தனது கோபத்தையும், பிடிவாதத்தையும் இழுத்துப் பிடிக்க முடியவில்லை.
"சரி, நீங்க பேசலாம்" என்று கூறியவன். தனது அலைபேசியை அவர்களுக்கு கொடுத்தான். அவனது அலைபேசி யானது விசேஷமாக வடிவமைக்கப்பட்டது. அதை யாராலும் எளிதில் ட்ரேஸ் செய்து விட முடியாது. ஒட்டு கேட்கவும் முடியாது. யாராலும் ஹேக் செய்யமுடியாத அளவிற்கு வலுவான சைபர் செக்யூரிட்டிகளை கொண்ட அலைபேசி அது. தகவல் தொடர்புகளை பாதுகாப்பதற்காக இந்திரஜித் தனக்காக தானே உருவாக்கியது தான் இந்த விசேஷமான அலைப்பேசி.
இந்திரஜித் இவ்வளவு சீக்கிரம் ஒத்துக் கொள்வான் என்று அவளும் நினைக்கவில்லை. அவன் அலைபேசியை தந்ததும் வேகமாக தனது வீட்டிற்கு அழைத்து பேசினாள் சாயா. பின் ஒவ்வொருத்தராக வீட்டிற்கு அழைத்துப் பேச ஜெரோமின் அப்பா மட்டும் அவனை வார்த்தையால் விளாசிவிட்டார்.
அனைவரது வீட்டிலும் இதில் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். ஆனால் ஜெரோமின் அப்பா மட்டும் மிகவும் கோபமாகி விட்டார். கண்களில் கண்ணீர் வடிய, உதடுகளை கோணி, பாவம் போல் அழுது கொண்டிருந்தான் ஜெரோம். காஷ்மீர் பார்டரில் இருந்து கொண்டு போனில் அவனது அப்பா காட்டு கத்து கத்திக்கொண்டிருந்தார். அவரது ஒவ்வொரு வார்த்தைகளும் பீரங்கி போல் முழங்கிக் கொண்டிருந்தது.
"ஜேரோம் உன்னுடைய மற்றும் உனது நண்பர்களுடைய நடவடிக்கை எனக்கு திருப்திகரமாக இல்லை. எல்லாவற்றிலும் ஒரு ஒழுக்கம் வேண்டும். உன்னுடைய இந்த ஒழுக்கமற்ற செயல்கள் எனக்கு கோபத்தை கொடுக்குது. வாழ்க்கையில் நீ முன்னேற வேண்டுமானால், அதற்கான தகுதி உனக்கு இருக்கணும். விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்குற நீ என்னைக்கு வாழ்க்கையில உனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்க போற? உனக்கு ராணுவத்தில் ஆர்வம் இல்லன்னு சொன்னதும் நான் ஏன் உன்னை கட்டாயப்படுத்தலன்னு தெரியுமா? உனக்கு எந்தத் துறையில் விருப்பமோ, அந்தத் துறையில் நீ சாதிக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். உன்னுடைய மகிழ்ச்சிக்கு என்னைக்கும் நான் குறுக்கே நிற்க நினைத்து இல்லை. ஆனால் உன்னோட ஒழுக்கமற்ற செயல்களுக்கு, பொறுப்பற்ற சேட்டைகளும் கண்டிப்பா நான் குறுக்கெ இருப்பேன். உன்னை ஒரு சிறந்த இந்திய குடிமகனா வளர்த்த வேண்டிய மிகப்பெரிய கடமை எனக்கு இருக்கு. இந்திய எல்லையிலேயே நான் வீரமரணம் அடைந்தாலும் இல்ல, இயற்கையாக நான் மரணம் அடைந்தாலும், அதற்கு முன்னால் எனது நாட்டுக்கும் என் குடும்பத்துக்கும் நான் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றனும். உனக்கே தெரியும் ஜெரோம் இந்தியாவுக்கு அடுத்தால எனக்கு நீ தான் முக்கியம்ன்னு. உன்னை ஒரு நல்ல குடிமகனாக வளர்க்காத குற்றவுணர்ச்சியை எனக்கு தந்துடாத ஜெரோம். நான் அழைப்பை துண்டிக்கிறேன்." என்று பக்கம் பக்கமாக தனது கணீர் குரலில் சென்டிமென்டாக டயலாக் பேசிக் கொண்டிருந்தார் ஜெரோமின் அப்பா. அவர்கள் வார்த்தைகளின் பொருள் வேண்டுமானால் செண்டிமன்டாக இருக்கலாம். ஆனால் அவரது சிம்ம தொனியில் சாதாரண வார்த்தைகள் கூட இதயத்தை ஆணியாய் துளைக்கும் வல்லமையை பெற்றிருந்தது.
தன் அப்பா அழைப்பை துண்டித்ததும் "ஊ.,.. ஊ..." என்று ஒப்பாரி வைக்க துவங்கி விட்டான் ஜெரோம்.
"மச்சான் என் அப்பாவுக்கு என்னால எந்த பெருமையையும் கொடுக்க முடியாதாடா? நான் ஒரு சுத்த உதவாக்கரை. என் அப்பா ஒரு மிலிட்ரி ஜெனரல். ஆனா என்னை பாரு! துப்பாக்கியை எப்படி புடிக்கனும்ன்னு கூட எனக்கு தெரியாது. நானெல்லாம் எதுக்கும் பிரயோஜனம் இல்லாதவன்டா." என்று தாழ்வு மனப்பான்மையோடு அழ தொடங்கினான் ஜெரோம். தன் தந்தை ஒரு பெருமைக்குரிய இரானுவ ஜெனரல். ஆனால் தானோ ஒரு பந்தாங்கோலி என்று தன்னை நினைத்து கழிவிரக்கம் கொண்டான் ஜெரோம்.
"ஏலேய் மச்சான் பாருடா இவன. மறுபடியும் அழ ஆரம்பிச்சிட்டான்" என்று சலித்துக் கொண்டான் சேண்டி.
"ம்ச், சேண்டி" தன் நண்பனை கடிந்து கொண்ட ரோகித் தன் நன்பன் ஜெரோமின் தோளை ஆறுதலாக பற்றிக்கொண்டான்.
டேய் ஜெரோம். உன் அப்பாவுக்கு கையாளத் தெரியாத துப்பாக்கிகளே கிடையாது. தினம் தினம் டாங்கிகள் போர் விமானங்கள்ன்னு சுத்திட்டு இருக்குற ஆளு அவரு. ராணுவத்தில் சேர்ந்து எதிரிகளுடன் நேருக்கு நேர் நின்று சண்டை போட்டு அவரோட தேசபக்தியை காண்பிக்கிறார். துப்பாக்கி பிடிக்க தெரியாம இருக்கிற உனக்கு மட்டும் தேசபக்தி இல்லன்னு நினைக்கிறாயா? இங்க பாருடா உனக்குள்ள ஓடுறது ஒரு மிலிட்டரி மேனோட இரத்தம். அது என்னைக்கும் சோடை போகாதுடா. உன்ன பத்தி உனக்கே தெரியும் தானே. சின்ன வயசுல நாங்க எல்லாரும் விளையாட்டு பொருட்கள் வைத்து விளையாடுவோம். நீ மட்டும் ஆபத்தான கெமிக்கல்ஸை வச்சி விளையாடுவ. நீ எந்த அளவுக்கு கெமிஸ்ட்ரியில் எக்ஸ்போர்ட்ன்னு எனக்கு தெரியும்டா. நீ இதுவரைக்கும் எத்தனை விதமான வெடிபொருளை கண்டுபிடித்திருக்க? இதெல்லாம் உன்னோட அப்பாவுக்கு நீ தான் சொல்லனும். அவருக்கும் உன்ன பத்தி தெரிய வேண்டாமா? நீ தான்டா உன்னோட ஆர்வம் என்னன்னு உன் அப்பாவுக்கு சொல்லணும். உன்னால உன் அப்பாவுக்கு பெருமை சேர்க்க முடியும்டா. உன்னை நம்பு." என்று ரோகித் தன் நன்பனுக்கு தைரியம் அளிக்க, அழுவதை நிறுத்தி விட்டு முகம் கழுவி வந்தான் ஜெரோம்.
"சாரிடா மச்சான். எப்போ பார்த்தாலும் அழுதுகிட்டே இருக்கேன். இதனால உங்களோட மூடு தான் ஸ்பாயில் ஆகுது." எது உண்மையான வருத்தத்துடன் ஜெரோம் சொல்ல, அவனை எட்டி ஒரு உதை விட்டான் ஜோயல்.
"சாரி சொல்லுற மூஞ்சியப் பாரு." என்று முனுமுனுத்தவாறே ஜோயல் இயற்கையை ரசிக்க சென்று விட,
ஊ.... ஊ.. என்று மறுபடியும் ஜெரோம் அழ துவங்கி விட்டான் ஜோயல்.
"பாரு சாயா, எல்லாரும் என்ன இஷ்ட்டத்துக்கு அடிக்குறாங்க." என்று என்று தன் தோழியிடம் குற்றப்பத்திரிக்கை வாசிக்கத் தொடங்கினான் ஜெரோம்.
இதையெல்லாம் பார்த்த இந்திரஜித், 'தனக்கு நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ள எவரேனும் உள்ளனரா' என்று யோசித்துப் பார்த்தான். யோசனையின் முடிவில் அவனது இதழ்கள் விரக்தியாய் வளைந்தன.
'நிரந்தரமில்லாத வாழ்க்கையில் உறவுகள் எதற்கு' என்று அவன் நினைத்ததின் பலனை அனுபவித்துக் கொண்டிருந்தான் இந்திரஜித். ஆனால் இனியும் இது தொடரப் போவதில்லை என்று நினைத்தவனாய் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேச துவங்கினான்.
"உங்களோட பேரன்ஸ்ட் இனி உங்கள தேட மாட்டாங்க. சோ நீங்க கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை .இனி என்னோட இருக்குற தலையும் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு நம்புறேன்." என்று தான் சொல்ல வந்ததை கூறியவன் அறையை விட்டு வெளியேற திரும்பினான்.
அறையின் வாசலை திறக்க கதவின் கைப்பிடியில் கை வைக்கும்போது,
"ஹலோ மிஸ்டர். கிட்னாப்பர்" என்ற சேண்டியின் குரல் இந்திரஜித்தை தடுத்து நிறுத்தியது.
இந்திரஜித் மெதுவாய் திரும்பி பார்க்க, ஐந்து பேரும் மார்பின் குறுக்கே கைகளை கட்டியவாறு, அவனை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
"இங்க பாருங்க மிஸ்டர். கிட்னாப்பர். நாங்க உங்களோட பங்களாவில் இருக்க சம்மதிக்குறோம். ஆனால் எங்களுக்கு சில கண்டிஷன் இருக்கு." என்று சேண்டி கூற, 'மேல சொல்லு' என்பது போல் தலையை அசைத்தான் இந்திரஜித்.
"இந்த பங்களாவோட சுற்றுச் சுவருக்குள், நாங்க எங்க வேண்டுமானாலும் போய்ட்டு வருவோம். நாங்க விருப்பபட்டத செய்வோம். பண்ணாத கூடாத குரங்கு சேட்டைகள் எல்லாத்தையும் பண்ணுவோம். ஆனால் நீங்க எதுவும் சொல்லக் கூடாது. நாங்க கேட்குற எல்லாத்தையும் வாங்கி தரனும். வீடியோ கேம், புக்ஸ் Etc. இதுக்கெல்லாம் நீங்க ஓகே சொன்னா மட்டும் தான் இங்க இருப்போம். இல்லைன்னா நீங்க தூங்குற நேரமா பார்த்து ஓடிப் போய்டுவோம்." என்று மிரட்டும் தொனியில் கூறினான் சேண்டி.
சேண்டியின் மிரட்டலில் அதியமாய் வாய் விட்டே சிரித்து விட்டான் இந்திரஜித்.
"நீங்க என்னோட தம்பிகள் உங்களுக்கு இல்லாத உரிமையா? இந்த வீட்டுல எனக்கு இருக்கிற அதே உரிமை உங்களுக்கும் இருக்கு." என்று அவர்கள் கேட்ட அனுமதிக்கும் ஒருபடி மேலாகச் சென்று உரிமையை வழங்கி விட்டுச் சென்றான் இந்திரஜித்.
இதையெல்லாம் கண்டு நன்பர்களுக்கு தான் மகிச்சியோ மகிழ்ச்சி. ஆனால் இதையெல்லாம் கண்டு கொண்டிருந்த மரண ராட்சசனோ, தான் இந்திரஜித்தை முழுமையாக ஆளப் போகும் நேரத்துக்காக கொலைவெறியுடன் காத்திருந்தான்.
மரணம் வரும்
அன்புடன்
எபின் ரைடர்.
YOU ARE READING
மரணம் வரும் நேரம் எது?
Actionமரணத்தோடு போராடி வென்ற மனிதனின் கதை இது. தன்னை ஆளும் மரணத்தை வென்று, அந்த மரணத்திற்கே ஒரு மரணத்தை கொடுத்து, தன் வாழ்க்கையை வாழத் துவங்குகிறான் நாயகன். மரணத்தை எதிர்த்து வென்ற இந்திரஜித்தின் ...