"ஜெரி அண்ணா, நம்ம வாழப் போற வாழ்க்கை ரொம்ப சின்னது. ஆறிலும் சாவு அறுபதிலும் சாவுன்னு சொல்லி கேள்விபட்டுருக்கீயா? அது ரொம்பவே உண்மை. நம்மோட மரணம் எப்போ வரப்போகுதுன்னு நமக்கு தெரியாது. ஆனா அது நம்ம தேடி வரும் வரைக்கும் நம்ம வாழ்க்கைய நம்ம ஜாலியா வாழ்ந்துடனும். இது தான் எனது கொள்கை." என்று தனது கொள்கையை நாலு பேருக்கு பரப்பும் வண்ணமாய் சத்தமாய் பேசிக் கொண்டிருந்தான் சேண்டி. அவன் பேசியது ஜெரியிடம் தான் என்றாலும், அங்கு லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த இந்திரஜித்தின் காதிலும் அது விழுந்தது.
"ஆறிலும் சாவு அறுபதிலும் சாவு. நம்ம சாவு எப்போ நம்ம தேடி வரும்ன்னு நமக்கு தெரியாது." என்ற சேண்டியின் வார்த்தைகள் இந்திரஜித்தின் ஆள்மனதிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தன.
"நான் உன்னோட மரணம். உன்ன தேடி வந்துட்டு இருக்கேன். உன்னோட சேர்த்து உன் உறவுகளையும் அழிக்கப் போறேன்." என்று ஜித்துவின் ஆழ்மனதினுள் ஒரு சத்தம் கேட்க, கொஞ்சம் கொஞ்சமாய் அவனது விழிகள் சிவக்க துவங்கியது. லேப்டாப்பின் விசைகளை தட்டிக் கொண்டிருந்த அவனது விரல்கள் நடுக்கம் கண்டது.
அத்தனை நாளும் அவனுக்குள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்த மரண ராட்ச்சன் விழித்துக் கொண்டான். இந்திரஜித்தின் முக மாற்றத்தை யாரும் கவனிக்கவில்லை.
கொஞ்சமாய் மனதளவில் மிருகமாய் மாறிக் கொண்டிருந்தான் இந்திரஜித். தன் முன்னால் அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தவர்களை கண்ட இந்திரஜித்துக்கு அவர்களை வேட்டையாட வேண்டுமென்ற வெறி எழுந்தது. கையில் இருந்த லேப்டாப்பை சுவரில் வீசியடித்தவன். சோபாவிலிருந்து மெதுவாய் எழுந்து நின்றான்.
லேப்டாப் கீழே உடைந்து சிதற, அந்த சத்தத்தால் திடுக்கிட அனைவரும் இந்திரஜித்தை பார்க்க, அவனோ குரூரம் கொப்பளிக்கும் விழிகளோடு நின்றிருந்தான். விழிகளில் கொலைவெறியை தேக்கியவனாய் நின்றிருந்தவன் இந்திரஜித் அல்ல. அவனுக்குள் வாழும் ராட்ச்சசன்.
"சிரிக்குறீங்களா? நான் இருக்கும் வரைக்கும் எவனும் சந்தோஷமா இருக்க கூடாது." என்று வெறி பிடித்தவன் போல் கத்தினான் இந்திரஜித்.
இந்திரஜித்தின் இந்த திடீர் ஆக்ரோஷத்தால் பீதியடைந்தனர் அனைவரும். சாயா பயத்தில் சிலையாய் நின்றிருந்தாள்.
தன் அன்பான அண்ணனின் இந்த அசுர அவதாரத்தை கண்டு முகம் வெளிறிப்போயிருந்தாள்.
"அண்ணா" என அவளுக்கே தெரியாமல் அவள் உதடுகள் முனுமுனுத்தன. அவளது கண்கள் கண்ட காட்சியை அவளால் நம்ப முடியவில்லை.
"இல்ல... இல்ல. இது என்னோட ஜித்து அண்ணா இல்ல." என்று தனக்கு தானே கூறிக் கொண்டவள், ஒரு அடி முன்னால் எடுத்து வைக்க சட்டென அவளை பின்னால் இழுத்தான் சேண்டி.
"நோ சாயா. இது ஜித்து அண்ணா இல்ல." என்ற சேண்டியின் விழிகளும் பீதியால் நிறைந்திருந்தது.
ஜெரியோ நடப்பது எதையும் அறிந்துகொள்ள முடியாதவனாக திகைத்து நின்றான். இந்திரஜித்தை இந்த அளவுக்கு கோபமாக இருந்து அவன் பார்த்ததேயில்லை. பிஸ்னஸில் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படும் போது கூட, அவன் அமைதியாய் தான் இருப்பான் ஒருநாளும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டது இல்லை.
"பாஸ் பாஸ், ப்ளீஸ் காம் டவுன் பாஸ்." என்று இந்திரஜித்தை நெருங்கிய ஜெரியை இழுத்து தரையில் போட்டான் சேண்டி.
"ஜெரி அண்ணா. இது இந்திரஜித் இல்ல. இவன் ஒரு ராட்சசன்." என்று தீவிரமான குரலில் சேண்டி கூற அவனை புரியாமல் பார்த்தான் ஜெரி.
நேரத்தை கடத்தாமல் வேக வேகமாக செயல்பட்டான் சேண்டி. முதல் வேலையாக தன் நன்பர்களுக்கு தகவல் சொல்லி அனுப்பினான். தகவலைப் பெற்ற ரோகித்தும் ஜோயலும் தாங்கள் இருந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டனர். நன்பர்களுக்கு தகவல் அனுப்பிய சேண்டி நிமிர்ந்து பார்க்க, அவனது கண்கள் கண்ட காட்சியில்,
"நோ" என்று கத்தியவாறே சாயாவை தள்ளி விட்டான் சேண்டி.
சாயவை தாக்க வந்த இந்திரஜித்தின் இறுகிய கை முஷ்டி சேண்டியின் தாடையை பதம் பார்த்து விட்டது. வாயிலிருந்து இரத்தம் கொட்ட வலியில் துடித்து விட்டான் சேண்டி.
"டேய் என்னை தடுக்க பார்க்குறீயா? இடியட். யாராலும் என்ன தடுக்க முடியாது." என்றவனாய் கீழே கிடந்த சாயாவை நெருங்க தற்போது அவனை தடுப்பது போல் குறுக்க வந்து நின்றான் ஜெரி.
"வேணாம் பாஸ். உங்களுக்கு என்ன ஆச்சின்னு எனக்கு தெரியல. ஆனா நீங்க இப்போ சுயநினைவுல இல்லன்னு மட்டும் எனக்கு தெரியுது. வேணாம் பாஸ். அப்புறம் பின்னால ரொம்ப வருத்தப்படுவீங்க." என்ற ஜெரி இந்திரஜித்தோடு சமரசம் பேசிக் கொண்டிருக்க. வெறி கொண்ட வேங்கையாய் உறும தொடங்கினான் இந்திரஜித்.
"என் வழியில குறுக்க நிற்குறீயா? அப்படின்னா நீ நிச்சயம் சாகனும். அதுவும் இப்போதே!" என்று பல்லை கடித்துக் கொண்டு உறுமியவன் ஜெரியை ஓங்கி உதைத்தான்.
"ஆ.....ஆ....ஆ" என்று வலியில் ஓலமிட்ட ஜெரி தரையில் சுருண்டு கிடக்க, அவனது கதறலில் திருப்தியாகதவனாய் வெறித்தனமாய் ஜெரியை உதைத்து தள்ளினான் இந்திரஜித்.
உயிர் போகும் வலியில் கதறினான் ஜெரி. உண்மையில் தன் முன் நிற்பது தன் பாஸ் இந்திரஜித் அல்ல என்பது ஜெரிக்கு நன்றாகவே புரிந்து போனது.
"பாஸ்... பாஸ் வலிக்குது பாஸ். வேணாம் பாஸ்." தன் ஒற்றை கை நீட்டி தடுத்தான் ஜெரி. ஆனால் அதையெல்லாம் கண்டு கருணை கொள்ள அவன் இந்திரஜித் இல்லையே. இந்திரஜித்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்த மரண ராட்ச்சன் அல்லவா அவன்.
"அண்ணா ப்ளீஸ் போதும் விட்டுடுங்க. ஜெரி அண்ணா பாவம்" என்று அழுதவாறே கெஞ்சினாள் சாயா. அவளது அழுகுரலை கேட்டு திரும்பி இந்திரஜித்தின் பார்வையோ இரை தேடி அலையும் ஓநாயின் பார்வையைப் போல் மாறியிருந்தது.
"நீ.... நீ தான் என்னோட முதல் இலக்கு. என் கிட்ட இருந்து இந்திரஜித்தை காப்பாற்ற முயற்சி பண்ணுற உன்னை, இனியும் நான் உயிரோட விடப்போறது இல்ல. நீ சாகப் போற. உன்னோட மரணம் உன் முன்னால இருக்கு. உன்ன அது தேடி வந்திருக்கு. நீ சாகப் போற." என்று இடியென சிரித்தான் இந்திரஜித்.
அவனது சிரிப்பொலியில் அந்த பங்களாவையே ஒரு வித பயம் ஆட்கொண்டது.
"அண்ணா.... அண்ணா......" என்று சாயா கேவி அழ, அவையெதுவும் இந்திரஜித்தை பாதிக்கவில்லை. குருதியின் நிறத்தை தனதாக்கிக் கொண்ட அவனது விழிகளோ, சாவை துண்டு துண்டாய் வெட்ட அளவெடுத்துக் கொண்டிருந்தது.
திடிரென தன் தலையை பிடித்துக் கத்தியவன், சாயாவை நோக்கி பாய, குறுக்கே வந்து நின்றான் ரோகித்.
"நான் இருக்குற வரை உன்னால சாயா பக்கம் கூட நெருங்க முடியாது." என்று பல்லை நறநறத்தான் ரோகித். அவனுக்கு தெரியும் தன் முன்னால் நிற்பது யார் என்று.
"அப்டின்னா உன்ன முதல்ல கொன்னுடுறேன். என்னை எதிர்க்குற எவனும் உயிரோட இருக்க கூடாது." என்று தன் அடித்தொண்டையில் உறுமிய இந்திரஜித் ரோகித்தை நோக்கி பாய்ந்தான்.
தற்காப்பு கலைகள் அனைத்தையும் கரைத்து குடித்திருந்த ரோகித்தால் இந்திரஜித்துடன் சரிக்கு சமமாக நின்று சண்டையிட முடிந்தது.
ரோகித்தும் இந்திரஜித்தும் ஆக்ரோஷமாக சண்டையிட்டனர். இந்திரஜித்தின் தாக்குதல்களிலிருந்து தன்னை காத்துக்கொள்ள மட்டுமே முயற்சித்தான். ஆனால் இந்திரஜித்தோ ஒரே அடியில் ரோகித்தை கொன்றும் விடும் வெறியோடு, மிகுந்த ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
அந்நேரம் அங்கு ஓடி வந்த ஜோயலோ, பார்த்த ஒரு நொடியிலேயே அங்கு நடக்கும் கலவரங்களை கண்டுகொண்டான். இந்திரஜித்தும் ரோகித்தும் வெறித்தனமாய் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சாயா ஒரு பக்கமாய் அழுது கொண்டிருக்க, தெம்பில்லாம் தரையில் கிடந்த ஜெரியை தேற்றிக் கொண்டிருந்தான். மீண்டும் ரோகித்தைப் பார்த்த ஜோயல் கண்டதோ, இந்திரஜித்தின் தாக்குதல்களால் நிலைகுலைந்து போன ரோகித்தை தான்.
"மச்சான்" என்று கத்தியவாறே ஓடியவன் இந்திரஜித்தை பின்னாலிருந்து இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அதை பயன்படுத்திக் கொண்ட ஜோயல் இந்திரஜித்தை தரையில் தள்ள முயற்சி செய்ய, அவனை தள்ளி விட்டு ஓடி வந்தாள் சாயா.
"அண்ணா ப்ளீஸ் ஸ்டாப் இட்." என்று இந்திரஜித்தை அணைத்துக் கொண்டாள் சாயா. தன் தங்கையின் ஸ்பரிசத்தை உணர்ந்த இந்திரஜித்தின் இளகிய மனமோ வெளிவர துடித்தது. ஆனால் பலவீனமான இந்திரஜித்தின் மனமோ அந்த மரண ராட்ச்சனின் பிடியில் சிக்கியிருந்தது.
இந்திரஜித்தின் மனம் தங்கையின் பால் உருகினாலும், அவனை ஒரு பயம் சூழத்தொடங்கியது. அந்த ராட்ச்சன் சாயாவை எதுவும் செய்து விடுவானோ? என்ற அச்சம் அவனை ஆட்கொள்ள தொடங்கியது. தங்கையின் மீது கொண்ட பாசமும், ராட்ச்சனின் மீதான இந்திரஜித்தின் பயமும் ஒன்றோடொன்று மோதிக் கொள்ள துவங்கியது. இந்திரஜித்தின் மூளைக்குள் இரு வேறு மனிதர்கள் போராட துவங்கினர். ஒரு பக்கம் தங்கையின் மீதான பாசத்தில் இந்திரஜித். மற்றொரு பக்கம் அவளை கொல்ல வேண்டும் என்ற வெறியில் அந்த மரண ராட்ச்சன். இருவரின் போராட்டத்தில் ஜெயிக்கப் போவது யாரோ?
உள்ளுக்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது இந்துரஜித்துக்கு. ஒரு பக்கம் அந்த இராட்ச்சனை குறித்த பயமும், மறுபக்கம் தங்கையின் மீதான பாசமும் அவனை ஆட்கொள்ளும் முயற்சியில் இருந்தன.
"இல்ல..... இல்ல என் பேபிக்கு எதுவும் ஆக விடமாட்டேன். நீ போடா உன்னை விட்டு." என்று கர்ஜித்தான் இந்திரஜித். அந்த ராட்ச்சனோ ஜித்துவின் ஆள்மனதை தன் ஆளுகைக்குள் வைத்திருந்தான்.
"அவளை யாராலயும் காப்பாத்த முடியாதுடா. இப்பவே உன் கண்ணு முன்னால நான் அவளை கொலை பண்ண போறேன்." என்று இரத்த வெறி கொண்டவனாய் உறுமினான் அந்த ராட்ச்சன். ஒரு நொடி இந்திரஜித்தாகவும் மறுநொடி ராட்ச்சனாகவும் மாறிக் கொண்டே இருந்தான் அவன். இந்திரஜித்தின் இந்த நிலை அனைவரது கண்களையும் ஈரமாக்கியது.
ஜோயலும் ரோகித்தும் இந்திரஜித்தை அசைய விடாமல் பிடித்திருக்க, அவனை கட்டியணைத்தாவாறே அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் சாயா.
"அண்ணா.... அண்ணா நான் தான் சாயா. உன் பேபி. ப்ளீஸ் ஜித்து அண்ணா. என்ன பாருங்க." என்று இந்திரஜித்தின் கன்னத்தை தட்டினாள் சாயா. அவளது அழுகுரலுன், அண்ணா என்ற பாசமிகு அழைப்பும் இந்திரஜித்திற்கு பலத்தை கொடுத்தது.
"சாயா பேபி. இங்கிருந்து போய்டுமா. அவன்...அவன் உன்ன கொன்னுடுவான்." என்று ஈனஸ்வரத்தில் கூறினான் இந்திரஜித். ஆனால் அடுத்த நொடியே இந்திரஜித்தின் மனதை முழுமையாக ஆட்கொண்டான் அந்த ராட்ச்சன்.
"ஆமா உன்ன கொன்னுடுவேன். நீ உயிரோட இருக்குற வரைக்கும், என்னால இந்திரஜித்தை முழுமையா கட்டுப்படுத்த முடியாது. அதனால நீ சாகனும்." என்று கண்களில் கொலைவெறியோடு கத்தினான் மரண ராட்ச்சன்.
"இல்ல.... இல்ல. நீ பயப்படாத சாயா. உனக்கு எதுவும் ஆக விட மாட்டான் இந்த இந்திரஜித்." என்று உறுதியாக கூறினான் இந்திரஜித். இந்திரஜித்தின் கண்களில் தற்போது கொலைவெறி இல்லை, இரத்த தாகம் இல்லை. தன் தங்கை காக்க துடிக்கும் தூய அன்பு மட்டுமே அசுர அவதாரம் எடுத்திருந்தது. இந்திரஜித்தின் விழிகள் தற்போது சேண்டியின் பக்கமாக திரும்பியது.
"சேண்டி ஒரு வேளை உங்களால என்ன தடுக்க முடியல்லன்னா. ஒரு நொடி கூட யோசிக்காம என்னை கொன்னுடு. நான் சொன்னத நீ மறுக்க கூடாது சேண்டி." என்ற இந்திரஜித்தின் விழிகள் லேசாக மேல் நோக்கி செருக துவங்கி விட, அடுத்த நொடியே அவனை முழுவதுமாய் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான் அந்த மரண ராட்ச்சன்.
சேண்டியோ சிலையாய் நின்றிருந்தான். தங்களின் பாதுகாப்புக்காக இந்திரஜித் தன் உயிரையும் விட தயாராக இருப்பான் என்பதை அறிந்தவனுக்கு வேறு எதையும் சிந்திக்கும் மனமே இல்லை.
"நீங்க கவலைப்படாதீங்க அண்ணா. நாங்க எப்படியாச்சும் உங்கள குணமாக்குவோம்." என்று சேண்டி தன் மனதிற்குள் சொல்லி கொள்ள,
"ஆ.......ஆ......ஆ" என்று கர்ஜித்தவாறே ஜோயலையும் ரோகித்தையும் தூக்கி வீசினான் இந்திரஜித். சாயாவையும் கீழே தள்ளி விட்டிருந்தான் அவன்.
"அண்ணா" என்று கேவியவாறே இந்திரஜித்தின் அருகில் செல்ல போன சாயாவை இழுத்து பிடித்துக் கொண்டான் சேண்டி.
"நோ சாயா. முட்டாள்தனமா எதுவும் பண்ணிடாத. அண்ணா இப்போ கொஞ்சமும் சுயநினைவுல இல்லை." என்று சேண்டி தீவிரமான குரலில் கூற,
"ஏய் உன்னோட மரணம் நான். உன்ன முழுவதுமா அழிக்க போறேன். இனி இந்திரஜித்தை என்கிட்ட இருந்து யாராலயும் காப்பாற்ற முடியாது." என்று உறுமியவாறே துஷ்ட்டப் பார்வையோடு சாயாவை நெருங்கியிருந்தான் அந்த ராட்ச்சன்.
சாயா தான் அந்த ராட்ச்சனின் வன்மம் நிறைந்த பார்வையில் வெலவெலத்துப் போனாள். கொஞ்சம் முன் வரை இந்திரஜித்தை எப்படியேனும் மீட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தவளுக்கு, இப்போது இந்திரஜித்தை நெருங்கும் தைரியம் துளியும் இல்லை. அவளது உடல் குளிர் காய்ச்சல் கண்டது போல் நடுக்கம் கண்டது. அதற்கு காரணம் இந்திரஜித் சொன்ன வார்த்தைகள்.
'சேண்டி ஒரு வேளை உங்களால என்ன தடுக்க முடியல்லன்னா. ஒரு நொடி கூட யோசிக்காம என்னை கொன்னுடு.'
அவளையும் அறியாமல் சேண்டியின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் சாயா.
"சேண்டி எனக்கு பயமா இருக்குடா. நீ அண்ணாவை எதுவும் செஞ்சிடாத. ப்ளீஸ். ஜித்து அண்ணாவை எதுவும் செஞ்சிடாதடா." என்று தன் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்ட சாயாவை அணைத்துக் கொண்டான் சேண்டி.
"இல்ல சாயா என்னால அண்ணாவை எதுவும் செய்ய முடியாது. சேம் டைம் உன்னையும் நான் காப்பாத்துவேன்." என்ற சேண்டி தன் தோழி சாயாவுக்கு அரணாய் அவளை மறைத்தாற் போல் அவளை அணைத்துக் கொண்டான்.
சாயாவை மறைத்தாற்போல் அமர்ந்திருக்கும் சேண்டியை கண்ட அந்த ராட்ச்சனின் நாடி நரம்புகள் முறுக்கேறியது.
"யூ ப்ளடி. என் வழியை விட்டு விலகி போ. நான் அவளை கொல்லனும்." என்று பற்களை கடித்துக் கொண்டு உறுமினான் அந்த மரண ராட்ச்சன்.
"என்னால முடியாது. நீ சாயாவை காயப்படுத்துறத என்னால அனுமதிக்க முடியாது." என்று கூறிய சேண்டியைப் பார்த்து வக்கிரமாய் சிரித்தான் அந்த ராட்ச்சன்.
"எமோஷனல் ஃபூல். நாளைக்கோ நாளை மறு நாளோ நீ சாகப்போற. ஆனா நீ உன்ன காப்பாத்திக்காம ஏன் அடுத்தவன காப்பாற்ற முயற்சி பண்ணுற." என்று கேட்ட ராட்ச்சனின் கை முஷ்ட்டிகள் இறுகியது. அவனது குரலில் கொப்பளித்த குரோதம் அனைவரையும் அச்சுருத்த உயிர் வலியில் கிடந்த ஜெரி ஊர்ந்து வந்து சேண்டியை மறைத்தவாறு நின்றான்.
"பாஸ் வேணாம். பாஸ் அது உங்க தம்பி பாஸ்." என்று காலில் விழாத குறையாக கெஞ்சினான் ஜெரி. அந்த ராட்ச்சனின் குரூரப் பார்வையில் ஜெரியின் தைரியம் எல்லாம் ஒரு நொடியில் கரைந்து போனது. ஆனாலும் அவன் பின்வாங்க தயாராக இல்லை. உயிரே போனாலும் சாயாவை காப்பாற்றுவேன் என்ற உறுதியோடு தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டான் ஜெரி.
"எனக்கு உறவுகள்ன்னு யாரும் இல்லை. இந்த பணமும், செல்வாக்கும் உறவுகளும் நான் செத்த பின்னர் என்னோட வருமா? வரதுல்ல. நான் செத்த பின்னர் என்னோட வராத மதிப்பில்லாத உறவுகள் எதுவும் எனக்கு வேணாம். நீங்களும் எனக்கு வேணாம். நான் உங்களோட மரணம். என்னை நினைச்சி நீங்க பயந்து பயந்து வாழனும். ஆனா நீங்க ஏன் என்னைப் பார்த்து பயப்படல. என்னை பார்த்து பயப்படாத எவரையும் நான் உயிரோட விட மாட்டேன். உங்களையும் உயிரோட விட்டு வைக்க மாட்டேன். என்ன எதிர்த்து நின்னது மட்டும் இல்லாமல், இந்திரஜித்தை என்கிட்ட இருந்து காப்பாற்ற நினைச்சி மிகப் பெரிய தப்பு பண்ணிட்டீங்க. இதுக்கு என்ன தண்டனை தெரியுமா? மரணம்.... மரணம். ஆ........ஆ.....ஆ... நீங்க எல்லாரும் சாவனும்." என்று வெறியில் கத்தியவன் ஒரு அடி முன்னால் எடுத்து வைக்க, யாரும் எதிர்பாராத நேரம், இந்திரஜித்தின் பின்கழுத்தில் சர்க் என்று இறங்கியது ஒரு ஊசி.
சாயாவை வேட்டையாட கொலைவெறியோடு முன்னால் சென்றவன், அப்படியே மயங்கி சரிந்தான். தூரத்தில் கையில் இன்ஜெக்ஷன் லான்ஜரோடு நின்றிருந்தான் ஜெரோம்.
"நல்ல வேளை சரியான நேரத்துல நான் வந்துட்டேன்." என்று தனக்குத்தானே கூறியவனாய், நெற்றியில் வழிந்த வியர்வை துளிகளை துடைத்து கொண்டான் ஜெரோம்.
அனைவருக்கும் இப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.
"உஃப், ஒரு வழியா தப்பிச்சோம் பிழைச்சோம்டா." என்று தன் நெஞ்சில் கை வைத்து தன் ஆசுவாசப்படுத்தியவாறே வலித்த இடுப்பை ஒரு கையால் பற்றியவாறு எழுந்து வந்தான் ஜோயல். தன் விழுந்து கிடந்த இடத்தில் இருந்து ஓடிவந்த ரோகித், நன்பனின் கைக்குள் தஞ்சமாகியிருந்த தன் காதலி சாயாவை இழுத்து அணைத்துக் கொண்டான். நடந்த கலவரங்களால் அவனுக்கு மூச்சு வாங்கியது. அவன் இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை.
"பேபி உனக்கு ஒன்னும் இல்லடி." என்று அழுது கொண்டிருந்த சாயாவை ஆறுதல்படுத்தியவனாய் அவளது நெற்றியில் முத்தமிட்டான் ரோகித்.
"ரோகித்.....ரோகித் என்னால முடியலடா. அண்ணாவ இந்த நிலையில பார்க்குற தெம்பு எனக்கு இல்லை." என்று தேம்பி தேம்பி அழுத சாயாவை தன் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான் ரோகித். அவனது கண்களிலும் கண்ணீர் துளிர்த்திருந்தது. பழகியது சில மாதங்களேயாயினும் அவர்களது உறவில் மலையளவாய் நேசம் துளிர்த்திருந்தது. தன் அண்ணனின் நிலையை காண சகியாமல் சாயா கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருக்க, அவளது நன்பர்களோ இரத்தில் இரத்த கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர்.
எழ கூட சக்தி இல்லாமல் தரையில் கிடந்த ஜெரியை தூக்கிய ஜோயல், அவனை சோபாவில் படுக்க வைத்து தண்ணீர் குடிக்க செய்தான். ஜெரோம் மட்டும் மயங்கி கிடந்த இந்திரஜித்தை நோக்கி சென்றான். இந்திரஜித்தின் இமைகளை விலக்கி கண்மணியை பார்த்தவன், அதைக் கண்டு திருப்தியுற்றவனாய் தன் நன்பர்களின் பக்கமாய் திரும்பினான்.
"காய்ஸ். அண்ணாவுக்கு நான் கொடுத்துருக்குற மயக்க மருந்து வெறும் மூனு மணி நேரத்துக்கு தான் தாக்கு பிடிக்கும். அதுக்கு அப்புறம் அவர் கண் விழிச்சிடுவாரு." என்று கூறினான் ஜெரோம். அவன் குரலில் அடுத்து எதாவது செய்ய வேண்டும் என்ற பதட்டம் நிறைந்திருந்தது.
சேண்டியும் ஜோயலும் ரோகித்தை திரும்பி பார்க்க, அவனும் சாயாவை விலக்கி அமர்த்தி விட்டு எழுந்து நின்றான்.
"எனக்கு வலது கால்" என்று ரோகித் சொல்ல,
"எனக்கு இடது கால்" என்று கூறினான் ஜோயல்.
"சரி நான் ஒரு கையை பிடிச்சிக்குறேன்." என்றவனாய் தன் சட்டையின் கையை மடக்கி விட்டான் சேண்டி. தற்போது அனைவரது பார்வையும் வெட்டியாய் நின்றிருந்த ஜெரோமை நோக்கி திரும்பியது.
"சரி... சரி மிச்சமா இருக்குற கையை நான் புடிச்சிக்குறேன்." என்று ஜெரோம் கூறியதும், நான்கு பேரும் இந்திரஜித்தை தூக்கிக் கொண்டு அவனது அறைக்கு சென்றனர்.
மருத்துவரை வரவழைத்து ஜெரிக்கு சிகிச்சையளிக்க வைத்தாள் சாயா. ஒரு மணி நேரம் கழியவே ஜெரியை ஒரு அறையில் ஓய்வெடுக்க வைத்து விட்டு, நேராக இந்திரஜித்தின் அறைக்கு சென்றவளுக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.
அங்கே இந்திரஜித்தை நெளிய கூட முடியாத அளவிற்கு படுக்கையில் இறுக்கமாய் கட்டி வைத்திருந்தனர் நால்வரும். நால்வரின் முகத்திலும் சிந்தனை ரேகைகள் படர்ந்திருந்தன. ஆனால் அது எதையும் சாயா கவனிக்கவில்லை. இந்திரஜித்தை கட்டிலோடு கட்டிவைத்திருப்பதை கண்டதுமே கண் மண் தெரியாத அளவுக்கு கோபம் வந்து விட்டது அவளுக்கு.
"டேய் எருமைங்களா, எதுக்குடா அண்ணாவ இப்படி கட்டி வச்சிருக்கீங்க. காட்டு மாடுங்களா அறிவிருக்காடா உங்களுக்கு." என்று காச்மூச்சென்று கத்தியவளின் சத்தத்தால், தன் ஒரு விரலால் காதை குடைந்தான் சேண்டி.
"ஏய் லூசு. வாய மூடுடி. சும்மா என்ன ஏதுன்னு கேட்காம கத்துவீயா." என்று ரோகித் சற்று எரிச்சலாக கூற, அவனைப் பார்த்து தன் உதட்டை சுளித்துக் கொண்டாள் சாயா.
"க்கும் இந்த வெட்டி வீராப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை." என்று முனுமுனுத்தவனாய் சாயாவின் அருகில் வந்தான் ரோகித்.
"இங்க பாரு சாயா. அண்ணா கண் விழிக்கும் போது என்ன மனநிலையில இருப்பாங்கன்னு யாருக்குடி தெரியும். அதான் இந்த ஏற்பாடு. மற்றபடி வேறெதுவும் இல்லை. ரொம்ப யோசிக்காத." என்று ரோகித் சொல்ல இந்திரஜித்தை நோக்கி தன் பார்வையை திருப்பினாள் சாயா. அங்கே வேரோடு பிடுங்கி எரியப்பட்ட மரமாய் படுத்து கிடந்தான். அவன் உதடுகள் லேசாய் அசைந்து கொண்டிருக்க. அவன் ஆழ்மனமோ அவனது பதின்ம வயதை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.
மரணம் வரும்.
அன்புடன்
எபின் ரைடர்
ESTÁS LEYENDO
மரணம் வரும் நேரம் எது?
Acciónமரணத்தோடு போராடி வென்ற மனிதனின் கதை இது. தன்னை ஆளும் மரணத்தை வென்று, அந்த மரணத்திற்கே ஒரு மரணத்தை கொடுத்து, தன் வாழ்க்கையை வாழத் துவங்குகிறான் நாயகன். மரணத்தை எதிர்த்து வென்ற இந்திரஜித்தின் ...