கண்ணால் பேசும் பெண்ணே - 2

404 56 55
                                    

"இந்த மாதிரி ஆட்களிடம் இனிமேல் என்னை போன்ற ஆட்களை தயவுசெய்து அறிமுகப்படுத்தாதீர்கள். திறமையிருந்தால் மட்டும் போதாது... மற்றவர்களை மதித்து பேச தெரிந்திருக்க வேண்டும்!" என்றான் அந்த பெண்ணிடம் கடுப்புடன்.

"நோ சார்... யூ மிஸ்டேக்கன்!" என்றாள் அவள் வேகமாக.

"என்ன மிஸ்டேக்கன்... பாராட்டுபவனிடம் பதிலுக்கு ஒரு நன்றி கூட சொல்லத் தெரியாதவளிடம் திறமை இருந்து என்ன பயன்?" என்றான் கோபமாக.

"இல்லை... நீங்கள் நினைப்பது போல் இல்லை, அந்த பெண் மிகவும் நல்லவர். அவரால் வாய் பேச முடியாது... ஊமை!" என்றாள் அமைதியான குரலில்.

அவளின் பதிலில் அதிர்ந்தவன், அவசரமாக வாயிலை திரும்பி பார்த்தான். பிரக்யா ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தாள்.

தன் தவறை உணர்ந்த அபி, அவளிடம் மன்னிப்பு வேண்ட வேகமாக வாசலை நோக்கி ஓடினான். அதற்குள் அவள் பறந்து விட்டாள், ப்ச்... என்று சலித்தபடி நின்றான்.

அவனுக்கருகில் மற்றொரு குரலும் உச்சு கொட்டியது. அவன் திரும்பி பார்க்க, அங்கே தியாகு நின்று கொண்டிருந்தான்.

"ச்சே... பாப்பாவும் உள்ளே இருந்திருப்பாள் போலிருக்கிறதே... அதற்குள் போன் வந்து கெடுத்து விட்டது. அவள் கிளம்பி விட்டாள்!" என்றான் ரோட்டை எட்டி பார்த்தபடி.

"எந்த பாப்பா?" என்றான் அபி ஒரு மாதிரி குரலில்.

"அது தான் என் தங்கை சொல்லி இருக்கின்றேனே... அவள் பெயின்டிங் கூட உள்ளே இருக்கின்றது!" என்றான் விளக்கமாக.

"அவள் பெயர் என்ன?" என்றான் பல்லை கடித்தபடி.

"பிரக்யா!" என்று அவன் கூறி முடித்தது தான் தாமதம், அபியிடமிருந்து நங்கு நங்கென்று நான்கைந்து கொட்டுக்கள் வாங்கினான் தியாகு.

"ஏன்டா கொட்டுகிறாய்?" என்றான் பாவமாக தலையை தடவியபடி.

"கொட்டுவதா... உன்னை கொலையே செய்து விடுவேன் நான். பாப்பாவாம் பாப்பா... அவளுக்கு பெயரில்லை, எப்பொழுது பார் பாப்பா பாப்பா என்று சொல்லி சொல்லியே பதினைந்து வருடமாக அவள் பெயரே என்னவென்று தெரியாமல் செய்து விட்டான் எனக்கு!" என்றான் வெறியோடு அவனை முறைத்தபடி.

சிறுகதைகள் தொகுப்புWhere stories live. Discover now