அபியின் மெல்லிய விசில் சத்தம் பிரக்யாவை மீட்க அவனை லேசாக முறைத்தவள், அவன் தோளுக்கு மீறி விழிகளால் வீட்டின் உள்ளே தன் சொந்தங்களை தேடினாள்.
'இவன் எப்படி இங்கே? வீட்டில் யாரும் இருப்பது போல் தெரியவில்லையே...' என்று யோசனையுடன் நின்றாள்.
அபியோ நிதானமாக அவளின் முக அழகை அணுஅணுவாய் ரசித்து கொண்டிருந்தான்.
'என்ன இவன் நந்தி மாதிரி அசையாமல் வாசலில் குறுக்கே நிற்கின்றான்? ப்ச்... இந்த பெரியம்மா, அண்ணாவெல்லாம் எங்கே?' என்று சலித்தவள், தன் மொபைலை எடுத்து தியாகுவிற்கு ரிங் செய்தாள்.
வீட்டின் உள்ளே இருந்து ரிங்டோன் கேட்கவும், 'இந்த அண்ணா உள்ளே தான் இருக்கின்றானா? இந்த சிடுமூஞ்சியை வாசலில் நிற்க வைத்து விட்டு, இவன் உள்ளே என்ன செய்கிறான்?' என்று உள்ளம் கடுகடுத்தாள்.
பிரக்யாவின் முகத்தில் மாறி மாறி தோன்றும் பாவனைகளை ஆசையுடன் பருகியபடி, அபி சிலையாக நின்றான்.
'இந்த லூசு ஏன் இப்படி என்னையே பே என்று பார்த்தபடி இளித்துக் கொண்டு நிற்கிறது? ஒருவேளை அம்னீஷியாவாக இருக்குமோ... பழசையெல்லாம் மறந்து விட்டானா? ச்சை... எவ்வளவு நேரம் தான் இப்படி வாசலிலேயே அசிங்கமாக நின்று கொண்டிருப்பது? இவன் நிற்கின்ற அழகை பார்த்தால் இப்பொழுதைக்கு வழி விடுபவன் போல் தெரியவில்லை, பேசாமல் திரும்ப வீட்டிற்கு போய் விடலாம்!' என முடிவு செய்து திரும்பினாள்.
அப்பொழுது தான் சுய உணர்வுக்கு திரும்பியவன் வேகமாக அவள் கை பற்றி தடுத்தான், "ஏய்... தியாகு உள்ளே தான் குளித்து கொண்டு இருக்கின்றான் வா!" என்று உரிமையுடன் அழைத்துச் சென்றான்.
அவன் செயலில் திடுக்கிட்ட பிரக்யா, 'ஐயோ... இவன் என்ன இப்படி சட்டென்று என் கையை பிடித்து விட்டான்?' என்று அதிர்ந்தாள்.
"ம்... உட்கார்!" என்று சோபாவிடம் சென்றவனின் கரத்திலிருந்து வேகமாக தன் கையை உருவிக் கொண்டவள், அவனை உறுத்து விழித்தாள்.
BINABASA MO ANG
சிறுகதைகள் தொகுப்பு
Randomஎன் சிறுகதைகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் தொகுப்பு. சிறுகதைகள் தான் என்றாலும் என் மனதில் அக்கதை தொடர்பாக தோன்றும் கற்பனைகளை பொறுத்து சற்று விரிவாக தருகிறேன்.