ராமச்சந்திரனை தொடர்ந்து வேவு பார்ப்பதே தன் தலையாய கடமையாக நினைத்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தாள் ஹாசினி.
இரண்டு மாதங்களில் தன் பெரியன்னைக்கு ஏற்ற பெரியதந்தை இவர் தான் என்ற ஹாசினியின் நன்மதிப்பை வென்றார் அவர்.
மாணவர்களிடம் அவர் இயல்பாகவும், கலகலப்பாகவும் பழகுவதால் தங்களுக்கு பாடத்தில் தனிப்பட ஏற்படும் சந்தேகங்களை ஓய்வு நேரத்தில் அவரிடம் தனியாக கேட்டறிந்து கொள்வர்.
கணிதத்தில் திறமையான மாணவி என்பதால் அந்த போர்வையில் அவரிடம் நெருங்கி பழகி, அவரின் தனிப்பட்ட அபிமானத்தை பெற முயன்றாள் அவள்.
ஒரு நாள் மதிய இடைவேளையில் ராமச்சந்திரன் அவளை அழைப்பதாக மாணவன் ஒருவன் சொல்லிச் செல்ல, அவரை காண ஸ்டாஃப் ரூமிற்கு விரைந்தாள்.
"எக்ஸ்கியூஸ்மி சார்!"
"ம்... உள்ளே வா!"
அறையில் அவரை தவிர வேறு யாருமில்லை, யோசனையுடன் உள்ளே நுழைந்தவளை உட்கார் என எதிரே இருந்த நாற்காலியை காட்டினார்.
"இட்ஸ் ஓகே சார் பரவாயில்லை சொல்லுங்கள்!" என்றவளை அழுத்தமாக பார்த்தார்.
"மரியாதை மனதில் இருந்தால் போதும் வெளிப்பூச்சுக்கு ஒன்றும் நடிக்க தேவையில்லை, முதலில் உட்கார். நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்!" என்றார் சற்றே காட்டமாக.
தான் என்ன தவறு செய்தோம் என தெரியவில்லையே என்று சிறிது அச்சத்துடனேயே சேரின் நுணியில் அமர்ந்தாள் ஹாசினி.
அவளை நேர்ப்பார்வையாக பார்த்தவர், "நானும் சில நாட்களாக உன்னை கவனித்து கொண்டு தான் இருக்கிறேன். உன் நடவடிக்கைகள் எதுவும் சரியாக இல்லை, கண்ட படங்களை பார்த்தும் கதைகளை படித்தும் மனதை அலைப்பாய விடாதே. நிழலுக்கும் நிஜத்துக்கும் கற்பனைக்கும் நிதர்சனத்துக்கும் ஏக வித்தியாசம் உண்டு. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று கனவுகளை வளர்த்துக் கொண்டு வானில் பறந்தாய் என்றால் கீழே விழும் பொழுது இழப்பு உனக்கு தான். தினமும் எத்தனை செய்திகள் வருகிறது அதைப் பார்த்து அறிவை வளர்த்து கொண்டு வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் பகுத்தறிய தெரியாதா உனக்கு? மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை பார்த்து கூட உன் போன்ற பெண்கள் திருந்தாதால் தான் அவனவன் இன்னமும் வயது வித்தியாசம் இல்லாமல் தனக்கேற்றபடி ஏமாற்றி வளைத்து கொண்டிருக்கிறான். எதையும் பட்டு அவமானப்பட்ட பின் தான் திருந்துவீர்களா? எல்லாம் போன பின் திருந்தி என்ன பிரயோஜனம்!" என்கிற ரீதியில் அடுத்தடுத்து பேசி அவளிடம் சீறினார் ராம்.
YOU ARE READING
சிறுகதைகள் தொகுப்பு
Randomஎன் சிறுகதைகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் தொகுப்பு. சிறுகதைகள் தான் என்றாலும் என் மனதில் அக்கதை தொடர்பாக தோன்றும் கற்பனைகளை பொறுத்து சற்று விரிவாக தருகிறேன்.