எங்கே எனது கவிதை - 1

425 43 36
                                    

கல்லூரியில் முதலாம் ஆண்டு அடி எடுத்து வைத்திருந்த ஹாசினிக்கு வாழ்க்கை வண்ணமயமாகத் தோன்றியது.

பள்ளிப்பருவம் முடிந்து ஆரம்பித்த இந்த வாழ்க்கை சிறகடித்துப் பறப்பது போல் அவளை உணரச் செய்தது. இனி யாரும் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கிறாய்... இந்த வருடம் பாஸாகி விடுவாயா போன்ற கேள்விகளை எல்லாம் கேட்டு தொல்லை பண்ண மாட்டார்கள்.

'ஷ்... அப்பா... இந்த ப்ளஸ்-டூ முடிப்பதற்குள் தான் எத்தனை தொல்லை? படி படி என்று ஒரு பக்கம் உயிரை வாங்குவது மட்டுமில்லாமல்... அங்கே டியூசன் போனால் நல்ல மார்க் வாங்கலாம், இல்லையில்லை இங்கே போ... அது தான் பெஸ்ட் என்று ஆளாளுக்கு இலவசமாக அட்வைஸ் செய்து நம்மை ஒரு வழி ஆக்கி விடுவார்கள். ஓடி களைத்து வரும் என் போன்ற மாணவர்களுக்கு கல்லூரி தான் சொர்க்க பூமி!' என்று எண்ணி குதூகலித்தாள்.

குறுகிய காலத்திலேயே நல்ல நட்பு வட்டம் அமைந்து, மகிழ்ச்சியாக கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தாள் ஹாசினி.

அவளுக்கு பிடித்த பாடம் கணிதம் தான், பக்கம் பக்கமாக தியரி எழுதுவதை விட கால்குலேஷினில் ஸ்ட்ராங்காக இருந்து விட்டால் போதும், கணிதம் மிகவும் சுலபமான பாடம் என்று கல்லூரியிலும் அதை தான் பேச்சுலர் டிகிரியில் எடுத்திருந்தாள்.

பிடித்த பாடங்கள், நண்பர்கள் என்று சென்று கொண்டிருக்கும் பொழுது தான் அவள் மனதை பாதிக்கின்ற விஷயமாக ஒன்று நடந்தது.

தோழிகள் அனைவரும் மதிய இடைவேளையில் ஒன்றாக அமர்ந்து கேலிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் அப்பேச்சு வந்தது, அதாவது எதிர்கால கணவரைப் பற்றிய தங்களின் கனவுகளை பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

இவள் உட்பட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் எதிர்பார்ப்புகளை சொல்ல, ஒருத்தி மட்டும் லேசாக வாடிப் போய் தெரிந்தாள்.

என்னவென்று விசாரித்ததற்கு, "இல்லை... எனக்கு அக்கா ஒருவள் இருக்கிறாள், அவளுக்கு வயது இப்பொழுது இருபத்தியெட்டு. எனக்கும் அவளுக்கும் கிட்டத்தட்ட பத்து வயது வித்தியாசம். அவளுடைய ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் வருகின்ற வரன்கள் எல்லாம் அமையாமல் தட்டிப் போகிறது. அவளை விட இரண்டு வயது சிறியவன் என் அண்ணன் தற்பொழுது காதல் திருமணம் செய்து கொண்டு அண்ணியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான். அது எங்களுக்கு சங்கடம் என்றால் அக்காவின் நிலை தான் இன்னும் பரிதாபம், தனக்கென்று ஒரு வாழ்க்கை அமையாதா என்ற ஏக்கத்தில் ஏனோதானோவென்று வேலைக்குச் சென்று வந்து கொண்டிருக்கின்றாள். அதையெல்லாம் பார்க்கும் பொழுது நம்மை மனதார நேசிக்கின்ற ஒருவர் வந்து காலாகாலத்தில் திருமணம் செய்துக் கொண்டால் போதும் என்று தோன்றுகிறது!" என்று பெருமூச்சு விட்டாள் அவள்.

சிறுகதைகள் தொகுப்புWhere stories live. Discover now