தன் கணவனின் வருகை நந்தினியின் முகத்தில் புன்னகை பூக்கச்செய்தது, அவளது ஞாபகங்களை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு தன் கணவனை கவனிக்கத்தொடங்கினாள்.
" என்னங்க.. இன்னைக்கு இவ்ளோ லேட்டு? உங்களுக்காக நம்ம மது எவ்ளோ நேரம் காத்திருந்தா தெரியுமா? இப்பத் தான் தூங்குனா," என்று கோபமாக அவனை கடித்துக்கொண்டு அவன் கைகளை தன் மேலிருந்து நீக்க முயற்சித்தாள்.
ஆனால் அவனது பிடியோ இரும்பாக இருந்தது," என்னடா பண்ண சொல்ற? நான் பாக்குற வேலை அப்படி , நியூஸ் ரிபோர்டர் வேலை நேரம் காலம் இல்லாம உழைக்கனும்," இன்னும் அவளை விடுவிக்காமல் பேசிய தன் கணவனின் கைகளை ஆறுதலாக பற்றிய நந்தினி," சரிங்க புரியுது நீங்க போய் டிரஸ் மாத்திட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்," என்று கூறி அவனை அறைக்குள் அனுப்பிவிட்டு ஒரு சிரிப்புடன் சமையல் கட்டை நோக்கி விரைந்தாள்.
இரவு உணவை முடித்துவிட்டு தன் மனைவியுடன் அன்று நடந்தவைகளை பகிர்ந்துகொள்ளும் பழக்கமுடைய சிவா இன்றும் அது போல பேசிக்கொண்டிருந்தான்.ஆனால் அவன் பேச்சை கேட்கும் மனநிலையில் இல்லாத நந்தினி அமைதியாக உதட்டில் புன்னகையுடன் தலையை அசைத்துக்கொண்டிருந்தாள்.
அவளின் நினைவுகள் மெது மெதுவாக பின்னோக்கிச் சென்றது, நிகழ்கால சந்தோஷங்களை அனுபவிக்க விடாமல் சில நேரங்ஙளில் நம் மனது புதைந்து போன நினைவுகளை மனதின் ஆழத்தில் தேடும் அந்த நிலையிலே இப்பொழுது நந்தினியும் இருந்தாள்.
அவள் மனம் பெசன்ட் நகர் பீச்சிற்கு சென்றது.அங்கு அவள் தன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.காதலுக்காக காத்திருப்பது ஒரு சுகம் தரும், அந்த காதலனுடனான முதல் சந்திப்பு சுகத்திலும் இன்பம் சேர்க்கும், ஆனால் காதலன் யாரென்று தெரியாத நிலையில் தன்னை கடந்து செல்லும் நூற்றுக்கணக்கான ஆடவர்களில் தன் மனதிற்கினியவன் யாரென்று தேடும் பெண்ணின் நிலை வார்த்தைகளால் வர்ணிப்பதற்கு அப்பாற்பட்டது.

VOCÊ ESTÁ LENDO
ஞாபகங்கள் தாலாட்டும் (முடிவுற்றது)
Contoஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித்த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை. ஏதோ ஒரு சந்தர்பத்தில் மட்டும் வரும் ஞாபகங்களும் உண்டு நம் அன்றாட வாழ்க்கையில் நம்மோடு பயணிக்கும் ஞாபகங்களும் உண்டு. ...