'அம்மா நான் எப்படி இருக்கேன்? ' .... தான் அணிந்திருந்த புது உடையை காட்டி கொண்டே நண்பர்களோடு விளையாட ஓடி கொண்டிருக்கும் 15 வயது மகனை பெருமிதத்தோடு பார்த்து கொண்டிருந்தாள் ராதிகா.... என் உலகமே நீயென எண்ணிக் கொண்டே... ' பாத்து போ மது'.... என மகிழ்வோடு கூறினாள். இரவில்.. இருளில், வாயிலை பார்த்து கொண்டிருப்பதை தவிர வேறெதுவும் தோன்றாமல் மகனின் வருகையை எதிர்பார்த்து கொண்டே...
புயலென உள் நுழைந்த மகனின் எதிர்பாரா வருகையில் சற்று நிலை குலைந்தாள், ராதிகா.
'என்ன மது இப்படியா வருவ'... என கடிந்து கொண்டே மகனின் தோளில் கை வைக்க, அவனோ முகம் பாராமல் கைகளை தட்டி விட்டான். மகனின் இந்த செய்கையில் துணுக்குற்ற ராதிகா, 'மது'.... என வேகமாக அழைத்தபடியே அருகில் செல்ல அவன் மீதான புதிய வாசனையில் குடித்திருக்கிறான் என்பதை உணர்ந்த நொடி வாழ்வே அர்த்தமற்று போனதாய் உணர்ந்தாள்.... அவனோ அம்மாவை புதிதாய் கட்டுப்படுத்திய அழுகையோடு முறைக்க, ராதிகா, ' என்ன மது என்ன ஆச்சு'... என கேட்டு கொண்டே அருகில் வர, 'நீ ஏன்மா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல?' .... என்று கேட்ட மகனின் கேள்வியில் சற்றே பின்னடைந்தாள்.சற்று கோபத்துடன் 'என்ன பேச்சு இது?' என வினவ, "உன்னாலதான் என் ப்ரெண்ட்ஸ் முன்னாடி எனக்கு அவமானமா போச்சு" என கோபத்தில் கத்தும் மகனை செய்வதறியாது விரக்தியோடு பார்த்தபடியே 'என்னாச்சு மது?' என்க, அவனோ 'நீ மோசமானவளாம், அதுதான் அப்பா உன்ன விட்டு பிரிஞ்சி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டார்னு எல்லாரும் சொல்றாங்க... இத சொல்லியே என்ன கிண்டல் பண்றாங்க.. இனி நான் உன்கிட்ட பேச மாட்டேன்'.... என கூறிக் கொண்டே தன் அறை கதவினை அறைந்தாற் போல் சாத்தி செல்லும் மகனின் வார்த்தையில் தளர்ந்த மனதோடு தன்னறை சென்றாள்...
மறுநாளிலும் மனதை மாற்றி கொள்ளாத மகனின் செய்கையில், "கண்ணா உன்கிட்ட கொஞ்சம் பேசனும் என அழைக்க", அவனோ 'உன் கூட இருக்க எனக்கு புடிக்கல, என்னை ஹாஸ்டல் ல சேர்த்து விட சம்மதிக்கிறேனு சொல்லு, நான் கேக்றேன்' என கூறிக் கொண்டே முகத்தை திருப்பி கொண்டான். அதை கேட்ட ராதிகா, 'நான் சொல்றத கேளு மது, அப்பாவும் நானும் ஒருத்தருக்கொருத்தர் ஒத்து போகலனு பேசி முடிவெடுத்துதான் பிரிஞ்சோம், அதுக்கு அப்பறம் வேலை பார்க்கிற இடத்துல எத்தனையோ பேர் கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்னையும் சேர்த்து நல்லா பார்த்துப்பேனு வந்து கேட்டாங்க, உன்ன மட்டுமே என் உலகமாக்கி நான் வாழறதால எதுவுமே வேணாம்னு சொல்லிட்டேன், இன்னொரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து கிட்டது அப்பாவோட முடிவு அதுல நான் தலையிட முடியாது' என கூறியபடியே விழி நீரை துடைத்து, விழி அகற்றாது மகனின் பதிலை எதிர் நோக்கினாள்.