மரங்களை அசைத்துப்பார்க்க எண்ணி காற்று பலமாக வீசிக்கொண்டு இருந்தது, மேகங்களும் விண்ணை விட்டு மண்ணை நோக்கி எத்தனிக்க தயாராவதாக தெரிந்தது. பகலிலேயே இருள் அப்ப அந்த ஆள் அரவமற்ற காட்டில் அழுகுரல் ஒன்று ஓங்கி ஒலித்தது.
இளைஞன் ஒருவன் அங்கிருந்த பள்ளதாக்கின் விளிம்பில் நின்றுகொண்டு தேம்பி தேம்பி அழுதபடி அந்த பள்ளத்தை எட்டிப்பார்பதும் திரும்ப இங்கும் அங்கும் நடப்பதுமாக இருந்தான். அப்பொழுது அவன் பின்னால் இலைச்சருகுகளின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தான்.
அங்கே வயதான ஒரு முதியவர் கையில் ஒரு பையோடு நின்றிருந்தார். " யார்பா தம்பி நீ..? இங்க இந்த நேரத்துல தனியா என்ன பன்ற?",
அவரை விசித்திரமாக நோக்கியவன் பேசாமல் அவர் முகத்தையே வெறித்தான்."என்னப்பா பேச மாட்றே... நீ இங்க எப்படி வந்த?" அதற்கும் அவனிடம் மறுமொழி இல்லை, பள்ளத்தை பார்த்தபடியே இருந்தான்.
"இங்க தற்கொலை ஏதாச்சும் செய்ய வந்தியா என்ன?" குரலை உசத்தி கேட்டார் அவர். அதற்கு தலையை குனிந்து கொண்டு அழுதான் அவன்.
"நீ பேசாம இருக்கறது பாத்தா அப்படி தான் தெரியுது. ஒரு உயிரோட மதிப்பு தெரியுமா உனக்கு? தினம் வயசான காலத்துல தனிமையை அனுபவிக்கிற எனக்கு தான் அந்த அருமை தெரியும். என்னப்போல எல்லாத்தையும் இழந்திடாதப்பா, வந்த வழிய பாத்துகிட்டு போ" அங்கிருந்து நகரப்போனார் அவர்.
"தாத்தா.." அவன் அழைக்க திரும்பி பார்த்தார் அவர். சோகம் கண்ணில் தெரிய அவரை ஏறிட்டவன் "எனக்கும் யாரும் இல்ல, உங்களப்போல யாராச்சும் அப்போ என்கூட இருந்து இருந்தா நானும் இப்போ இங்க நின்னுட்டு இருந்திருக்க மாட்டேன்".
புரியாமல் அவனை பார்த்தார் பெரியவர். "நீங்க எங்கூட வந்திடுரீங்களா, தனியா இங்க என்னால இருக்க முடியல" என்றான் அவன்.
"என்கூட வரியா அப்போ, நான் உன்ன பாத்துக்கறேன்" என்றார் அவர். விரக்தியாய் சிரித்தவன் "என்னால வர முடியாது தாத்தா ஆனா நீங்க என்கூட இருக்க முடியும்"
"என்னப்பா சொல்ற" என்று அவனை பார்க்க, அவன் அங்கு இல்லை. அவர் சுற்றி திரும்ப அவன் முகம் குரோதத்துடன் அவர் அருகில்...
கால்கள் தடுமாற பள்ளத்தை நோக்கி சரிந்தார் அவர்...