" தம்பி நீங்க கேட்ட விலைல இந்த வீடு தான் வாடகைக்கு இருக்கு, வேணும்னா பாருங்க "
வீட்டை சுற்றி பார்த்தான் அவன்...சிறிய கிணறு உள்ள தோட்டம், முற்றம், சமையல் அறை மற்றும் 1 படுக்கை அறை கொண்டு சின்னதாகவும் பார்க்க அழகாகவும் இருந்தது.
" அண்ணே எனக்கு ஒகே. வீடுனா இப்படி தான் இருக்கனும். எவ்வளவு அழகா இரசித்து கட்டி இருக்காங்க. இவ்ளோ விலை கம்மியா நான் எதிர்பார்க்கல. எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு" வீட்டை பார்த்து புன்னகைத்தவாறே பேசினான் சபீர்.
" ஆமா ஆமா ஏன் இருக்காது... அது இருக்குல்ல அப்போ அப்படி தான் இருக்கும்" அவனுக்கு கேட்காதவாறு முணுமுணுத்தார் தரகர்.
" என்ன அண்ணே சொன்னீங்க? " இவரை திரும்பி பார்த்து கேட்டான் சபீர்.
" ஒன்னுமில்ல தம்பி. வீட்டை நல்லா சுத்தமா வைச்சுக்கோங்க, அப்புறம் முடிஞ்சவரை வீட்ல சத்தம் அதிகம் வராம பார்த்துக்கோங்க. முக்கியமா நைட்ல "
" அதெல்லாம் கரெக்டா பண்ணிடுவேன்ணே... இப்படி வீடு கிடச்சதே பெரிய விஷயம் "
" சரி தம்பி எப்போ இங்க மாத்திட்டு வரீங்கன்னு சொல்லுங்க. அதுக்குள்ள நான் ஓனர்கிட்ட பேசி வாடகை பத்திரம் ரெடி பண்ணி வைக்கிறேன் "
" நான் நாளைக்கே வர ரெடிண்ணே. நீங்க எல்லாத்தையும் நாளைக்கு தயார் பண்ணி கொண்டு வந்துருங்க. ஆமா இப்பவே சாமானெல்லாம் கொண்டு வந்து வச்சுக்கலாமாண்ணே? "
அவர் முகம் சற்றே சுருங்க, "இல்ல தம்பி மணி இப்பவே 6 ஆகுது. ஓனர்கிட்ட சொல்லனும், நீங்க நாளைக்கே வந்துருங்களேன்"
" சரிண்ணா. நீங்க பேசிட்டு சொல்லுங்க "
இருவரும் அங்கிருந்து கிளம்ப அவர்கள் பின் நின்ற நிழலுருவமும் மெல்ல காற்றில் கரைந்தது.
சபீர் மறுநாள் அந்த வீட்டில் அவன் சாமான்களை எல்லாம் அடுக்கி வைத்து கொண்டு இருந்தான். சமையல் அறையில் அவனுக்கு மட்டும் தேவையான கொஞ்ச பாத்திரங்களை அடுக்க கைத்தவறி டம்ளர் ஒன்று கீழே விழுந்தது. டங் டங் என்று அந்த சத்தம் வீடே எதிரொலித்தது.