வீட்டை விட்டு வெளியே வந்த சபீருக்கு படபடப்பு குறைய கொஞ்ச நேரம் ஆயிற்று. தான் கேட்டது உண்மையா பிரமையா என்று புரியாமல் குழம்பினான். திரும்பி சென்று என்னவென்று பார்க்கலாமா என்று யோசித்தான்.
"வேணாம் வெளிய ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வருவோம், மைன்ட் ரிலாக்ஸ் ஆகும்" என்று முடிவெடுத்தவன் பொடிநடையாக நடக்க தொடங்கினான். (அடேய் பிரியாணிய மறந்துட்டு போற... பிரியாணி போச்சா)
அருகில் உள்ள ஒரு பூங்காவில் அமர்ந்தவன் அங்கு குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்க்கலானான். மர நிழலில் காற்று நன்றாக வீச பசியில் அப்படியே படுத்து உறங்கி போனான் சபீர். யாரோ அவனை தட்டி எழுப்ப, தான் எங்கிருக்கிறோம் என்று புரிய சிறிது நொடிகள் ஆனது அவனுக்கு.
" ஏ இங்க பாருப்பா.. தம்பி.. பார்க் மூட்ர டைம் ஆச்சு. கிளம்பு கிளம்பு " பூங்காவின் செக்யூரிட்டி அவனை விரட்டினான்.
தூக்க கலக்கத்தில் சோம்பல் முறித்து கண்ணை கசக்கிக்கொண்டே வீட்டை நோக்கி சென்றான் சபீர். சுற்றிலும் இருள் அப்ப தொடங்கியது. மொபைலில் நேரம் 6.30 என காட்டியது பின் வாட்சப்பில் மெஸேஜ் ஏதாவது வந்துள்ளதா என்று பார்த்தபடி வீட்டின் கேட்டை திறந்தவன் சட்டென ஷாக் அடித்தது போல் நின்றான்.
அன்றைய நாளின் நிகழ்வுகள் அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது. வயிற்றின் உள்ளே பயப்பந்தும் பசியும் சேர்ந்து கிரிக்கெட் ஆடியது சபீருக்கு. உள்ளே செல்லாமல் அப்படியே நின்றான்.
" இதெல்லாம் உன் மனப்பிராந்தி தான்டா சபீரு. பேயும் இல்லை பிசாசும் இல்லை, தைரியமா உள்ள போ " அவனின் மூலை அவனுக்கு கூறியது.
துரோகி இதயமோ நெஞ்சுகூட்டுக்குள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடியது. எதுவானாலும் பார்த்துவிடலாம் என்ற முடிவுடன் உள்ளே மெதுவாக எட்டிப்பார்த்தான் சபீர். எல்லாம் போட்டது போட்டபடி அப்படியே தான் இருந்தது. இவன் விட்டுச்சென்ற பிரியாணி உட்பட.