மனதின் ஆழத்திலிருந்து மீண்டும் மீண்டும் ஊற்றெடுத்துக் கடலலைகளைப் போல மேலெழும் அந்த எண்ண அலைகளை இன்று கூட கட்டுப்படுத்த முடியவில்லை அவளால்.
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவம் மீண்டும் மீண்டும் மனத்திரையில் நுழைந்து படமாக்கப்பட்ட நாடகமாக ஓடிக் கொண்டிருந்தது.
அதை இப்போது யோசிக்கக் கூடாது என்று கடினப்பட்டு உள்ளத்தை ஒருநிலைப்படுத்திக் கொண்டு, சமைத்து பரிமாறுவதற்குத் தயாராக இருந்த உணவுகளையெல்லாம் ஒரு நோட்டம் விட்டாள்.
சுவரில் தொங்கிக் கொண்டு, மெதுவாக அடியெடுத்து வைக்கப் பழகும் குழந்தையை நினைவூட்டும் அந்தக் கடிகார முட்களும் நத்தையாய் நகர்ந்து கொண்டிருந்தன.
இன்னும் சிறிது நேரத்தில் கணவர் வந்து விடுவார் என்ற ஆவலுடன் முன் கதவைத் திறந்து வைத்து விட்டு, ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
ஏப்ரல் மாதத்தில் பூத்துக் குலுங்கும் வர்ணக் கலவை கொண்ட மலர்கள் தென்றலின் தழுவலுக்கு ஏற்ப அசைந்தாடிக் கொண்டிருந்தன.
கேட்டைக் கடந்து உள் நுழைந்த அந்த வெள்ளைக் கார் அவள் வதனத்திலொரு புன்னகையை உதிக்கச் செய்தது. எழுந்து வெளியே வந்தவள் கதவு நிலையில் சாய்ந்து கொண்டு நின்றாள்.
'எனது மனைவியா இத்தனை அழகி?' என்று நினைத்தவாறு கையில் சில பைகளுடன் படியேறி வந்தான் அவள் கணவன்.
"அஸ்ஸலாமு அலைக்கும் உமாமா!" என்று முகமெல்லாம் புன்னகையுடன் அவள் பதிலையும் பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
அவள் வழக்கமாக செய்வது போல் அவனிடமிருந்து பைகளை வாங்கி வைத்து, சப்பாத்தையும் கழற்றி இறாக்கையில் வைத்து விட்டு, அவனை அமர வைத்து குளிர்ந்த நீர் குடிக்கக் கொடுத்தாள்.
அவனது சப்பாத்தைக் குனிந்து கழற்ற வேண்டாமென்று அவளுக்கு எத்தனையோ முறை சொல்லி விட்டான். அவள் கேட்பதாய் இல்லை.
YOU ARE READING
நன்மைக்கு என...
SpiritualCover edit by: @Staraddixt17 *** நன்மைக்கென்று நினைத்து செய்த செயல் தீங்கானது... *** "ஐ ஹேட் யூ! என் கண் முன்னாடி நிக்காத"அவள் பல வருடங்களுக்கு முன் கூறிய வார்த்தைகள் இன்னும் உமாமாவுக்கு நன்கு நினைவிருக்கின்றன. அவை வெறும் வார்த்தைகளாக இருந்தாலும் அ...