அன்றிரவும் வழமை போல இருவரும் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். இன்று அந்தப் புதிய மருத்துவர் வரவில்லையென்று உமாமாவிடம் கூறினான் அஹ்மத்.
"அவர் நைட் டியூட்டிக்கு வந்தார்" என்றாள் அவள் உதட்டைப் பிதுக்கியவாறு.
"அப்டியா?" அவன் ஆச்சர்யமாகக் கேட்டு விட்டு அமைதியானான். உமாமாவின் முக மாற்றத்தைக் கவனிக்க அவன் தவறவில்லை.
"உமாமா" மெதுவாக அழைத்தான்.
"ம்ம்?" அவள் திரும்பிப் பார்க்க,
"என்ன ஒருமாதரி இருக்கீங்க?" என்றான். அவள் அப்படி இருப்பதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
"ஒன்னுமில்லயே" என்றவள் முஹம்மதை தொட்டிலில் போட்டுப் போர்வையால் போர்த்தி விட்டாள்.
அவள் செய்வதையே பார்த்திருந்தவன் தனது புத்தகத்தை மூடி வைத்து விட்டுப் படுத்துக் கொண்டான். அதன் பிறகு அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை.
உமாமாவுக்குப் படுத்தாலும் தூக்கம் வருவதாயில்லை. சில நிமிடங்கள் புரண்டு கொண்டிருந்தாள். அன்றைய நாளின் நினைவுகள் மனதைத் தட்டிச் சென்றன.
மாலை நேரம், மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மருத்துவர்களும் தாதியரும் அங்குமிங்கும் தத்தமது வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது வெள்ளைக் கோட்டுடன் கழுத்தில் ஸ்டெதஸ்கோபை அணிந்தவாறு புதியதொரு முகம் அங்கு வரவே, அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
"குட் ஈவ்னிங்! நான் டாக்டர் ஹஸன் பஸ்லி. டென்டல் சர்ஜன்" என்று தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டான்.
பல சினேகமான புன்னகைகள் அவனை நோக்கிப் பாய்ந்தன. சில எரிச்சலான பார்வைகளும் அவன் முகத்தை மொய்த்தன. இறுதியில் ஓர் அதிர்ச்சியான பார்வை மட்டும் வந்து அவன் முகத்தில் நிலைக்குத்தி நின்றது.
அது உமாமாவின் பார்வை தான். கண்ணிமைக்காது விசித்திரமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதையுணர்ந்தவனும் சங்கடத்துடன் தொண்டையைச் செறும, சீக்கிரமே தன் கண்களை விலக்கிக் கொண்டவள் தனது வேலையைத் தொடர்ந்தாள்.
YOU ARE READING
நன்மைக்கு என...
SpiritualCover edit by: @Staraddixt17 *** நன்மைக்கென்று நினைத்து செய்த செயல் தீங்கானது... *** "ஐ ஹேட் யூ! என் கண் முன்னாடி நிக்காத"அவள் பல வருடங்களுக்கு முன் கூறிய வார்த்தைகள் இன்னும் உமாமாவுக்கு நன்கு நினைவிருக்கின்றன. அவை வெறும் வார்த்தைகளாக இருந்தாலும் அ...