1

1.3K 34 19
                                    

"அம்மா, நான் காலைலயே சர்ச்சுக்கு போயிட்டு வந்துட்டேன். நீங்க சொன்ன மாதிரியே வாரா வாரம் தவறாம போயி ப்ரேயர் பண்ணிட்டு தான் இருக்கேன். இன்னிக்கு சண்டேம்மா. வாரம் முழுக்க வேலை செஞ்சவளை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்களேன்.."

கட்டிலில் கால்களை நீட்டிப் படுத்தவாறு காதில் கைபேசியை வைத்துக்கொண்டு அவள் பேசிக்கொண்டிருக்க, எதிர்முனையில் அதிருப்தியான சத்தங்கள் எழும்பின.

"கீர்த்தி! அடி வாங்குவ நீ!! ஃபோன் பண்ணும்போதெல்லாம் எடுக்கறதே இல்ல; வேலை வேலைன்னு ஓட வேண்டியது! அப்பறம் சண்டே கூப்பிட்டாலும் 'ரெஸ்ட் எடுக்க விடு'ன்னு புலம்புறது. உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க??"

"ம்மா.. சும்மா கேட்டேன்மா! சரி சொல்லுங்க, எப்டி இருங்கீங்க நீங்களும் அப்பாவும்? என்ன புது சேதி?" குறும்பும் சோர்வும் சரிசமமாக குழைத்த குரலில் வினவியபடியே தான் படித்துக்கொண்டிருந்த ஆங்கில நாவலின் அட்டைப்படத்தை விரலால் வருடினாள் அவள்.

கீர்த்தி பால்ராஜ்; அலுவலகத்தில் கீர்த்தி ராஜ்; நண்பர்களுக்கு கீர்த்தி. தமிழகத்தின் பெரும்பாலான இளைஞர் பட்டாளத்தைப் போலவே பொறியியல் படித்துவிட்டு மென்பொருள் நிறுவனமொன்றில் வேலைபெற்று வீட்டிலிருந்து வந்து தனியே தங்க வேண்டிய சூழல். அது தந்த சுதந்திரத்தின் மீது தீராக் காதல்.

ஐந்தரையடி உயரம், திராவிட நிறம், இடைவரை நீளும் சுருண்ட கார்குழல், சின்ன மான்விழிகள், அளவான நெற்றி, காதில் சின்னதாய் வெள்ளி வளையங்கள், கழுத்தில் சிலுவை போட்ட வெள்ளிச் சங்கிலி. இயல்பான, தோழமையான சிரிப்பு; இயன்றவரை அனைவருக்கும் உதவும் குணம். ஞாயிறுக்காக ஆர்வமாகக் காத்திருந்து நேரமே எழுந்து காலை வேளையின் அழகியலை ரசிக்கத் தெரியுமளவு ரசனையுள்ளவள், தன் கடமையையும் மறக்காமல் தேவாலயத்திற்குச் செல்வாள். பெற்றோருக்குச் செல்ல மகள். எனவே அவளை நினைத்து அவர்கள் கவலைப்படாத நாளே கிடையாது.

"..என்னதான் சம்பளம் கணிசமா வருதுன்னாலும், இப்பவும் தன்னந்தனியா நீ தங்கியிருக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கல கீர்த்தி! நம்ம ஊர்லயே வேலை பார்த்தா என்ன குறைஞ்சு போயிடும்?"

முன்பனியா முதல் மழையா🌧🌨💙Where stories live. Discover now