5

393 27 11
                                    

தன்னிடம் சண்டையிட்டு சபித்துவிட்டு கண்களைக் கசக்கிக்கொண்டு செல்லும் மஞ்சள் சேலையை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் மாறன். கோபம், குழப்பம், பயம், ஆர்வம் என சம்பந்தமே இல்லாத உணர்வுகளெல்லாம் ஒன்றாய்க் கலந்து மையம் கொண்டன மனதில்.

"யாருடா அவ?" என்றான் அருகிலிருந்த மாணவனிடம்.

"ஈசிஈ பொண்ணுடா.. செகண்ட் இயர் தான்.. அவங்க க்ளாஸ் பசங்க ஏதோ ப்ராங்க் பண்ணிட்டாங்கனு நினைக்கறேன்.."

"அதுக்கு எதுக்குடா என்கிட்ட சாபம் விட்டுட்டுப் போறா..?"

நண்பர்கள் சிரித்தனர். "பாவம் ஆசையா பேச வந்தவளை நோஸ்கட் பண்ணினா, சாபம் விடாம என்னடா பண்ணுவா? சரி சரி, போயி சட்டைய மாத்து.. சார் வர்ற டைம் ஆச்சு!"

வகுப்பில் இருக்கப் பிடிக்காது புத்தகப்பையை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பி பைக்கை அடைந்தபோது, எதிர்க் கட்டிடத்தில் இரண்டாமாண்டு ஈசிஈ வகுப்பறையை அனிச்சையாகப் பார்க்க நேர்ந்தது. சுடிதாரும் ஜீன்ஸும் அணிந்திருந்த பெண்களுக்கிடையே, சோகமே உருவாக சேலையில் அமர்ந்திருந்தவளும் தென்பட்டாள். பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும், கோபத்தின் ஈரம் இன்னும் காயாமலிருக்க, முகத்தைத் திருப்பிக்கொண்டு தன் வழியில் விரைந்தான் அவன்.

அடுத்த சில நாட்கள் கல்லூரியில் அவளைத் தவிர்க்கவென முயற்சிகள் செய்தான். ஆனால் அவளை அதற்குப்பின் எங்குமே காணவில்லை அவன். கண்ணை விட்டு மறைந்தாலும், மனதில் ஏதோவொரு வருத்தம் ஒட்டிக்கொண்டிருந்தது, அவள் விட்டுச்சென்ற மல்லிகை வாசத்தைப்போல. 'நாம் என்ன தவறு செய்தோம்' என மூளை நியாயம்கேட்டு சண்டையிட்டாலும், மனதுக்குப் புரிந்தது, அவளை அம்மாதிரிப் பேசி அழவைத்தது தவறென. வலியச் சென்று மன்னிப்புக் கேட்கவெல்லாம் இசையாமல், தானாக எங்கேனும் சந்தித்தால் சாரி கேட்டுக்கொள்ளலாம் என நினைத்து விட்டுவிட்டான் அவனும். விதியோ வினையோ, அதன்பின் ஒருநாள்கூட அவளை கல்லூரி வளாகத்தில் சந்திக்கவேயில்லை.

முன்பனியா முதல் மழையா🌧🌨💙Where stories live. Discover now