11

324 21 4
                                    

நாளாக நாளாக மாறன்மீது கொண்ட மையல் மனதை நிறைத்து வளர்ந்தது. சிந்தனை, சொல், செயல், என அனைத்திலும் மாறனே இருக்கக் கண்டாள் அவள்.

சொல்லவும் முடியாமல், தன் மனதை அடக்கிடவும் தெரியாமல் அவதிப்பட்டாள். மாறனைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் பொங்கி வரும் நேசத்தை என்ன செய்வதெனப் புரியாமல் பரிதவித்தாள். அவனைப் பார்த்தால் வார்த்தைகள் தடுமாறுவதையும், கால்கள் தள்ளாடுவதையும் தடுக்க இயலாமல் தவித்தாள்.

இப்போதெல்லாம் ஒரே அலுவலகத்தில் வேறு பணிபுரிவதால் நாளின் பெரும்பகுதி அவன் முகத்தைப் பார்த்தே கழிந்தது. மாறனின் இயல்பான பேச்சும் பண்பான பழக்க வழக்கமும் அலுவலகத்தினரைக் கவர, பாதி அலுவலகம் அவனது நண்பர்வட்டத்தில் இணைந்து போனது. ஆனாலும் கீர்த்தியைப் பார்க்கும் போதெல்லாம் வெளிச்சமான புன்னகையொன்றைச் சிந்தி உற்சாகமாகக் கையசைத்து அன்பை வெளிப்படுத்தத் தவறவில்லை அவன்.

அலுவலகத் தோழமைகள் அதைக் கவனித்துத் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர். சிலர் ஜாடை மாடையாகக் கீர்த்தியிடம் கேட்டபோதும், கீர்த்தி சிரித்து மழுப்புவாள்.

அன்றொருநாள் அவள் தனது அலுவலக மேசையில் அமர்ந்திருந்தபோது, ஓடிவந்து அவளெதிரில் மேசைமீதே அமர்ந்தான் மாறன்.

"ஓய், முதல் மாச சம்பளம். என் ட்ரீட். டின்னருக்குப் போலாமா?"

"நாம.. நாம ரெண்டுபேர் மட்டுமா?"

"இல்ல, மகதியும் வர்றேன்னு சொன்னா. மூணு பேரும் போலாம். ஓகேதான?"

"ஷ்யூர்.. நோ ப்ராப்ளம்."

மாலையில் வேலை முடித்து வீட்டுக்கு வந்தபோது, மகதி தனது புது பூப்போட்ட ஸ்கர்ட்டுடன் அவள்முன் வந்து நின்று அழகாய் ஒருமுறை சுழன்று காட்டினாள்.

"அண்ணன் எடுத்துட்டு வந்தான்... முதல் சாலரில! எப்படி இருக்கு கீர்த்தி?"

கைகளால் அவள் முகத்தை வழித்து நெற்றியில் நெட்டி முறித்து திருஷ்டி கழித்தாள் கீர்த்தி.

முன்பனியா முதல் மழையா🌧🌨💙Where stories live. Discover now