7

344 22 6
                                    

வைகறையில் வாசல்மணி அடித்துத் தூக்கம் கலைக்க, எரிச்சலாக எழுந்து சென்று கதவைத் திறந்து கரகரக்கும் குரலில், "என்ன?" என எரிந்து விழ, எதிரே நின்ற மாறன் ஓரடி பின்வாங்கினான்.

தயக்கமாகக் கைகளைப் பிசைந்தபடி, "மகதி… மகதிக்கு.. வயித்தை வலிக்குதாமா.. ரூம்ல படுத்துக்கிட்டு ஒரே அழுகை… வயித்தை பிடிச்சிட்டு கத்துறா.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.." என்று திக்கித் திணறினான் அவன்.

ஓரளவு விஷயம் புரிந்து, அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவனைத் தாண்டிக்கொண்டு மகதியின் அறைக்கு விரைந்தாள் அவள்.
"மகதி! நான் கீர்த்தி வந்திருக்கேன், கதவைத் திறயேன் ப்ளீஸ்.."

அழுகை தோய்ந்த குரலில், "கீர்த்தி, நீ உள்ள வராத! அண்ணாவையும் விடாத! எனக்கு ரத்தம் ரத்தமா போகுது.." என பதில் வர, கீர்த்தி பாதி பூரிப்பும் பாதிக் கவலையுமாய்த் திரும்பி மாறனை ஏறிட்டாள்.

அருகில் அன்னை ஒருவர் இருந்து இதைப்பற்றியெல்லாம் சொல்லிக் கொடுத்து பயத்தைப் போக்க வேண்டிய நேரம்.. இப்போது யாருமின்றித் தனியாக பயந்து, பதற்றமாகி, ஏதேதோ நினைத்து அழுபவளிடம், யார் சென்று இதைப் பேசுவது?

மாறனின் முகமும் அதிர்ச்சி, கவலை, பதற்றம் எனப் பல்வேறு உணர்வுகள் காட்டியது.

"வா..வாட்? இரத்தமா?? நான் வேணா டாக்டரை கூட்டிட்டு வரவா?"

"ஷ்ஷ்.. அமைதியா இரு. நீ கொஞ்ச நேரம் வீட்டை விட்டு வெளிய இரு. நான் மகதிகிட்ட பேசிட்டு வந்து, நீ செய்ய வேண்டியதை சொல்றேன்."

அவன் மறுக்காமல் வெளியேற, மீண்டும் மகதியின் அறைக்கதவைத் தட்டினாள் அவள்.

"உங்க அண்ணா வெளிய போயிட்டான், கதவைத் திற மகதி.. நான் என்னன்னு பாக்கறேன்"

இருகணங்கள் கழித்துத் தாழ்ப்பாள் திறக்கும் ஓசை கேட்க, கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள் கீர்த்தி.

அறையின் ஒரு மூலையில் அமர்ந்து அழுதுகொண்டே இருந்தவளைப் பார்த்தபோது, கீர்த்திக்கும் கண் கலங்கியது.

முன்பனியா முதல் மழையா🌧🌨💙Where stories live. Discover now