2

451 26 10
                                    

மாலை ஆறு மணியளவில் கதவு மீண்டும் தட்டப்பட்டது. கூடவே, "கீர்த்தி!! மகதி வந்திருக்கேன், உங்களை கூட்டிட்டுப் போக. வாங்க சீக்கரம்!" என்றொரு குழந்தைக் குரலும் கதவைத் தாண்டிக் கேட்டது.

மடிக்கணினியில் ஆங்கில ஹாரர் படம் பார்த்துக்கொண்டிருந்த கீர்த்தி பெருமூச்சு விட்டாள்.

'நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை கீர்த்தி. எல்லாமே நடந்து முடிந்து ஐந்து ஆண்டுகளாகின்றன. உன் முகம் கூட அவனுக்குக் கிட்டத்தட்ட மறந்துவிட்டதல்லவா? இனிமேல் உன் வாழ்க்கையில் அவன் வரமாட்டான். அவன் யாரோ நீ யாரோ. இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..'

எத்தனை சமாதானங்கள் சொன்னாலும் மனது ஒத்துழைக்க மறுத்தது. எனினும், காலையில் சந்தித்த சின்னப் பெண்ணின் முகமும் மனதிலிருந்து அகல மறுத்தது. விருப்பமே இல்லாவிட்டாலும், அக்குழந்தைக்காக, அதன் தூய்மையான விகற்பற்ற பேச்சிற்காக, தான் அணிந்திருந்த பழைய சுடிதாரின்மீது ஒரு காட்டன் துப்பட்டாவை மட்டும் மாட்டிக்கொண்டு கதவைத் திறந்து வெளியே நடந்தாள் கீர்த்தி.

"ஹ்ம்ம்.. வந்துட்டேன், போலாம்.."

நினைத்தது போலவே பெரிதாக ஆட்கள் யாரும் வராமல் வெறுமையாகத்தான் இருந்தது அவர்களது வீடு. பொருட்கள் அளவாகத் தான் இருந்தன.

இரண்டு நாற்காலிகள், மூலையில் சின்ன மேசை; அதில் ஓரிரு வார இதழ்கள். ஓரமாக ஒரு மர ஸ்டூல்.

சுவரில் புகைப்படங்களோ ஓவியங்களோ கடிகாரமோ எதுவுமே இல்லை. முன்பிருந்த ஆட்கள் விட்டுச்சென்ற ஆணிகள் மட்டும் ஆங்காங்கே தெரிந்தன. காலண்டர் மாட்டியிருந்ததன் அடையாளமாக சுவரில் ஓரிடம் வெளுப்பாக இருந்தது.

சமையலறையில் ஒற்றை பர்னர் கொண்ட சின்ன அடுப்பும், சிற்சில பாத்திரங்களும் தெரிந்தன. பெரியவர்கள் யாரும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. அவள் அழைப்பதாகச் சொன்ன விருந்தினர்களும் யாரும் இல்லை.

மின்தூக்கிகள் இல்லாத நான்கு மாடிக் குடியிருப்பு அவர்களது. குடியிருப்பு என்பதை விட, ஒண்டுக் குடித்தனம் என்றால் பொருத்தமாக இருக்கும். தரைத்தளத்தில் ஓனரும், அவரது சகாக்களான சில வயதானவர்களும் இருந்தனர். மற்ற வீடுகளில் சில தம்பதியர்கள், வறுமைக் கோட்டின் அருகில் வசித்தனர். ஓரிரு போர்ஷன்களில் கீர்த்தியைப் போல வேலைக்காக வீட்டிலிருந்து வந்து தங்கியிருந்த இளைஞர்கள் இருந்தனர். அதில் பாதிப்பேரை இன்று வரை பார்த்ததில்லை கீர்த்தி, வேலை நேர வித்தியாசங்களால். எதிர்வீட்டில் ஒரு வடநாட்டுக் குடும்பம் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் அவர்கள் புலம்பெயர்ந்து சென்ற பின்னர் காலியாகத் தான் இருந்தது.

முன்பனியா முதல் மழையா🌧🌨💙Where stories live. Discover now