ஆடைகளை மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் சரிபார்த்து...
பேருந்து நிலையம் நோக்கி கால்கள் விரைந்தோடியது அனிச்சை செயலென்பது போல்...
கண்களின் வலைவீச்சில் சிக்கியது...
அதோ ஓர் பேருந்து...அதிகாலை என்பதால் தென்றல் மட்டுமே பேருந்தை நிரப்பியிருக்க...
எனக்கோர் இருப்பிடத்தை ஜன்னலோரம் அமைத்துக் கொண்டேன்...
வாகனங்களின் புகை மண்டலத்தில் சுற்றித் திரிந்த எனக்கு...
அதிகாலையின் தூய்மை காற்று புத்துயிர் தந்தது...இவையாவும் புதிதாய் இருந்தாலும் உனை நேரில் காணும் ஆவலே மிகைத்து நின்றது...
புறப்பட இன்னும் நேரமிருக்க - ஓட்டுநரை நொந்து கொண்டு டீக்கடை பக்கம் சென்றேன்..
இளஞ்சூடான தேனீரின் கதகதப்பில் கனவுலகில் கானம் பாடித் திரிந்தேன்...
பேருந்து கிளம்பும் ஓசை எனக்கு மட்டும் மெல்லிசை போல் ஆனந்தமூட்டியது...
நடத்துனரிடம் கொடுத்த பணத்திற்க்கு மீதி வாங்க மதியில்லை....
அவரோ எனை ஏற இறங்க ஏளனமாய் பார்த்தபடி கையில் பணத்தை திணித்துச் சென்றார் பயணச்சீட்டோடு...
இயற்கையின் ரசிகனான - என்னை
பயணத்தின் போது அதன் எழில்மிகு அழகை
ரசிக்க விடாமல் பண்ணியது உன் நினைவுகள்...
நீ கருப்பு வண்ண வைரமா..? வெள்ளை நிற பவளமா..?
உன் கண்கள் கூழாங்கற்களா..? எனை சுண்டி இழுக்கும் காந்தமா...?
கன்னங்கள் பருத்தி பஞ்சுகளா..? உதடுகள் இரண்டும் தேன் சொட்டும் பூவிதழா. ?
என உன் உருவம் பற்றிய கற்பனைக்குள் மூழ்கிப் போனேன்...