1. தனியொருவள்

5.6K 100 11
                                    

வள்ளியூர். இரவு 11 மணி ஆள் அனக்கமற்ற நிலையில் இருந்தது அந்த சிறு நகர பேருந்து நிலையம். இரவின் நிசப்தம் அவ்விடத்தை சூழ்ந்து கொண்டது. சுற்றிலும் இரண்டு உணவு விடுதிகளில் மட்டும் வெளிச்சம் தென்பட்டது, இரவு பூச்சிகளின் ரீங்காரம் காதை எட்டும் அளவிற்கு எரிச்சல் ஒலி இருந்தது. அருகிலுள்ள இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் தன் பணியினை முடித்து விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது, பெரு நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் மட்டும் இப்பேருந்து நிலையத்தின் உள்ளே வந்து போவது வழக்கம் அதெற்கெனவும் தனி நேர அட்டவணை உண்டு. ஐம்பது வயது மதிக்கத்த சற்று நரைத்த, அதிக தாடியுடன் குள்ளமான ஒருவரும், ஒல்லியான உருவம் கொண்ட இருபத்தைந்து வயதை ஒத்த ஒரு இளைஞனும் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். வயதான கிழிந்த, அழுக்கான சட்டையுடன் ஒரு பிச்சைக் கார கிழவன் ஒரு தூணருகில் உறங்கி கொண்டிருந்தான். சென்னை செல்லும் அரசு பேருந்து அந்நிலையத்தின் உள்ளே நுழைய இன்னும் 20 நிமிடங்கள் இருந்தது.

இரவு நேரம் என்பதாலும், ஓய்ந்த பகுதி என்பதாலும் பெரும்பாலும் பெண்கள் அங்கே காத்திருந்து பயணப்பதில்லை, அதிலும் அவசர நேரங்களில் ஆண்கள் துணையுடன் என்றாவது பயணிக்கலாம். சற்று தொலைவில் டாஸ்மாக் கடை இருப்பதும் ஒரு காரணம். தான் நடக்கும் பாத ஒலியை விட இதயத்தின் துடிப்பு ஒலி அதிகம் இருக்குமளவு வேகமாகவும் படபடப்புடனும் பேருந்து நிலையத்தினுள்ளே தனியாக வந்து கொண்டிருந்தாள் அந்த இளம் பெண். சுடிதார் அணிந்து இஸ்லாமிய பெண்களைப் போல் முகத்தை கொஞ்சம் மறைத்தபடி தலையில் துப்பட்டா இட்டு அதை தன் தலையோடு சுற்றி தோளில் படர்த்தியவாறு இருந்தாள் அவள். இருளின் தாக்கத்தால் மின் விளக்குகள் குறைவான அந்த பேருந்து நிலையத்தில் அவள் முகம் சற்று மங்கலாகவே தெரிந்தது. நடையில் மெல்லிய சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கும் அவள் கால் கொலுசுகள் எளிதாக சொன்னது அவள் பெண் என்று. நேராக வந்தவள் சென்னை பேருந்துகள் வந்து செல்லும் அந்த பகுதிக்குள் நுழைந்ததும் தன்னால் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டுவந்த அந்த டிராவல் பேக்கை கீழே கிடத்தினாள். சுற்றி இருந்த அந்த இருவர் பார்வையும், எதிரே உள்ள ஹோட்டலில் டீ ஆற்றுபவன் பார்வையும் சில நிமிட இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் அவள் மீது பட்டுச் சென்றது. அவளும் சுற்றும் முற்றும் பார்த்தவாறே இருந்தாள், அவளின் தவிப்பில் பேருந்து சீக்கிரமாக வந்து விடவேண்டுமென்றும், தன்னை அறிந்தவர்கள் யாரும் தன்னை கண்டுவிடக் கூடாதென்றும் நினைப்பது போல் தெரிந்தது.

ஓர் இரவு பயணம்Where stories live. Discover now