தீபாவின் உடல் சிறிது பட படத்தது. நேரே வந்தவன் அவளை தாண்டி சென்று அவள் பின் புறம் புகை பிடித்துக் கொண்டிருந்த ஒருவனிடம் சிகரெட் லைட்டர் வாங்கினான். ஒருமுறை திரும்பி அவனை பார்த்து விட்டு சட்டென முகத்தை திருப்பிக் கொண்டாள், பிறகு அங்கிருந்து சற்று விலகி ஒரு தம்பதியினர் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு அருகில் வந்து நின்றாள். அவள் குடித்த தண்ணீர் தன் வேலையை செம்மென செய்ததால் சிறுநீர் முட்டியது சூழ்நிலை கருதி அடக்கி கொண்டாள். பேருந்தின் உதிரி சக்கரத்தை பொருத்திக் கொண்டு முடிக்க நள்ளிரவு மணி 1.45 ஆனது. பிறகு நடத்துனர் பயணிகள் அனைவரையும் வண்டி புறப்பட ஆயத்தமாகிறதென்றும் உள்ளே வருமாறும் அழைத்தார். பின்னர் சிறிது நேரத்தில் அனைவரும் உள்ளே சென்று அமர பேருந்து புத்துயிர் பெற்று கிளம்பியது. மீண்டும் விளக்குகள் அணைக்கப்பட்டது.
பின்புறமிருந்தும் அருகிலிருந்தும் எதோ ஒரு கை தன் அங்கங்களை தொடுவது போன்றே பிரம்மையாய் இருந்தது. கடவுளே விரைவில் இவ்விரவினை மறையச்செய் என தனக்குள் வேண்டிக்கொண்டாள். அவள் நினைவுகள் இது போன்று முன்பு அவள் தோழி ஒருத்திக்கு நடந்த ஒரு சம்பவத்தினை நினைவு படுத்தியது. அவள் சொல்லி கேட்டிருக்கிறாள். அவள் தோழி மிதுனா ஒரு முறை பெங்களூருக்கு தனியாக செல்கையில் அவள் அருகில் ஒரு வாலிபன் பயணம் செய்திருக்கிறான், பார்க்க நன்மகன் மாதிரி தோற்றமளித்த அவன் எதோ ஒரு ஐ டி கம்பனியில் பணிபுரிந்திருக்கலாம். இரவில் பேருந்து நகர்கையில் தன் இடுப்பில் எதோ ஊர்வது போல் உணர்ந்திருக்கிறாள். முதலில் சட்டை செய்யாதவள் உறங்கிக்கொண்டிருக்க பின் ஊர்வது முன்னேற்றமடைந்து மார்பு பகுதிக்கு வருவது போல் மீண்டுமோர் உணர்வு. தொடர்ச்சியாக இல்லாமல் அவ்வப்போது இருந்ததினால் அவளால் கண்டறிய முடியவில்லை பின் அவள் சுதாரித்துக் கொண்டு தூங்குவது போல் பாசாங்கு செய்கையில் அடுத்த ஊர்தல் பின் பகுதியில் வருகையில் அருகில் இருந்தவன் மாட்டிக் கொண்டான். பிறகு அவள் அலறிக்கொண்டு சப்தமிட்டு, நடத்துனர் விளக்கை போட்டு, சண்டையிட்டு பின் பேருந்து காவல் நிலையம் வரை சென்றிருக்கிறது. மிதுனா அளவுக்கு இவள் தைரியசாலி இல்லை, எதையும் பெரிது படுத்த அவள் இருக்கும் சந்தர்ப்பமும் சரியில்லை. சில நிமிடம் கழித்து பிரம்மை ஏதுமில்லாமல் பின்புறமிருந்து ஒரு கால் அவள் காலில் தட்டிக்கொண்டே இருந்தது, திரும்பி பார்த்தாள் ஒருவன் உறங்கிக்கொண்டிருந்தான். அவன் வேண்டுமென்றே தட்டுவது போன்று தெரியவில்லை, அவன் கால்கள் நீளமானதாக இருக்கலாமென்று தன் கால்களை சற்று முன்னோக்கி நீட்டிக் கொண்டாள்.
YOU ARE READING
ஓர் இரவு பயணம்
Mystery / Thrillerஏதோ ஒரு காரணத்தினால் தன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு இளம் பெண் அந்த ஒரு நாள் இரவு சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், முடிவில் அவள் என்ன ஆனாள் என்பதே இக்கதை. கொஞ்சம் விறுவிறுப்பு, திகில் நிறைந்து இக்கதையை எழுத முயற்ச்சி செய்திருக்கிறேன். படித்த...