ராம் வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. " அப்பா அப்பா " என்று ராமுடன் ஒட்டிக் கொண்டே திரிந்தாள் யாழினி. ராம் Guest room இல் தங்கியிருக்க அவளும் அப்பாவுடனே தூங்கி விடுவாள். ராம் Office இல் இருக்கும் நேரத்தில் மட்டும் தான் அவளுக்கு அம்மா ஞாபகமே வரும். யாழினி உறங்கிவிட்டதும் அவளை தூக்கி வந்து தன் அறையில் படுக்க வைக்கலாம் என்று பார்த்தால் அப்பாவும் மகளுமாய் கூத்தடித்து விட்டு உறங்கவே இரவு நீண்ட நேரம் பிடித்தது. அம்மா அவ்வப்போது வந்து ராமுடன் பேசுமாறு கேட்டுவிட்டுப் போவாள். சஞ்சனாவும் போன் செய்தால் இதை தான் சொல்வாள். அப்பா எதுவும் பேசவில்லை. எது எப்படியோ அவளால் மனதை மாற்றிக் கொள்ள முடியவில்லை. காதலித்து திருமணம் செய்தாலும் திருமணத்தின் பின் அவர்கள் இருவருக்கிடையில் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்துவிட்டதாய் தோன்றியது. சேர்ந்திருந்து தினமும் சண்டை போடுவதை விட பிரிந்தே இருந்து விடலாம் என எண்ணினாள்.
ராம் Office இல் இருந்து வந்ததும் அவனுடன் சேர்ந்து Color book இல் நிறம் தீட்டிக் கொண்டிருந்தாள் யாழினி. வந்தனாவும் தேவியுமாய் இரவு உணவு தயார் செய்து விட்டு எல்லாவற்றையும் மேசையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.
"அப்பாவையும் மாப்பிள்ளையையும் வர சொல்லிடு வந்தனா "
" அப்பாவ வர சொல்றேன், உன் மாப்ளய நீயே கூப்பிட்டுக்கோ "
ஹாலில் இருந்த ராமை கண்டு கொள்ளாமல் அப்பாவை கூப்பிடப் போனாள். " எப்பதான் மனசு மாறுவாளோ " பெருமூச்சு விட்டார் தேவி.
நேரம் இரவு எட்டு மணியிருக்கும். Group study பண்ணப் போன .ரம்யா தீப்தி இருவரும் ஹாஸ்டல் திரும்பியிருந்தார்கள். Earphone மாட்டிக் கொண்டு பாடல் கேட்டுக் கொண்டிருந்தாள் சஞ்சு. லேசாகப் பசி எடுக்கவே சாப்பிடப் போகலாம் என்று எண்ணியபடி கவிதாவைப் பார்த்தாள். விரித்து வைத்திருந்த புத்தகத்தில் தலைவைத்து படுத்திருந்தாள் அவள். " கவி கவி " லேசாக கூப்பிட்டுப் பார்க்க எந்த பதிலும் இல்லை. ரம்யாவின் கட்டில் பக்கம் திரும்ப அவளோ புத்தகத்தால் முகத்தை மூடியபடி படுத்திருந்தாள். சரி முதலில் தீப்தியை கூப்பிடலாம் என அவளை பார்க்க அவள் கையில் புத்தகத்துடன் சீலிங்கை பார்த்த படி ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். இதில் இடைக்கிடை நெற்றியில் விரலை தேய்த்து ஏதோ பலத்த சிந்தனை வேறு. Study holidays, இல் எல்லோரும் ஒரு Type ஆகத்தான் மாறி விடுகிறார்கள். தனக்குள் சிரித்துக் கொண்டாள் சஞ்சு.