யாழினிக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு அவளை படுக்க வைத்துவிட்டு தன் அறைக்கு வந்தாள் சஞ்சனா . இன்னும் மனது முழுமையாய் தெளிவு பெறவில்லை. அஜய்யை நினைக்கவே கூடாது என்று நினைத்தால் அவன் மட்டும் தான் நினைவிலேயே நின்றான். ஆழமாய் ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு கையில் ஒரு நாவலை எடுத்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்தாள்.
நிஜத்தை மறந்து கதைகளில் தொலைந்து போவது அவளுக்கு பிடிக்கும். பள்ளிப் பருவத்தில் இருந்தே அவள் நட்பு வட்டம் சிறியது என்பதால் அவள் நண்பர்களுடன் நேரம் செலவளிப்பதை விட புத்தகங்களுடன் நேரத்தை களிப்பது தான் அதிகம். இப்போதும் அஜய்யின் நினைவுகளை மறக்க கதைகளில் புதைந்து போகவே எண்ணினாள்.
கதை படித்த படியே உறங்கிவிட்டவள் அடுத்த நாள் காலை கண்விழித்த போது மணி ஆறரை. நெஞ்சுடன் சேர்த்து அணைத்திருந்த புத்தகத்தை எடுத்து வைத்துவிட்டு போனை எடுத்து நேரம் பார்த்து விட்டு அப்படியே Whatsapp on செய்ய ரம்யாவும் தீப்தியுமாய் விதம் விதமாய் Status போட்டிருந்தார்கள். அவர்கள் நேற்று மாலை ஊர் திரும்பியிருக்க வேண்டும்."வீட்டுக்கு போய்ட்டியா கவி " என்று கவிதாவுக்கு ஒரு Message போட்டுவிட்டு மீண்டும் Status பார்க்கத் தொடங்கினாள். எல்லோருமாய் சேர்ந்து எடுத்திருந்த அந்த Group Selfie ஐ பார்த்த போது தானும் போயிருக்கலாமோ என்ற ஏக்கம் லேசாக எட்டிப் பார்த்தது. போகாததும் ஒரு விதத்தில் நல்லது தான், வீட்டில் இருக்கும் போதே அவன் நினைவுகள் பாடாய்ப் படுத்த அவர்களுடன் Tour போயிருந்தால் கேட்கவே வேண்டாம்.
அடுத்து வந்த நாட்களில் அஜய்யை மறக்கிறேன் பேர்வழி என எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருந்தாள் சஞ்சு. யாழினியுடன் விளையாடுவாள், தினம் ஒரு புத்தகம் படிப்பாள் இல்லை என்றால் Kitchen இல் ஏதாவது செய்வாள். இதில் ஒரு நாளைக்கு குறைந்தது ஐம்பது முறையாவது " இது வெறும் Infatuation தான், Love லாம் இல்ல. கொஞ்ச நாள்ள இல்லாம போயிடும் " தனக்குத் தானே சொல்லிக் கொள்வாள். ஆனாலும் அவன் நினைவு வராமல் இருப்பதில்லை. அஜய் போன், Message என்று பண்ணும் போதும் முடிந்தளவு சுருக்கமாய் பதில் சொல்லி முடித்துவிட பழகிக் கொண்டாள் . சில சமயங்களில் அவளுக்கே வேதனையாய் இருக்கும். ஆனால் தான் செய்வது சரி தான் என்பதில் உறுதியாய் இருந்தாள்.