ஒரு ஊரில் வெகுளியான ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் குமரன்.அவன் வெகுளி தனத்திற்கு அளவே இல்லை. யார் என்ன சொன்னாலும் நம்பி விடுவான்.
அவனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தனர் அவன் உறவினர்கள். அவனுடைய சிறு வயதிலேயே அவனுடைய பெற்றோர்கள் இறந்து விட்டனர். அவன் உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்து அவர்களுக்கு சம்பளம் இல்லா வேலையாள் போல் அனைத்து வேலைகளையும் செய்வான்.
படிப்பறிவில்லாதவன். அவனுடைய பிரதான தேவை சாப்பாடு, திண்பண்டங்கள், பலகாரங்கள் மட்டுமே.
உறவினர்களும் அவனிடம் நிறைய வேலைகள் வாங்கிக் கொண்டு சாப்பாடு போட்டு அனுப்பி விடுவார்கள். இந்த நிலையில் அவனுக்கு திருமணம் நடந்தது.
அவனுடைய உறவினர்கள் சிலர், டேய் நீ ரொம்ப வெகுளியா இருக்க. நல்லா இருக்குற ஆண்களையே அவனுடைய பொண்டாட்டி ஆட்டி படைப்பாங்க. உன்ன சொல்லவே வேண்டாம். ஆதனால மொதல்ல இருந்தே நீ அவளை உன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிக்கோ.
எதாவது சத்தமா பேசினா உடனே ஓங்கி ஒரு அடி கொடுத்திடு. அப்ப தான் உன்னோட பேச்சை அவள் கேட்பாள் என்றனர்.
குமரனும் அவர்கள் சொல்வதை நம்பி அவ்வாறே நடந்து கொண்டான். எப்போதும் அவன் மனைவியிடம் கடுமையாகவே நடந்து கொள்வான். முதலில் கஷ்டமாக இருந்தாலும் போக போக அவளும் அவனின் குணம் அவ்வளவு தான் என்று விட்டு விட்டாள்.
ஒரு நாள் அவனுடைய அத்தை வீட்டிற்கு சென்றான். அவர்கள் அவனிடம் சில வேலைகளை செய்து முடிக்க சொன்னார்கள். அவற்றையெல்லாம் செய்து முடித்துவிட்டு சாப்பிட வந்து அமர்ந்தான்.
அவனுக்கு நிறைய திண்பண்டங்கள் கொடுத்தார் அவனின் அத்தை. அதில் ஒரு பலகாரம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அத்தை, இந்த பலகாரத்தின் பெயர் என்ன? என்றான் குமரன்.
தம்பி, இதன் பெயர் கொழுக்கட்டை என்றார்.
அப்படியா? மிகவும் சுவையாக இருக்கிறது. என்று கூறி விட்டு கிளம்பினான்.
கொழுக்கட்டை... கொழுக்கட்டை.... கொழுக்கட்டை.... கொழுக்கட்டை....
என்று சொல்லி கொண்டே நடந்து சென்றான்.
அப்போது வழியில் ஒரு பெரிய பள்ளம் தோண்டி கொண்டிருந்தார்கள் மின்சார துறையில் வேலை செய்பவர்கள்.
ஓரமாக சென்றாலும் ஒரு அடி பள்ளத்தினை தாண்டி குதித்து தான் செல்ல வேண்டும்.
அங்கே சென்ற ஒரு வயதானவர் அந்தப் பள்ளத்தை தாண்டும் போது
"அத்தரிபச்சா"... என்று கூறி தாண்டினார்.
பின்னால் சென்ற குமரன்....அந்த பள்ளத்தினை தாண்டும் போது அவனும் "அத்தரிபச்சா" என்று சொன்னான்.
பிறகு அத்தரிபச்சா.... அத்தரிபச்சா...அத்தரிபச்சா... அத்தரிபச்சா.... என்று சொல்லி கொண்டே அவனுடைய வீட்டிற்கு சென்றான்.
வீட்டிற்கு சென்றவுடன் அவன் மனைவியை அழைத்து அத்தரிபச்சா பலகாரம் செய்து கொடு என்றான்.
என்ன? அப்படி ஒரு பலகாரமா? என்றாள்.
மறுபடியும் அத்தரிபச்சா பலகாரம் செய்து கொடு என்று கேட்டு கொண்டே இருந்தான்.
உங்களுக்கு என்ன பைத்தியமா? அப்படி ஒரு பலகாரம் இல்லை என்றாள்.
கோபம் தலைக்கேறிய குமரன் அவன் மனைவியை நன்றாக அடித்து விட்டான்.
சப்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பாட்டி குமரன் வீட்டிற்கு வந்து என்னாயிற்று என்றார்.
குமரனின் மனைவி நடந்ததை சொல்லி அழுதாள்.
அடப்பாவி குமரா... ஏன்டா இந்தப் பொண்ண இப்படி அடிச்சிருக்க....
பாவம் கன்னம் இரண்டும் கொழுக்கட்டை மாதிரி வீங்கி இருக்கே என்றார்.
உடனே குமரன்.... ஆமாம் கொழுக்கட்டை.... கொழுக்கட்டை தான் அந்த பலகாரத்தின் பெயர் என்றான்.
உடனே குமரனின் மனைவி ஈஷ்வரா என்று கூறி புலம்பி விட்டு அவள் கணவனின் வெகுளி தனத்தை எண்ணி அவளின் தலையில் அடித்து கொண்டாள்.
முற்றும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
ஆசிரியர் குறிப்பு:
அத்தரிபச்சா என்றால் என்னவென்று கேட்காதீர்கள். ஏனென்றால் எனக்கு தெரியாது. சிறு வயதில் எனக்கு என் தாத்தா பாட்டி கூறிய கதை. நான் அவர்களிடம் அதன் அர்த்தத்தை கேட்கவில்லை.😊
YOU ARE READING
தாத்தா பாட்டி கதைகள்
FantasyShort stories, one part one story.....எனக்கு என் தாத்தா பாட்டி கூறிய கதை, அறிவுரைகள், மருத்துவம்..... என் குழந்தைகளுக்கு என் தந்தை கூறிய கதை....