அம்மா நீங்க ஏன் இதெல்லாம் என்ற அர்ஜுனிடம் என் மகன், மருமகளுக்கு நான் தான் ஆரத்தி எடுப்பேன் என்ற சௌமியா அர்ஜுன், மாயா இருவருக்கும் ஆரத்தி எடுத்தார்.
மாயா அம்மா என்ற அர்ஜுன் அம்மா இவள் மாயா என்றிட மாயா சௌமியாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட நல்லா இரும்மா என்றவர் அவளுக்கு திருஷ்டி கழித்து அர்ஜுன் என் மருமகள் மகாலட்சுமி மாதிரி இருக்காள் என்றார்.
க்குக்கும் என்று செருமிய படி வந்தார் ரவிக்குமார். மாயா அப்பா என்று அர்ஜுன் கூறிட அவரது காலில் விழப் போனவளை இந்த காலில் விழுற டிராமாவை சௌமியாவோட நிறுத்திக்கிறது நல்லது என்றார் ரவிக்குமார். அவள் மௌனமாக நின்றிருக்க மாயா உங்க மாமாவுக்கு நீங்க சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் பண்ணிகிட்டதனால கோபம் அவ்வளவு தான் என்ற சௌமியா நீ வாமா என்று அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பூஜை அறையில் விளக்கு ஏத்தும்மா என்றார்.
மாயா தவிப்புடன் அர்ஜுனைப் பார்த்திட அவன் கண்ணசைக்கவும் விளக்கு ஏற்றினாள். சௌந்திரபாண்டியன், செண்பகவள்ளி இருவரையும் தாத்தா, பாட்டி என்று அவன் அறிமுகம் செய்து அவளை அழைத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
நல்லா இருங்கப்பா என்ற தாத்தா, பாட்டி இருவரும் அர்ஜுன், மாயா இருவருக்கும் திருநீறு பூசி விட்டனர். அடுத்ததாக சந்திரசேகர், நீலவேணி இருவரையும் பெரியப்பா, பெரியம்மா என்று அறிமுகம் செய்தவன் அவர்களிடமும், அத்தை , மாமா என்று கூறி கவிதா, கனவேல் தம்பதியரிடமும் மாயாவுடன் சேர்ந்து ஆசிர்வாதம் வாங்கினான்.
கவிதாவிற்கு அவரது மகள் சிந்துபாரதியை அர்ஜுனிற்கு மணம் முடித்து வைத்திட முடியவில்லையே என்ற கோபம் லேசாக மாயா மீது இருந்தது. ஹாய் அண்ணி என்று வந்தாள் கீர்த்தனா. பிரகதியும், சிந்துபாரதியுமே மாயாவிடம் நன்றாகவே பேசினார்கள்.
மாயாவிடம் உங்க அப்பா, அம்மாவுக்காவது உங்க கல்யாணம் பத்தி தெரியுமா என்றார் ரவிக்குமார். நான் ஒரு அனாதை அங்கிள். அப்பா , அம்மா யாரும் கிடையாது. பிறந்ததில் இருந்தே ஆசிரமத்தில் தான் வளர்ந்தேன் என்றாள்.