சௌமியாவின் கவனிப்பு மாயாவிற்கு ஏதோ பெரிய விசயமாகப் பட்டது. பிறந்ததில் இருந்து அவள் ஏங்கிய தாயன்பு அந்த வீட்டில் அவளுக்கு கிடைத்தது. சௌந்திரபாண்டியனும், செண்பகவள்ளியும் சௌமியாவின் சந்தோசத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வீட்டின் குட்டி வாண்டுகள் சித்தி, சித்தி என்று மாயாவைச் சுற்றி வந்தது அவளுக்கு ஏதோ உலகமே அவள் கையில் வந்தது போல இருந்தது. கீர்த்தனா அண்ணி அண்ணி என்று அவளைச் சுற்றி வந்தாள்.
பிரகதியும் ஒரு தங்கையாகவே அவளை நடத்தினாள். என்ன ஒன்று அர்ஜுனின் அத்தை கவிதாவிற்கு தான் மாயா மீது கோபமாக இருந்த்து.
அர்ஜுன் இதை சாப்பிடு, அதை சாப்பிடு என்று அவனை தாங்கு தாங்கென்று தாங்கினார் சௌமியா. அம்மா போதும் என்று அவன் சொன்னாலும் மகனுக்கு பிடித்த உணவுகளை அவரே செய்து பரிமாறினார்.
அர்ஜுன் உன் மனைவி கழுத்தில் தாலி இல்லாதது எனக்கு கொஞ்சம் கூட சரியா படலை. இது கிராமம் யாராச்சும் நம்ம சொந்தக்காரங்க உன் பொண்டாட்டி கழுத்தில் தாலி இல்லாமல் இருக்கிறதைப் பார்த்தால் நம்ம குடும்பத்தைக் காரி துப்ப மாட்டாங்க என்றார். அத்தை தாலி என்ன பெரிய தாலி அது வெறும் கயிறு தான். மனசு இரண்டும் ஒத்துப் போனாளே போதும்.
மாயா பிறந்து வளர்ந்தது எல்லாமே கொல்கத்தா. இப்போ ஐந்து வருசமா தான் அவள் சென்னையில் இருக்காள். அவள் வளர்ந்தது ஒரு கிறிஷ்டியன் ஹாஸ்டல் அதனால அவளுக்கு தாலி பத்தி எந்த சென்டிமென்ட்டுமே கிடையாது என்ற அர்ஜுன் இனிமேல் இந்த பேச்சை எடுக்காதிங்க ப்ளீஸ் என்றவன் எழுந்து சென்றான்.
அர்ஜுன் ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் என்ற மாயாவிடம் பின்னே என்ன மாயா உன்னோட மனநிலை தெரியாமல் அவங்க பாட்டுக்கு பேசிட்டே இருக்காங்க. எல்லாம் அந்த நீலிமாவை சொல்லனும் என்றவன் கோபமாக சுவற்றில் கையைக் குத்தினான்.
உண்மை தான் நீலிமாவுக்குத் தான் நான் நன்றி சொல்லனும் அர்ஜுன் என்றவளை கேள்வியாக பார்த்தான் அர்ஜுன்.