கிராமத்து மின்னல்கள் (பகுதி: 07)

59 1 0
                                    


கிராமத்து மின்னல்கள்
(பகுதி: 07)

கோபமாய் கதிர் என்னைப்பார்த்தவுடன் என் கையில் இருந்த முள்ளால் வேகமாய் அழிக்க ஆரம்பித்தேன். அதைப்பார்த்ததும் இன்னும் வேகமாய் வந்தான் அவன். என் கையை பிடித்து இழுத்தான் இழுத்த வேகத்தில் அந்த கள்ளி வளைந்து அவன் கையை பதம் பார்த்தது. சைடில் இருந்த முள் அவன் உள்ளங்கையில் அழுத்த, இரத்தம் சொட்ட ஆரம்பித்தது.

இரத்தம் பார்த்ததும் அவன் அழ ஆரம்பித்தான். "உன்னை பாத்து பேசலாம்ன்னு வந்தேன். இப்படி பண்ணிட்டியே நீ? ரொம்பவே நீ மாறிட்ட" அப்படின்னான்.

"மாறுனது நீயா, இல்லை நானா?" என்றேன் நான்.

"என்ன சொல்ற நீ?"

"நீயே யோசிச்சு பாரு தெரியும்" என்ற படி அவன் கைகளை பிடிக்க, அவன் என்னை விட்டு தனியாய் போனான். அவன் ரோட்டை அடையவும், அந்த சங்கர் சரியாய் வந்து சேர்ந்தான்.

"என்னடா ஆச்சு? கையெல்லாம் ரத்தம்" என்றான் அவன்.
"கள்ளி முள் குத்திருச்சு" என்றேன் நான்.
அவன் பாட்டிலில் இருந்த தண்ணீர் எடுத்து அவன் கையில் ஊற்றி, பின் அவன் கைக்குட்டையை அழகாய் அவன் உள்ளங்கையில் வைத்து சுற்றினான்.

அதைப்பார்க்க பார்க்க எனக்கு அதிசயமாய் இருந்தது. நான் தண்ணீர் பாட்டில் கொண்டு வருவது இல்லை. என்னிடம் கைக்குட்டை இல்லை. வாங்கும் அளவுக்கு வசதியும் இல்லை. அடி பட்டால் இப்படி எல்லாம் செய்யலாமா என்ன என்ற யோசனை ஒரு புறம் இருந்தது.

மறுபுறம், அவங்க ரெண்டு பேரும் ஒரே லெவல். நாம ஏணி வைச்சாலும் அவங்க மாதிரி முடியாது. ரெண்டு பேரும் வாத்தியார் பசங்க. ரெண்டு பேரும் ஜட்டி போட்டு டக் இன் பண்ற பணக்கார குரூப். நாம ஆசைப்படலாமா? தப்பு, தப்புன்னு என் உள் மனசு சொல்லிச்சு. அவங்க ரெண்டு பேரும் சைக்கிள்ல போறதை பாத்த எனக்கு ஒரு புறம் கஷ்டமா இருந்தாலும், இன்னொரு புறம் அந்த ஜோடி நல்லா தான் இருக்குற மாதிரி இருந்துச்சு.

ஆனாலும் அந்த சங்கர் வந்த பிறகு இந்த கதிர் என்கிட்ட கம்மியா பேசுறது எனக்கு கஷ்டமாவே இருந்துச்சு. நான் சும்மா சும்மா கோபப்பட ஆரம்பிச்சேன். எல்லோரும் என்னை வித்தியாசமா பாத்தாங்க. உதவி லீடர் வேலை எல்லாம் இப்ப அந்த சங்கரே பண்ண ஆரம்பிச்சான். நான் பழைய படி ஆயிட்டேன். மனசு மட்டும் என்னவோ சும்மா சும்மா அடிச்சிக்குது.

அந்த சனிக்கிழமை வந்துச்சு, லீவு நாள், ஊர்ப்பசங்க கூட ஜாலியா காலைலே கிணத்துக்கு குளிக்க போனோம். சூப்பரா என்ஜாய் பண்ணினோம். சும்மா தண்ணிக்குள்ள உள் நீச்சல் அடிச்சு, அடுத்தவன் டவுசரை உருவி போட்டு விளையாடினோம், அப்புறம், தண்ணிக்குள்ள அவன் டவுசரை ஒளிச்சு வைச்சு கண்டு பிடிச்சு விளையாடினோம். சின்ன பசங்க எல்லாம், அம்மணகுண்டியா மேலே இருந்து டைவ் அடிச்சாங்க. அதைப்பார்த்தா எனக்கு அப்ப ஒண்ணும் அசிங்கமாவே தெரியலை.

நீச்சல் தெரியாம வந்த பையனை பிடிச்சு தண்ணில தள்ளி விட்டோம். ஒரு பக்கம் டயரை போட்டு நீச்சல் படிக்கிற பசங்களை விரட்டி அடிச்சோம். தண்ணிலே இருந்ததுல நேரம் போனது தெரியலை. வெளிய வந்து பாத்தா, உள்ள்ங்கையில் இருந்த தோல் எல்லாம் சுருங்கி போய், உள்ளங்கால் தோல் எல்லாம் சுருங்கி போய் இருந்துச்சு. என்னோட கலருக்கு அது பளிச்சுன்னு தெரிய எல்லாரும் வருத்தம் சொன்னாங்க. "எனக்கு தான் வலிக்கவே இல்லையே" என்று சொல்லி கொண்டு இருந்தேன்.

எல்லோரும் கிளம்பி போகும் போது முருகன் தோட்டத்துக்கு போனோம். அவங்க அண்ணன் தான் இருந்தாரு. அவர் அப்ப தான் பனை மரத்துல இருந்து நொங்கு இறக்கி இருந்தாரு. எங்களை பாத்ததும் நொங்கு சாப்டிறீங்களான்னா தான் கேட்டாரு. எல்லோரும் சரின்னு சொல்ல, அவர் சீவி தந்தாரு. இள நொங்கு லைட் பச்சை, வெள்ளை கலர்ல இருக்க நொங்கா தேடி நான் சாப்பிட்டேன், அது தான் சூப்பரா இருக்கும். அதுல விரலை விட்டு உள்ள இருந்து அந்த தண்ணியை சிந்தாம குடிக்கிறது தான் அழகு. தண்ணி குடிச்சுட்டு, அப்படியே விரலை வைச்சு அந்த நொங்கை நோண்டி சாப்பிட்டோம். அதுல ஒரு சில பனங்காயும் இருந்துச்சி. வேற வழி இல்லாம அதையும் சாப்பிட்டோம். சின்ன பசங்க சாப்பிட்டா வயிறு வலி வரும்ன்னு அவங்களுக்கு கொடுக்கலை. ஆனா சின்ன பசங்க அதை தான் கேட்டாங்க, ஏன்னா, அதுல தான் வண்டி செஞ்சு உருட்ட முடியும். முருகனோட அண்ணன் சின்ன பசங்களுக்கு அழகா அஞ்சே நிமிசத்துல நாலு வண்டி செஞ்சு தந்தாரு. சின்ன பசங்க குஷியா வண்டி ஓட்ட ஆரம்பிச்சாங்க.

நாங்களும் ஜாலியா சிரிச்சு சிரிச்சு பேசி ஊருக்கு வந்தோம். வந்து சேரும் போது பாத்தா, டைம் 0300 மணி. எங்க அம்மா என்னை கோபமா பாத்தாங்க.
"ஏலே, இவ்வளவு நேரம் சாப்பிடாம இருந்தா வயிறு என்னத்துக்கு ஆவுறது?" அப்படின்னாங்க.
"துரை, பெரிய மனுஷன் ஆயிட்டாருல்ல. நம்ம சொன்னால்லாம் கேக்க மாட்டாரு" என்ற அப்பாவின் சத்தம் உள்ளே இருந்து வந்தது. அதைக்கேட்டதும் நான் பயந்து போய் எதுவும் சொல்ல வில்லை. சத்தமில்லாமல் சாப்பிட்டேன். சாயந்தரம் ஆனது, மாட்டுக்கு தீவனம் கொணந்து போட்டேன்.

"ஏலே சீனு, இங்க வாலே" இது அம்மா..
"என்னம்மா வேணும்?" என்றேன் நான்.
"உங்க அப்பா பணம் தந்தாரு. படம் பாக்க சொல்லி, வாரியா?" என்றாள் அம்மா.
குஷியாகி இரண்டே நிமிடங்களில் தயாரானேன் நான்.

ஊருக்கு வெளியே உள்ள அந்த டூரிங்க் டாக்கிஸில் பிள்ளையார் பாட்டு கேட்டது.
"எம்மோய். முதல் பாட்டு போட்டுட்டாங்க. ரெடியா?" என்றேன் நான்.
"எலே, நான் வர லேட் ஆகும், பக்கத்து வீட்டு அக்கா கூட வாரேன், அந்த முருகனும் வருவான். நீ அவன் கூட முன்னால போய் நில்லு. வேணும்னா முருக்கு வாங்கி சாப்பிடு" என்று ஐந்து ரூபாய் தந்தாள் அம்மா.
"சரிம்மா" என்ற நான் முருகனை தேடி அவன் வீட்டுக்கு போனேன். அவன் எனக்காகவே தயாராய் இருந்தது போல் தெரிந்தது எனக்கு.

"வாலே சீனு. போலாமா?" என்றான்.
இருவரும் பொடி நடையாய் பேசிக்கொண்டே போனோம். மெதுவாய் சூரியன் மறையும் நேரம் அது. வானம் தன் கலரை மாற்றிக்கொண்டு இருந்தது. நீலம், மஞ்சளாய் மாறி அது இன்னும் சிவப்பாய் மாற ஆரம்பித்தது. அந்த கலரில் வானத்தில் அழகாய் பறந்து சென்ற கொக்கு கூட்டம் ஒரு முனையில் இருந்து மறு முனை வரை விமானம் போன்ற வடிவு எடுத்து போனது.

திடீரென அங்கே மேய்ந்து கொண்டு இருந்த கோழிகளிடம் ஒரு மாற்றம், சத்தத்துடன் ஓட ஆரம்பித்தது. பின்னால் சின்னஞ்சிறு கோழிக்குஞ்சுகள் ஓடின. வேகமாய் எங்கோ இருந்த வந்த பருந்து ஒன்றி ஒரு குஞ்சை மட்டும் தூக்கி கொண்டு போனது, அந்த தாய் கோழி அந்த பருந்தை விரட்ட முயன்று பின்னால் ஓடி தோற்றுப்போனது. அந்த தாய் கோழியின் சோகம் என்னை ஆழ்த்தியது. அதை பார்த்ததும் என கண்ணில் கண்ணீர்.

"ஏலே சீனு, என்ன ஆச்சு? பருந்துன்னா கோழிக்குஞ்சை தூக்க தான் செய்யும். அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாது, இன்னும் மீதி உள்ள குஞ்சுகளை அந்த தாய் கோழி பாத்துக்கும்" என்றான் முருகன்.
இதற்கு முன் நான் பார்த்து இருந்தாலும், இப்போது என்னால் ஜீரணிக்க முடிய வில்லை. ஒரு வினாடி என் கண் முன் அந்த கதிரும், சங்கரும் வந்து போனார்கள். எனக்கு அந்த சங்கர் பருந்தாய் தெரிந்தான். கதிர், கோழிக்குஞ்சாய் தெரிந்தான். பார்த்து பார்த்து வளர்த்த தாய்கோழியாய் நான் இருந்தேன். அதனாலோ என்னவோ அதை பார்த்ததும், எனக்கு அழுகை வந்தது.

கண்களை துடைத்துக்கொண்டு தியேட்டர் போனேன். அங்கு போனதும் சோகம் மறந்தது. அவ்வளவு கூட்டம். வேடிக்கை பார்த்ததில், அம்மா வந்ததை மறந்து விட்டேன். அம்மாவே என்னை தேடி வந்து பணம் தந்தாள். டிக்கெட் எடுத்து, அவளிடம் கொடுத்து விட்டு, நானும் முருகனும் மட்டும் ஆண்கள் வரிசையில் உள்ளே போனோம். படம் ஆரம்பித்தது, முருகன் விசில் அடிக்க, ஒரே ஜாலியாய் இருந்தது. நேரம் போனதே தெரிய வில்லை. இடை வேளை வந்தது.

கையில் இருந்த ஐந்து ரூபாயை எடுத்து கொண்டு நானும் முருகனும் கடைக்கு போனோம். முருக்கு வாங்கி கையில் வைத்து இருந்தேன் நான்.

"ஏலே, நீ இங்கேயே நில்லு, நான அவசரமாய் ஒண்ணுக்கு போயிட்டு வரேன்" என்றான் முருகன்.
"சரில" என்ற நான் சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன், அப்போது யாரோ என்னை தட்டுவது தெரிந்து திரும்பினேன், அதிர்ச்சி ஆனேன் நான். ஆம், அது கதிர்.

"என்ன பண்ணுத இங்க" என்றான் அவன் என் கையில் இருந்த முருக்கை பிடுங்கி கொண்டான்.
"படம் பாக்க வந்தேன், நீ எப்ப வந்த, நான் பாக்கவே இல்லை" என்றேன் நான்.
"நீ வெளிய நிக்கும் போதே வந்துட்டேன். அப்பா கூட வந்தேன். அதான் உன்னை டிஸ்டர்ப் பண்ணலை. நீ சத்தம் போட்டது, முருகன் விசில் அடிச்சது எல்லாம் எனக்கு தெரியும்" என்றான் அவன்.
"எங்க இருந்த?" என்று அதிசயமாய் கேட்டேன்.
"சேர் டிக்கெட்" என்றான் அவன்.
ம்ம்ம்.. அது பணக்காரங்க எடுக்குற டிக்கெட். எங்களுக்கு எல்லாம் தரைடிக்கெட் தான் கரெக்ட் என்று மனதிற்குள் நினைத்தேன்.

"சாரிடா. அன்னைக்கு உன்னை பாக்க வந்தது, அந்த பாலத்துக்கு கீழே போறதுக்கு தான். நீ பழக்கி விட்டுட்ட. அது இல்லாம இருக்க முடியலை. நீ தான் இப்பேல்லாம் பேசுறது இல்லை, எனக்கே கஷ்டமா இருந்துச்சு. நான் என்ன பண்றது" என்றான் அவன்.
"அப்படி எல்லாம் இல்லை. பரிட்சை வந்துச்சு. நீ படிக்கிற பையன். உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு தான் ஒண்ணும் பண்ணலை. எனக்கு உன்னை எப்பவும் பிடிக்கும்" என்றேன். ஏன் சொன்னேன் என்று எனக்கே தெரிய வில்லை.
"கதிரு உன்னோட தெத்துப்பல்லும், கன்னங்குழியும் சூப்பர்" என்றதும், அவன் சிரித்தான், அவன் சிரிப்பில் நான் விழுந்தேன். மெதுவாய் அவன் கைகளைப்பற்றிய நான் அழுத்தம் கொடுத்தேன்.

அந்நேரம், யாரோ என் கைகளை விலக்குவது தெரிந்தது. திரும்பினால், சங்கர்.

"என்ன கதிரு, தரை டிக்கெட் கிட்ட எல்லாம் என்ன பேச்சு, வாடா போலாம்" என்று அவன் கையை பிடிக்க , அந்த கையில் இருந்த முருக்கு கீழே விழ கதிர் எதுவும் சொல்லாமல் அந்த சங்கர் பின்னே போனான்.

அவனுடன் என் மனதில் இருந்த எல்லா சந்தோசமும் போனது. முருக்கு விழுந்த இடத்தையே பார்த்து கொண்டு இருந்தேன் நான்.
பின்னால் இருந்து முருகன் என்னை கூப்பிடுவது என்னோட லெவல் தரைடிக்கெட் தான் என தோன்றியது.

(தொடரும்)

கிராமத்து மின்னல்கள்حيث تعيش القصص. اكتشف الآن