கிராமத்து மின்னல்கள்
(பகுதி:11)
வாசலில் இருந்து வெளியே வந்தவுடன், என்னை பார்த்த சங்கர் அவசரமாய் அருகில் வந்தான். என் கழுத்தில், நெற்றியில் கை வைத்தான்.
"என்னடா ஆச்சு? உடம்பு சரி இல்லையா?" என்றான்.
நான் அவன் கைகளை விலக்கி,
"நான் நல்ல தெம்பா இருக்கேன். எனக்கென்ன?" என்று கைகளை விரித்து காட்டினேன்.
"அப்புறம் ஏன் ஸ்கூல் வரலை?" என்றான்.
"வரணும்ன்னு தோணலை" என்றேன் நான்.
"நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? உனக்கு என்னமோ ஆச்சுன்னு?" அவன் சொன்னதும், நான் சிரித்து விட்டேன். அவன் கோபமானான்.
"நான் சீரியஸா சொல்றேன், நீ என்ன கிண்டல் பண்ற?"
"அப்படி இல்ல, எனக்காக இவ்வளவு பீல் பண்றியே அதுக்கு தான்" என்றேன் நான்.
"அப்படின்னா, நான் நேத்து பேசுனதுல, என் மேல கோவமா?" என்றான் அவன்.
"சே சே.. அப்படி எல்லாம் இல்லை. தூக்கம் வந்துச்சு, அதான் ஸ்கூல் வரலை. வேற ஒண்ணும் இல்லை" என்றேன் நான்.
நான் சொல்லி முடிக்கவும் என்னுடைய அம்மா, காபியுடன், கடலையும் கொண்டு வந்தாள்.
"ஏலேய், தம்பிக்கு காபி ஊத்தி குடு" என்று அவள் அடுப்பு வேலையை கவனிக்க உள்ளே போய் விட்டாள்.
"எடுத்துக்க சங்கர்" என்று அவனுக்கு ஒரு டம்ளரும் நானும் ஒன்றும் எடுத்து கொண்டேன்.
உள்ளே இருந்து அம்மாவின் குரல்,
"தம்பி, சீனி போதுமா?" என்றாள்.
"சீனு, உன்னை தான் கேக்குறாங்க. எனக்கு போதும்" சொன்னான் சங்கர்.
நான் சிரித்து விட்டேன்.
"ஏண்டா?" என்றான்.
"அவங்க கேட்டது என்னை இல்லை. காபில போட்ட சீனி, அதாவது சக்கரையை?" என்றதும் அவனும் சிரித்தான்.
கொஞ்ச நேர மௌனத்துக்கு பின், "அப்படின்னா, நீ சீனி வாசனா, இல்லை சக்கரை வாசனா?" என்றான்.
"குசும்பு......." என்றேன் நான்.
"டேய் சக்கரை" என்றான் சத்தமாக. நான் எழுந்து போய் அவன் வாயை பொத்த, அவன் இன்னும் சத்தமிட, கடைசியில் அடங்கினான் அவன்.
"ஏண்டா சொல்ல கூடாதா?"
"அப்படி எல்லாம் இல்லை. சக்கரைக்கு வேற அர்த்தம் இருக்குடா" என்றேன் நான்.
"என்னடா" ஆர்வமாய் கேட்டான் அவன்.
"போடா, உன் கிட்ட எப்படி சொல்றது? ம்ம்ம்... குஞ்சு டா" என்றேன்.
கேட்டதும் இன்னும் சத்தமாய் சிரித்தான்.
"அப்படின்னா உன் பேரு இனிமே சக்கரை தான்" என்றான்.
"ஏலேய் சீனு" என்ற அம்மாவின் குரல் மறுபடியும்.
"என்னம்மா?" என்றேன் நான்.
"அங்க உன் கண்ணுகுட்டி, அதான் நீ செல்லமா கொஞ்சுவியே, உன் கதிரு கத்துது. என்னனு பாருடா" என்றாள் அம்மா.
அவள் கதிர் என்று சொல்ல, அதை கேட்டதும், என்னை அறியாமல் நான் நாக்கை கடிக்க, சங்கர் என்னை பார்த்து சிரித்தான். என்ன சொல்வது என்று தெரியாததால்.
"வாடா சங்கர், பாக்கலாம்" என்றதும், என்னுடன் வந்தான்.
வீட்டுக்கு பின்னால் சென்றோம். அங்கே தான் மாட்டு கொட்டகை இருந்தது. கொட்டகையின் உள்ளே, இரண்டு பசு மாடுகள் கட்டப்பட்டு இருந்தன. கொஞ்ச தூரத்தில், அழகான அந்த பசுங்கன்று சத்தம் போட்டு கொண்டு இருந்தது. நான் அதன் பக்கம் போனதும், சத்தத்தை நிறுத்தி என்னை பார்த்தது. நான் அழகாய் அதன் கழுத்தை அணைத்து அதன் அகன்ற நெற்றியில் முத்தம் இட்டேன்.
பழுப்பு நிற கலரில் இருந்த அந்த குட்டியின் நெற்றியில் அழகாய் வெள்ளை நிற கோடு ஒன்று. அது அதிஷ்டம் என்று என் அம்மா சொன்னாள். பெண்ணாய் பிறக்கும் என்று எதிர்பார்த்த எங்களுக்கு பையனாய் பிறந்தது அது. எனக்கு அது பிறந்த முதல் நாளே அதை மிகவும் பிடித்து விட, பெயர் வைப்பது பற்றிய பேச்சு வந்த போது, என் அம்மா அந்த உரிமையை எனக்கே தந்தாள். பிறந்து மூன்றாவது நாள் அதற்காக இருந்த பாலை தான் சீம்பாலாய் கதிருக்கு தந்தேன், அதன் பின் அவனுக்கும் எனக்கும் இருந்த நெருக்கம் எல்லாம் என்னை அழுத்த, செல்ல கண்ணுக்குட்டிக்கும் அவன் பெயரே வைத்து விட்டேன். கதிர் என்றால் திரும்பும் அளவிற்கு அத்தனை முறை கதிர் பெயரை சொல்லி பார்த்து இருப்பேன், என்னருமை கன்னுக்குட்டியிடம்.
ஆனால், இதையெல்லாம் எப்படி இந்த சங்கரிடம் சொல்வது, சொன்னால் அவன் ஏளனம் வேறு செய்வான் என்று நான் யோசித்த படி இருந்தேன்.
"டேய், நானும் தொடுறேண்டா" என்ற சங்கர், மெதுவாய் என் பின்னால் நின்று கொண்டு மெதுவாய் அதன் நெற்றியில் தடவினான். அந்த மென்மையும், எதுவும் சொல்லாத கண்ணுக்குட்டியும் அவனுக்கு பிடித்து விட, அவன் தைரியமாய் சற்று அருகில் வந்து தடவினான். செல்ல கண்ணுக்குட்டி அவன் கையில் மெதுவாய் நாக்கை நீட்டி நக்க, பயந்து போய் பின்னால் வந்து விட்டான் சங்கர். நான் சிரித்துகொண்டே, அதை கழற்றி விட அது அம்மாவிடம் போனது. மடுவை தேடி முட்டி முட்டி பால் குடிக்க ஆரம்பித்தது. அதை பார்க்கும் போதெல்லாம் எனக்கு என்னுடைய கதிர் கண் முன் வந்து போனான்,
அதன் அம்மாவிற்கு புல்லும், வைக்கோலும் தந்தேன். அருகில் தண்ணீரும் வைத்து விட, அது சாப்பிட ஆரம்பித்தது.
"கண்ணுக்குட்டி சூப்பரா இருக்குடா" என்றான் அவன். "என்னோட கண்ணுக்குட்டி, அதான் சூப்பரா இருக்கு" என்றேன் நான்.
"சரிடா, எனக்கு நேரமாச்சு, நான் கிளம்புறேன், அம்மாகிட்ட சொல்லிடு" என்றான் சங்கர்.
"ஓகே டா" என்றேன் நான்.
"பை டா சக்கரை" என்றான்.
"டேய்.." என்று அவனை விரட்டுவதற்குள் சைக்கிள் எடுத்து ஓடி விட்டான்.
நான் மனதிற்குள் சிரித்து கொண்டேன்.
அடுத்த இரண்டு நாட்கள் என்னதான் சங்கர் சிரித்து பேசினாலும், பேருக்கு சிரித்து வைத்தேன். ஆனால் மனம் என்னவோ கதிரைத்தான் தேடியது. அவன் பேசாமல் இருந்தாலும், சண்டை போட்டாலும் அவன் பக்கத்தில் இருக்க மனம் வேண்டியது. அவன் இல்லாத நேரத்தில், அவனுடன் இருந்த நினைவுகள் வந்து என்னை அலைக்கழித்தன. அவன் என் மேல் சாய்வதும், என் மடியில் படுப்பதும் என, அவன் நினைவுகளே என்னை மிகவும் வாட்டின. அதே பெஞ்ச், அதே டேபிள் ஆனாலும் கதிர் இல்லாமல் எல்லாம் வெறுமையாய் இருந்தது எனக்கு. அந்த தெத்துப்பல்லும், கன்னங்குழி சிரிப்பும் பார்க்காமல், என்னவோ போல் இருந்தது எனக்கு. சங்கரிடம் கதிரைப்பற்றி கேட்க எனக்கு கஷ்டம் என்பதை விட கூச்சமாய் இருந்தது.
ஒரு வழியாய் அடுத்த திங்கள் வந்தது. காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் போதே கதிரை பார்க்க போகும் சந்தோஷம் இருந்தது. அவனுக்கு இருக்குமா என்ற சந்தேகம் இருந்தாலும், அவனை பார்க்கும் சந்தோஷம் எனக்கு போதுமானதாய் இருந்தது. அவன் ஊரை கடந்து செல்லும் போது அவன் காத்து இருப்பான் என எதிர்பார்த்தேன், ஆனால் அவன் இல்லை.
வகுப்பிற்கு போய் சேர்ந்ததும் என் கண்கள் என்னை அறியாமல் அவனை தேடின. அவன் இருப்பதை பார்த்ததும் மனதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் அவன் என்னை பார்க்க வில்லை. அதில் ஒரு சோகம் தான். இதிலும் அவன் சங்கருடன் பேசுவதை பார்த்தால், இன்னும் சோகமும் கொஞ்சம் கோபமும் இருந்தது.
திடீரென என்னை பார்த்த கதிர், முகம் முழுவதும் சிரிப்பாய், தெத்துப்பல்லும், கன்னங்குழியும் தெரிய அவன் என்னை பார்த்ததும் கத்தினான்,
"டேய், உதவி... எப்படா வந்த?" என்றான் கதிர்.
அவன் சொன்ன அடுத்த வினாடி,
"யாரு, நம்ம சக்கரையா?" என்றான் சங்கர்.
"சக்கரையா? யாரு?" என்றான் கதிர்
"நம்ம சீனு தான், நான் அவன் வீட்டுக்கு போனேனே." என்றான் சங்கர்.
இதைக் கேட்டதும், அரண்டு போனான் கதிர்.
அவன் முகத்த்தில் இருந்த மகிழ்ச்சி அப்படியே சுருங்கி போனது.
நான் மெதுவாய் கதிரின் அருகில் போக, சங்கர் என் கையை பிடித்து இழுத்தான்.