மறுநாள் காலை சந்தியாவின் அனைத்து சொந்தங்களும் வந்தனர்..
நீண்ட நாள் கழித்து சொந்தங்களை கண்டதில் அனைவர் முகத்திலும் சந்தோஷம்.. மதுவிடமும் அவர்கள் நேசமாய் பழகினர்..அத்தை பெண்கள் அர்ச்சனா, நிரஞ்சனா, சித்தி பெண்கள் சுஹாசினி, கமலினி, அத்தை பையன்கள் சிதார்த், ப்ரசன்னா தோழமையுடன் பழகினர்..
வீடே கலகலத்தது மூவர் உள்ளங்களைத் தவிர..
மது, கார்த்திக் புறம் மறந்தும் திரும்பவில்லை..அவளின் பாராமுகம் அவனை வாட்டியது.. மது இப்போது சந்தியாவின் வாழ்வை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தாள்..
கார்த்திக் மதுவிடம் பேச முயற்சித்தான் ஆனால் அவள் அவனருகிலேயே வரவில்லை.. கூட்டத்தோடு கூட்டமாகவே இருந்தாள்..
"என்னப்பா கார்த்திக்.. ஆளே மாறி போய்ட்ட.. முன்னலாம் நாங்க வந்தா ரெண்டு வார்த்த பேசிட்டு அப்பறம் நாங்க இருக்குற பக்கமே வர மாட்ட.. இப்போ என்னடான்னா கிச்சன், ஹாலயே சுத்தி சுத்தி வர்ற..?" என்றார் ஷான்த்தி அத்தை
"அவன் முறை பொண்ணு அர்ச்சனாவ பாக்குற ஆசைல வந்திருப்பான்.. அப்டிதானப்பா கார்த்தி கண்ணா.." என்றார் சித்தி அபிராமி
அந்த அத்தை பெண் அர்ச்சனாவை பார்த்தாள் மது..
கண்ணை கவரும் அழகு.. வெட்கப்படும் போது இன்னும் அழகாக இருந்தாள்..'ஏற்கனவே மது என்மேல செம கடுப்புல இருக்கா.. நெலம தெரியாம நீங்க வேற எரியுற தீயில எண்ணெய் ஊத்துறீங்களே.. இறைவா..!' என்று நினைத்து சிரித்துவிட்டு சென்றான்
"சும்மாவே அவன் ரிசர்வ்டா இருப்பான்.. நீங்க கிண்டல் பண்ணிங்கனா அவன் இந்த பக்கமே வரமாட்டான்.." என்றார் இன்னொரு அத்தை பானுமதி
மதிய உணவின் பின் அனைவரும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தனர்..
"இந்த பொங்கலுக்கு அடுத்து எல்லாரும் எப்ப சந்திக்க போறோமோ.." என்றார் அபிராமி
"அடுத்து இனிமே கல்யாண சீசன் தான.. யார் முதல்ல ஆரம்பிக்க போறீங்க..?" என்றார் ஷான்த்தி