தட தடவென வெடிக்கும் சரத்தைப் போல் துடித்த என் இதயத்தின் ஓட்டத்தை தன் உதட்டின் மொழி வழியாக இறுக்கி நிறுத்தினாள், அவள்.
அடுத்து அவள் உதிர்த்த சொற்கள் என்னுள் ஏதேதோ இனம் கண்டறிய முடியா சிலிர்ப்பினைத் தந்தது. நேற்று நான் அனுபவித்தக் கனவின் மறுபாதியை தன் கனவில் அவள் தொடர்ந்ததை நான் அறிந்தேன். உணர்வுள்ள அனைத்து உயிரணுக்களும் ஏகபோகத்தில் என்னுள் ஆட்டம் போட்டன. என்னவென்று உரைப்பேன்? அந்த நொடியை. மாலை வெயிலின் மஞ்சள் நிறம் கீழ்வானில் செந்நிறம் பூணும் காட்சியைக் கடல் எழுப்பும் "க்கூ" என்ற அலையோசையுடன் கால் தழுவும் நீரின் மணல்வெளியில் காணும் சுகமும் ஈடல்ல, அந்நொடிக்கு.
அவள் கனவின் முற்பாதியை நான் கூற உள்ளூரக் கள்ளூரியிருக்கும் என்பதை நான் அறிவேன். இருவரின் மனப் பிணைப்பும், அந்த நீலக்கடலின் நெஞ்சின் ஆழம் போல், ஆழமாக இணைந்திருப்பதை இருவரும் உணரத் துவங்கினோம்.
"கனவிலும் உன் காதல் பேச்சு சுகமானதே", என்று காதில் மயிலிறகால் வருடிடும் சுகத்தைத் தரும் மூச்சின் குரலால் மெல்ல உரைத்தாள். அவளின் குரலில், நாணத்தில் நெளியும் அவள் அசைவுகள் என் முன் வந்து நின்றது. என் முனையில், ஈரமான இடங்களைச் சொல்லத்தான் வேண்டுமா என்ன?
வீசிடும் தென்றல் காதில் நுழைந்து காணம் பாட, இரத்த நாளங்கள் ஒவ்வொன்றாய் மேலும் கீழும் குதித்தது. அவளை உடனே காண வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் வந்திருக்கும் என்று இந்நேரம் நீங்களே யூகித்திருப்பீர்கள். சரிதான், முளைத்தது அந்த ஆசை, அப்போது அல்ல, கனவு கலைந்து அரைத் தூக்கத்தில் நான் போர்வைக்குள் ஆடிய போதே முளைத்துவிட்டது.
அதற்கும், அவளே அடித்தளம் போட்டாள். ஆண் என்ன? பெண் என்ன? நெடில் என்ன? குறில் என்ன? புணரப் புணர பொருள்கள் புதிதாய் பிறப்பது வழக்கம் தானே!
காதல் - இளமை தாகத்தின் விழுது என்றாலும் சரி, இல்லை தூய நேசத்தின் வேர் என்றாலும் சரி. ஒன்று மட்டும் உறுதி. காதல் மனித உயிரோட்டத்தின் ஒரு முக்கிய நிகழ்வு. அது விபத்தாவதும் சுபமாவதும் அவரவரின் குணத்தைச் சார்ந்தது. நேசம் நிறைந்த அன்பு விபத்தில் முடிவதும்; வேசம் நிறைந்த உறவு வாழ்க்கையாவதும் காலத்தின் கட்டுப்பாட்டில். காலத்தைக் கடத்திச் சென்ற காதல்கள் "அமரம்" அடைந்ததும் உண்டு.
YOU ARE READING
"என்னுயிர் காதலிக்கு,"
Short Storyஇன்னிசையைப் பிரிந்த மெளனத்தின் அழகான உயிரோவியம், இந்த "என்னுயிர் காதலிக்கு," வாருங்கள்! மெளனத்தின் போரொலியில் இன்னிசையைக் கேட்போம்.