இரண்டு

348 14 2
                                    

இம்முறை அவள் என் அழைப்பை ஏற்க, இருவரிடையிலும் இணைப்பு நேர்ந்தது.

ஒரு விதமான நிசப்தம் இருமுனையிலும். இது, வழக்கமான காதலர்களின் "யார் முதலில் பேசுவது", என்ற "ஈகோ" நிசப்தம் இல்லை. சற்றே வித்யாசமானது. இருவருள் யார் கண்ணீர் மறைத்து முதலில் பேசப் போகிறோம், என்றதனால் தோன்றிய நிசப்தம்.

நிரம்பிய மௌனத்தை முதலில் அவளே உடைத்தாள், அவளின் கண்ணீர்த் துளி சிந்தி, விசும்பும் சப்தத்தால். அச்சத்தம் என் காதில் கேட்ட அந்நொடி, மடையை உடைத்த வெள்ளம் போல், அடங்கியிருந்த என் உணர்ச்சிகள் கண்ணீர் வடிவில் கண்களைக் கடந்து, என் உதட்டின் வழியில் "மிஸ்ட் யூ சோ மச்", என்று அவள் காதுள் பாய்ந்தது.

கடக்கும் நொடிக்குள், "லவ் யூ சோ மச். ரொம்ப மிஸ் பன்றேன் உன்ன", என்றாள் மழுங்கிய குரலில். அதுவரை தவித்துக் கோவித்திருந்த என் பேதை மனம், அவளை உடனேக் காண பாதைத் தேடியது. கண்ணீருடன் கோவமும் கலந்து, மறைந்தது.

"சாரி டா. உன் கால் அட்டன் பண்ண முடியல. பெரிம்மா வீட்ல இருந்தேன். அதான், ஒரு "Hi" மட்டும் வாட்ஸாப்ல சென்டு பன்னேன். கோச்சுக்காத", என்று அதட்டிக் கேட்டால் உண்மையைக் கூறும் சிறுமி போல் நான் அதட்டாமலே என் மேல் கொண்ட அன்பால் தானாக வாய் திறந்தாள்.

என் இதயம் முன்பை விட சற்று வேகமாக இப்போது துடிக்கிறது, அவளின் அம்மொழிகளைக் கேட்டவுடன். எங்களின் "புரிதல்" மேலும் பலமாவதை உணர்ந்தேன்.

காதலின் அடித்தளம் "நம்பிக்கை". அந்நம்பிக்கைக் உடையாமல் காப்பது, இருவரையும் இணைத்துக் கட்டிய "புரிதல்" என்னும் அன்புக் கயிறே ஆகும்.

அவ்வன்புக் கயிறு பாசக் கயிறாய் மாறுவது, நம்பிக்கைத் தளம் மனநடுக்கங்களில் சிக்கிச் சிதைவதாலே.

"பரவால்ல....இப்பவும் கொஞ்சம் கோவம் இருக்கு. நம்மள தூரத்துல பிரிச்சு வச்சிருக்கற விதி மேல. உன்ன இப்போ - உடனே - கண்ணோட கண் பாத்து, என் காதல, உன் உதட்டுமேல சொல்ல முடியலனு கோவம் இருக்கு. உன் மேல கோவப்பட வச்ச என் நெஞ்சு மேல கொஞ்சம் கோவம் இருக்கு. ஆனா அது, நீ என் கூட இருக்கற இடமாச்சே. அதான், அங்க இனி கோவத்துக்கெல்லாம் அலெளவ்ட் இல்ல", என்று சொல்லி முடித்ததும்....

"ம்முவா...ம்முவா...", என்று எதிர்முனையில் அவளிடமிருந்து முத்த மழை சத்தமாக வந்தது. இதுவே நேரில் என்றால் சத்தமில்லாமல் பல முத்த யுத்தம் நான்கு உதடுகளிடைய நடந்திருக்கும்.

"சாப்டியா?", என்று நான் கேட்க, "உனக்கும் சேர்த்து சிறிது சாப்ட்டேன்'', என்றாள், கள்ளியாக சிரித்துக் கொண்டு. அவளின் அக்குழந்தை மனம் என்னை அவளை மீண்டும் மீண்டும் நினைக்கத் தூண்டியது. "எனக்காக அவள் எப்படி சாப்பிட முடியும்?", என்று விஞ்ஞான மூளை வினா எழுப்பினாலும், அவளின் அந்த பதில் என்னுள் ஏகாந்தம் பூசி இன்பம் தர, வினாவெல்லாம் விலகிச் சென்றது.

காதலியை கரம் கோர்த்து கடைசி வரை சுகமாய் வாழவே மூளையின் வேலைத் தேவை. காதல் வாழ அன்பு சுரக்கும் மனமே போதும்.

"இனிமே, கோவம் நமக்குள்ள வந்தாலும், பொறுமையும் கூடவே வரணும். நானும் நீயும் போல", என்றாள் அவள்.

"சரி தான். கோவம் - நீ. பொறுமை - நான்", என்று சொல்லி சிரித்தேன்.

குறுஞ்சிரிப்புடன் "ச்சீ.. போடா... என் செல்ல பொறுக்கி... ம்முவா", என்று அன்புடன் தன் சம்மதத்தை வெளிப்படுத்தினாள்.

இருவருக்கும் இணைப்பை துண்டிக்க மனமில்லை. இருந்தும், சிவபூஜையுள் கரடி நுழைந்தார்ப் போல, பேலண்ஸ் தீர்ந்ததால் இணைப்பு தானாகத் துண்டிக்கப்பட்டது.

மழையும் மண் வாசமும் இன்னும் ஓயவில்லை. என் மனதுள் ஈரப்பதம் கூடியது. ஆசை விடைத்தெழ அவளுடன் எடுத்த புகைப்படங்களில் அவளுக்கு முத்தமிட்டு, ''பூங்காற்று புதிதானது" பாடல் வரிகள் என் காதுள் ஒலிக்க கண்ணுறங்கினேன்.

"இரண்டு உயிரை இணைத்து விளையாடும்.... பூங்காற்று" - சிரித்தேன்

"என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ!" - அவளை நினைத்தேன்.





"என்னுயிர் காதலிக்கு,"Onde histórias criam vida. Descubra agora