"கண்ணே கலைமானே, கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே....", என்று என்னை யாரோ செல்போனில் அழைக்கலாயினர்.
நீரின் ஆழத்திலிருந்து மேலே வரும் நீர்க்குமிழி போல் நானும் மெல்ல மெல்ல நித்திரையிலிருந்து நிஜத்திரைக்கு வந்தேன். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து மீண்டு எழும் போது நம் அனைவருக்கும் நம்மைச் சுற்றி நடப்பவையெல்லாம் ஓடும் இரயிலின் சத்தம், தூரத்தில் தொடங்கி நம்மிடம் நெருங்க நெருங்க ஆழமாய் கேட்பது போல் மெல்ல மெல்ல நம் காதில் விழும். அவ்வாறாக, என் தலைமேல் முழு வேகத்தில் சுழலும் காற்றாடியின் காற்றைக் கிழிக்கும் "கொய்ங்" சத்தமும் , "ஹல்லோ... ஹல்லோ....ஹலோ எப் எம்...", என்று பாடும் ரேடியோ சத்தமும் என் காதுள் தெளிவாய் ஒலித்தது."நமது ஹலோ எப் எம்மின் இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் இணைந்து வழங்குபவர், 'இந்தியாவின் மிகப் பெரிய ஜவுளி மாளிகை திருச்சி சாரதாஸ்'. ஹலோ எப் எம் 106.4 'ஆத்திச்சூடி'. வணக்கம் நண்பர்களே. இன்றைய இராசி பலன் சொல்கிறார் 'ஜோதிட சிகாமணி' கே.பி.வித்யாதரன் அவர்கள்" , என்று சொல்லி முடிக்கும் போது முழு சுய நினைவிற்கு வந்து விட்டேன். ஆயினும், கண் திறக்க கடுப்பு இருக்கத்தானே செய்கிறது. "இராசி பலன்", என்று கேட்டதும் கடுப்பைக் களைந்து சடக்கென்று பரபரப்புடன் எழுந்தேன். ஏனென்றால், "இராசி பலன்" கேட்க அல்ல, நேரம் 6.30 ஆகி விட்டது என்பதனால்.
"அப்போலேந்து, உன் போன்ல அலாரம் அடிச்சுண்டேயிருக்கு. அது கூட காதுல விழாத அளவுக்கு நன்னா தூங்கற. முதல்ல அத அனே.", என்று காலை சுப்ரபாதம் பாடினாள் என் தாயார். ஒன்றும் பேசாமல் போர்வைக்குள் உட்கார்ந்து கொண்டு முன்னும் பின்னும் தூக்கக் கலக்கத்தில் ஆடினேன். "6.30 ஆச்சு மணி. எழுந்து பல்லத் தேச்சு, குளிச்சு, காலேஜ் கிளம்புடா", என்று ஸஹஸ்ரணாமமும் சேர்ந்து பாடினாள்.
"நான் அலாரம் வைக்கவே இல்லையே. அதோட, கண்ணே கலைமானே அலாரம் டோன் இல்லையே", என்று எனக்குள் என்னுடன் பேசிக் கொண்டே போனை எடுத்து பார்த்தேன்.
![](https://img.wattpad.com/cover/193010199-288-k297524.jpg)
KAMU SEDANG MEMBACA
"என்னுயிர் காதலிக்கு,"
Cerita Pendekஇன்னிசையைப் பிரிந்த மெளனத்தின் அழகான உயிரோவியம், இந்த "என்னுயிர் காதலிக்கு," வாருங்கள்! மெளனத்தின் போரொலியில் இன்னிசையைக் கேட்போம்.