ஒற்றை கள்வன்

357 74 83
                                    

இளவரசனின் ஆணைக்கிணங்கி படைகள் நின்ற பொழுதில், பெரும் பிரளயம் வந்து ஓய்ந்த்ததை போல் இருந்தது. புழுதி படலங்கள் காற்றினில் கரைய, கள்வன் இப்போது தெளிவாக தெரிந்தான். படைகளிலிருந்து பாதுகாப்பான தொலைவில் நின்று விட்டிருந்தான் அவன், இருப்பினும் இளவரசனின் அம்புகள் எட்ட இயலாத தொலைவில்லை அது. இருந்தும் அவன் என்ன கூற விழைகிறான் என்பதில் இளவரசன் ஆர்வமாக இருந்த படியால், ஏதும் செய்ய வேண்டாமென தன் படைகளுக்கு உத்தரவிடிருந்தான். அனைவர் கண்களும் அந்த ஒற்றை கள்வன் மீதே இருக்க, அவர்களின் கைகள் வாளின் பிடியில் தோய்ந்து கொண்டிருந்தன. நிலையை கண்டு, இளவரசனிடம் ஏற்கனவே சரணடைந்த வெட்டூர் பாலையின் காளையன் கார்கோடன். தன் குதிரையை செலுத்தி இளவரசன் தேரின் அருகில் வந்து நின்றான்.

சட்டென ஒற்றை கள்வன் தன் வேல் கம்பை ஓங்கி பிடிக்க, படை வீரர்களின் கரங்கள் ஒரே நொடியில் "ஸ்ரிஈஈஈல்ல்ல்......" என்ற சத்தத்துடன் தன் உடை வாளை எடுத்தன. காலாட்படையின் கேடையங்கள் பேரொளியுடன் அரண் போல மாற, அவர் கைகளிலிருந்த வேல் முனைகள் கள்வனின் மார்பை குறி பார்த்து இருந்தன. இளவரசனின் ஒரு இசைவு மட்டும் கிடைத்தால் கள்வன் உடல் முழுதும் வேல்களும் வாள்களும் ஒரு நொடியில் கூறு போட்டு விடும். ஆனால் இளவரசன் இசையவில்லை இன்னும் பொறுமையே காத்தான். கள்வன் இவை எதையும் பொருட்படுத்தாமல், தன் வேல் கம்பின் கூரிய முனையால் , காலாட் படையின் ஒரு எல்லை முதல் அது நீண்டு முடியும் மறு எல்லை வரை , காற்றில் ஒரு கொடு கிழித்தான். பின் , தன் வேலை மீண்டும் மண்ணில் சட்டென ஊன்றினான்.

தன் முன்பிருந்த, படை முழுதும் தன் பார்வையை செலுத்தியவாறு,

" நீவிர், திருக்காவூர் பாலையை அடைந்துள்ளீர்... இப்பாலையின் காளையன் , கட்டியங்கன் நான். இப்பாலையை கடக்க எண்ணினால், உங்கள் உயிர் மட்டுமே உமது சுமையாயிருக்க வேண்டும். நீர் அணிந்துள்ள ஆபரணங்கள், கவசங்கள், குண்டலங்கள் அனைத்தையும் ஒரு மூட்டையில் இட வேண்டும், நீர் கொண்டு செல்லும் கிழங்கு கீரை ஏனைய உணவு பொருள்களில் உம் தேவையை மிஞ்சிய அனைத்தையும் இரண்டாம் மூட்டையில் இட வேண்டும், அவை இந்நில மக்களுக்கு சொந்தம். நீர் சுமக்கும் கோழி, ஆடு ஏனைய கால்நடைகள் எங்கள் ஓநாய்களுக்கு சொந்தம். உம் குதிரைகளில் கால் பங்கு இந்நில புலிகளுக்கும் , நரிகளுக்கும், எச்சங்கள் வல்லூருகளுக்கும் சொந்தம். இதை நீர் பறி என்று எடுப்பீராயின் பறி, இல்லாதவர்க்கு இருப்பவர் செய்யும் நெறி என்று எடுத்தால் நெறி , அது உம் பாடு. இதற்கு நீர் ஒப்புக் கொண்டால், இப்பாலையை நீர் கடக்கும் வரை உமக்கு நாங்களே காவல். "

கொற்றவைHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin