வேலை என்று காரணம் சொன்னாலும்.. தன்னுடன் பேசுவதற்கு தான் இதையெல்லாம் குணா செய்கிறான் என்பது புரிந்தது மதுவுக்கு.
எவ்வளவு வற்புறுத்தி கேட்டாலும் எதையும் சொல்லக்கூடாது.. குணாவிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும்.. என தன்னால் முடியாத விஷயங்களை மனதுக்குள் உறுதியாக எண்ணிக் கொண்டாள் மது.
தன்னை எவ்வளவோ திடப்படுத்திக் கொண்டு.. குணா கேட்ட பைல்களை எடுத்துக்கொண்டு அந்த அறைக்குள் மீண்டும் வந்தாள் மது.
சுமித்ராவுடன் போனில் பேசிக் கொண்டிருந்த குணா.. “நா.. நான்.. அப்புறம் பேசுறேன்..” என சொல்லிவிட்டு போனை கட் பண்ணினான்.
மதுவிடம் சில வேலைகளை கொடுத்து விட்டு.. தன் வேலையில் மூழ்கினான் குணா.
இந்த தனிமையை குணா ஏற்படுத்திக் கொண்டதே.. தன்னிடம் பேசுவதற்கு தான் என மது நம்பிக் கொண்டிருக்க.. குணா எதுவும் பேசாமல் தன் வேலையில் மூழ்கியிருக்க.. குழப்பத்துடன் அவனை பார்த்தாள் மது.
மது தன்னை கவனிப்பது தெரிந்தாலும் கண்டு கொள்ளாதவன் போல நடந்து கொண்டான் குணா.
கடந்த காலத்தின் நிகழ்வுகள் விலகியிருக்க தூண்டினாலும்.. காதல் கொண்ட மனம் குணாவை நெருங்க தூண்டியது.. விலகவும் முடியாமல் நெருங்கவும் தவித்துக் கொண்டிருந்தாள் மது.
தன்னுடைய குணா.. தன் அருகில் இருந்தும் பேசாமல் இருக்கிறானா.. என கவலையாக இருந்தது மதுவுக்கு. அப்படியானால் குணா தன்னை மறந்துவிட்டு வேறு ஒருத்தியை.. வலித்தாலும் அதுதான் நிஜம் என நினைத்தாள் மது.
நேரம் கடப்பதே அறியாமல் வேலையில் மூழ்கியிருந்த குணாவின் மீது தன் பார்வையையும் அவ்வப்போது பதித்தபடி இருந்தாள் மது.
ஆனால் தன் மது விலகியிருக்க முடியாமல் தன்னை ரசித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து உள்ளம் குதூகலித்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் வேலையில் கவனத்தை செலுத்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தான் குணா.