குணா தனக்காக தன் தாயையும் தமக்கையையும் எதிர்த்து நிற்பது மதுவின் மனதுக்கு வருத்தமாக இருந்தது. இந்த காதலுக்கான தகுதி தனக்கில்லையே என எண்ணி மனம் நொந்தாள் மது.
குறைந்தபட்சம் குணாவிடம் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லிவிடு.. அதன்பின் என்ன நடந்தாலும் சரி.. குணாவுக்கு உண்மையாக இருந்த திருப்தியாவது உனக்கு கிடைக்கும்.. என மதுவின் மனம் சொல்லியது.
“குணா.. நா.. நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்..” என தயங்கி தயங்கி தொடங்கினாள் மது.
“ம்.. சொல்லு மது..” என்ற குணா.. அவள் சொல்ல நினைப்பதை உணர்ந்து கொண்டு.. ஆறுதலாக அவள் கரத்தை பற்றிக் கொண்டான்.
“அ.. அது.. அன்னைக்கு..” என மது தொடங்க.. குணாவின் அலைபேசி இடைஞ்சல் செய்தது.
“முக்கியமான கால் மது.. பேசிக்கிறேன்..” என மதுவிடம் சொல்லிவிட்டு பேசத் தொடங்கினான் குணா.
தொழில் நிமித்தமான அந்த அழைப்பு சில நிமிடங்கள் நீண்டது. மது குணாவிடம் பழைய நிகழ்வுகளை சொல்ல.. தன்னை திடப்படுத்திக் கொள்ள முயன்றாள்.
குணா போன் பேசி முடிக்கையில்.. அறைக்கதவு தட்டப்பட்டது. மஞ்சுளா தான்.. குணாவை அழைத்தார்.
“ஆங்.. இதோ வர்றேன் ம்மா..” என்ற குணா மதுவை பார்க்க அவள் ஏக்கமாக அவனை பார்த்தாள்.
அவள் மனதை புரிந்து கொண்ட குணா.. “அக்காவை வீட்டில விடுறதுக்கா இருக்கும்.. நான் கொண்டு விட்டுட்டு வர்றேன்..” என்றான். மறுக்க முடியாமல் சரியென தலையசைத்தாள் மது.
“அக்காவை கொண்டு வீட்டில விட்டுட்டு வா..” என்றார் மஞ்சுளா குணாவிடம்.
சரியென்ற குணாவும் சுமித்ராவை அவள் வீட்டில் விட சென்றான். “உனக்கு எங்களை விட அவதான் முக்கியமா போய்ட்டாளா டா..” என கேட்டாள் சுமித்ரா.
“நீங்களும் வேணும்னு தான் நினைக்கிறேன்..” என்றான் குணா.
“இனிமே அவளை தேடமாட்டேன்னு சொன்னதெல்லாம் பொய்.. அவளைத்தான் தேடி அலைஞ்சிருக்க..” என்றாள் சுமித்ரா.