மது தன்னை பார்க்க வந்ததை திவ்யா.. குணாவிடம் சொல்லும் முன்பே அவள் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.
குணாவின் நம்பரும் நினைவில் இல்லாததால் அவனுக்கு தகவல் தெரிவிக்க முடியாமல்.. மதுவின் எண்ணுக்கு தான் திவ்யா அழைத்தாள்.
அழைப்பு ஏற்கப்படவில்லை.. தன்னிடம் பேசும்போதே மது அங்கிருந்து கிளம்புவதாக சொன்னாளே.. அப்படியானால் இந்நேரம் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டுமே.. எதற்கும் அங்கே சென்று பார்த்துவிட்டு கிளம்பலாம் என முடிவு செய்தாள் திவ்யா.
முன்பு திவ்யா தங்கியிருந்த அந்தப் பகுதியில்.. டாஸ்மாக் இருந்தது. குடியிருப்பு பகுதியில் இருப்பதால் குடிமகன்களின் தொல்லை தாங்காமல்.. அதை அகற்ற பலமுறை போராட்டம் நடத்தினர் குடியிருப்பு வாசிகள்.
ஆனால் அரசியல் பின்புலம் காரணமாக டாஸ்மாக் அகற்றப்படவில்லை.. பணி முடிந்து இரவு வேளைகளில் திரும்ப நேரிடும் போது ஏற்படும் அசௌகரியம் கருதி வேறு இடத்துக்கு மாறியிருந்தாள் திவ்யா.
வீட்டில் நடந்த பிரச்சனைகளில் அதெல்லாம் நினைவில் இல்லாமல் போக மது அங்கே சென்றிருந்தாள்.
ஆட்டோக்காரர்.. “இந்த ஏரியாவுக்கு ஏன்மா..” என திவ்யாவிடம் கேட்டார்.
“ப்ரெண்ட் இருக்காளானு பார்த்துட்டு கிளம்பிடலாம் ண்ணா..” என்றாள் திவ்யா.
“போன் எடுக்கலையா மா..” என அவர் கேட்க.. “இல்லை ண்ணா.. ட்ரை பண்ணிட்டே தான் இருக்கேன்..” என்ற திவ்யாவின் மனதில் மதுவுக்கு என்னவாயிற்றோ என்ற பயம் சூழ்ந்தது.
தான் முன்பு தங்கியிருந்த அந்த வீட்டுக்கு சென்று பார்த்தாள் திவ்யா. மது அங்கில்லை.. என்ன செய்வதென புரியாமல் மீண்டும் மதுவின் எண்ணுக்கு அழைக்க.. அது அருகில் எங்கோ தான் ஒலித்தது.
இருளுக்குள் இருந்து ஒளிர்ந்த அந்த அலைபேசியின் சத்தத்தை வைத்து மது.. மது என அழைத்தபடியே தேடி பார்த்தாள் திவ்யா.