தான் உடலால் அசுத்தமானவள்.. குணாவின் காதலுக்கு.. அன்புக்கு தகுதியானவள் அல்ல என மதுவின் மனதில் ஆழ பதியச் செய்திருந்தது அந்த நாளின் நிகழ்வுகள்.
இரண்டு வருடங்கள் கடந்த பின்னும் அந்த எண்ணம் மதுவின் மனதில் உறுதியாக இருந்தது. ஆனால் குணாவை நேரில் கண்டதும் நெருங்க மனம் துடித்தது. நினைவுகள் விலகிச் செல்ல தூண்டியது.
அன்று குணா நெருங்கி வருகையில் தடுக்கவும் விலகவும் தான் முனைந்தாள் மது.. தன் மனதின் உண்மையான உணர்வுகளை மறைத்து.
“எனக்கு உரிமை இல்லையா மது..” என குணா கேட்கையில்.. உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது குணா.. என மதுவின் மனம் சொல்ல.. அவனுள் ஒன்றிப்போனாள் மது.
குணாவின் தீண்டலின் மென்மை.. காதலும் அன்பும் வேண்டும் வேண்டும் என மதுவின் மனமும் உடலும் துடித்தது.
எப்போது வேண்டாமானாலும் குணா இந்த பிரிவு குறித்து கேள்வி எழுப்பலாம்.. சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல்.. வேண்டாம்.. இந்த வாழ்க்கை வேண்டாம்.. இந்த தவிப்பு வேண்டாம்.. குணாவுக்கு நா.. நான்.. வேண்டாம்.. என கண்ணீருடன் நினைத்தாள் மது.
அப்போது அவள் கவனத்தை திசைமாற்றியது அந்தக் குரல்.. தேவியின் குரல்.. “என்னங்க.. என்னாச்சு.. என்னாச்சு..” என பதற்றமாக ஒலித்தது அந்தக் குரல்.
தேவியின் கணவர் சங்கரன் மூச்சு திணறலால் அவதிப்பட.. காலியான மருந்து பாட்டிலை கையில் வைத்தபடி செய்வதறியாது பதறிக் கொண்டிருந்தார்.
அதைக் கண்டதும் பதறிய மது.. தேவியின் கையில் இருந்த மருந்து பாட்டிலை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த மெடிக்கலை நோக்கி விரைந்தாள்.
தேவி சங்கரன் தம்பதியருக்கு பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும் பல ஆண்டுகளுக்கு முன்பே வேலை காரணமாக இடம்பெயர்ந்திருந்தனர். ஒரு மகன் ஒரு மகள் இருவரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.
தேவி சங்கரன் இருவருக்கும் வயதான காலத்தில் வாய்த்தது கொடும் தனிமை மட்டுமே.. அவர்கள் இருவரும் மனமொத்த தம்பதிகளாக இருந்ததால்.. அந்த தனிமையிலும் நிம்மதியாகவே வாழ்ந்து வந்தனர்.