முகில் - 04

313 66 28
                                    

சென்னையிலிருந்து திரும்பியவுடன் பாண்டியன் தேடியது கதிரை மட்டும்தான். இரண்டு நிமிட தொலைபேசி அழைப்பில் தெரிந்து கொள்ளும் விஷயமே என்றாலும் நேருக்கு நேராக நின்று பேசியே பழகிய மனிதர். அதுதான் சரி என்பது போல் வீட்டிற்கு வந்தவுடன் நேராக கதிரின் அறைக்கு செல்ல, உடன் வந்த சந்தானம் மட்டும் கூட்டத்திலேயே நின்று விட, லட்சுமி என்ன வென்று அவர் பின்னே சென்றார்.

அன்று கதிர் தன் முடிவை சொல்லி சென்ற பின் இருவருமே பார்த்துக்கொள்ளவில்லை.

அப்பாவின் மௌனம் கோபமா? வருத்தமா? என்கிற மனப்போராட்டத்தை தாண்டி , கதிரின் குற்றவுணர்வு அவனை அவரிடமிருந்து தள்ளி நிற்க செய்தது. அவனுக்காக அவர் சென்னைக்கு சென்றது கூட அவனுக்கு தெரியப்படுத்தபடவில்லை.

இரண்டு நாள் சுயபரிசோதிப்புக்குப்பின் அன்று தான் ஒரு தெளிவோடு மடிக்கணிணியில், தனக்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தவன், வாயிலில் கேட்ட அரவத்தில் எழுந்து பார்க்க அவனிடம் வந்த பாண்டியன் கதிர் அப்பா என்பதற்குள் கையசைப்பில் அவனை நிறுத்தி

"அந்த பொண்ண நீ அடிச்சியா?" என அவன் கண்களை பார்த்து நேராக கேட்டார்

அந்த நேரடி தாக்குதலில் சற்று அதிர்த்தவனுக்கு கேள்வி புரிந்தபோது என்ன நடந்திருக்கும் எனவும் புரிந்தது.

"அப்பா நான் என்ன சூழ்நிலையில.." என அவன் ஆரம்பித்த சுயநிலை விளக்கத்தை தலையசைத்து மறுத்து.

"எனக்கு அதெல்லாம் வேணாம், கேட்டதுக்கு ஆமா , இல்லைனு மட்டும் பதில் சொல்லு, அந்த பொண்ண நீ கைநீட்டி அடிச்சியா ?"

இந்த நிமிடம் வரை அவனுள் இருந்த குற்றவுணர்வு மேலிட, அவர் கண்ணை பார்த்திட தடுமாறி " ஆமாப்பா, அடிச்சிட்டேன் .. ஒரு கோவத்துல....." என்பதற்குள் பாண்டியன் வேகமாக திரும்பி வெளிய செல்ல,

கதிர் வேகமாக அவர் கைப்பற்றி கண்ணில் வைத்துக்கொண்டே " ப்ளீஸ்ப்பா தப்புதான் !! அத நான் சரினு சொல்லவே மாட்டேன்.. அந்த நிமிஷம், கோவம் என் கண்ண மறைச்சிருச்சுப்பா, சொல்லல ஆனா என் நிலைமையில நின்னு பார்க்குறப்போ உங்களுக்கும் புரியும். ப்ளீஸ்ப்பா ப்ளீஸ்ப்பா " என மன்னிப்பிற்காக மன்றாடினான்.

அழற்கதிரின் முகிலவள்Where stories live. Discover now