உருகாதோ எந்தன் உள்ளம் ...! எஸ்.ஜோவிதா - 6

1.1K 37 0
                                    

6
விசாலாட்சி பேரனோடு சேர்ந்து தோட்டத்துக்கு பாத்தி கட்டியது சரியில்லை என்று தோட்டக்காரர்களை வேலை வாங்கிக்கொண்டிருந்தாள்.

'வலிக்குதும்மா...ஸ்....ஆ..மெதுவாம்மா...' மாதங்கியின் குரல் சமையல் கட்டிலிருந்து வந்தது.
'கொஞ்சம் பொறுத்துக்கோம்மா...கொஞ்ச நேரம்தான்...' ஜானகி தன் மகளின் உள்ளங்கையில் மென்மையாக எண்ணெய் தடவிக்கொண்டிருந்தாள்.

" படுபாவி டீச்சர்...இப்படி பச்ச மண்ணுன்னு பார்க்காமலா அடிப்பா..அதுவும் உள்ளங்கையில்..' - பாப்பம்மா ஆதங்கத்துடன் புலம்பினாள்.

'இல்லை...!ஆமா..! டீச்சர் அடிச்சதுல தப்பில்லே! எம் பேரிலதான்..என் நோட்டுபுக் கிழிஞ்சிருந்துச்சு.....அடிச்சாங்க..' வலியுடன் முனகியவளை ஆச்சர்யமாக பார்த்து,

'என்னது உன்னோட நோட்டு புக் கிழிஞ்சிருந்திச்சா..? நீயா கிழிச்சே?' எனக் கேட்டாள்.

'ம்ஹூம்...' தலைகுனிந்து கொண்டாள் மாதங்கி.

'அப்படீன்னா யாரு...' பாப்பம்மா விடாமல் கேட்க,
'பாப்பம்மா போதும்....! மேலும் எதையும் கேட்டு வைக்காதீங்க..' ஜானகி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவளாய் மகளின் கையை எடுத்து ஊதினாள்.

'கவலைப்படாதேம்மா...! நாளைக்கு உடனேயே ஆறிடும் பெரிய மனுஷிபோல தனது தாயைப்பார்த்து சொல்லிவிட்டு ஹோர்ம்வொர்க் போட புத்தகத்தை எடுத்துக்கொண்டு சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் மாதங்கி.

ரோஹித்தின் அறையிலிருந்து புத்தகத்தின் தாள்கள் ஃபேன் காற்றுக்கு வெளியே வந்து விழுந்துகொண்டிருந்தன. மாதங்கி ஓடிவந்து ஒவ்வொன்றாக பொறுக்கி பக்கம் பார்த்து அடுக்கியபடி அவனது அறையிலுள்ள மேசையில் வைத்துவிட்டு திரும்பினாள். பக்கத்தில் சிறுவடிவில் இருந்த விடியோ கேமை பார்த்து சிறுபிள்ளைகளுக்கே உரிய விளையாட்டு எண்ணம் மேலோங்க...அதை மெல்ல தொட்டுப்பார்த்தது அவளது விரல்கள். பின் மெல்ல தூக்கியது ஏற்கனவே ஒரு கையில் அடிவாங்கி கன்றிப்போயிருந்தது. இடது கையால் தூக்கியபோது அதன் பாராமல் தாங்கமாட்டாமல் போட்டுவிட அது கிழே விழுந்து நொறுங்கியது. பயத்தில் நா மேலண்ணத்தில் ஒட்ட சத்தம் போடாமல் திரும்பியிவளுக்கு மூச்சு வரவில்லை. வாசலில் ரோஹித் கண்களில் கொலை வெறியுடன் நின்றிருந்தான்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now