உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - 13

1.1K 36 0
                                    

13

ரோஹித் மாதங்கியுடன் இதர டிபார்ட்மெண்டுக்குப் போனான். அங்கு ஒவ்வொருத்தரையும் சினேகத்துடன் கைகுலுக்கியபடி மாதங்கியிடம் விளக்கம் கேட்டுக்கொண்டான். எப்ப எந்த கேள்வி கேட்பான் என்று தெரியாமல் மாதங்கி மௌனமாக இருப்பதை விடுத்து அவன் கேட்கும் முதலே எல்லாவற்றையும் தெளிவுற விளக்கினாள். அவளது பேச்சையும், அவள் பேசும் அழகையும் ரசித்தவண்ண்ம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

'இந்த மாதிரி பேசினால் யார்தான் கவிழ மாட்டார்கள்?' எண்ணியவன் மெல்ல முறுவலித்தான். அவனது சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் மாதங்கி குழம்பிப்போனாள். நேரம் ஒடிப்போனது. வேலை முடிந்து மாலை ஐந்தரையை எட்டிக்கொண்டிருந்தது. ரோஹித் வாட்சை பார்த்துவிட்டு,

'ம்...மாதங்கி இன்னிக்கு இன்னிக்கு போதும்...வாங்க கிளம்பலாம்' என்று அவள் பதிலுக்கு காத்திராமால் போனான். அவளும் பேசாமல் பின் தொடர்ந்தாள். அவன் ஸ்டியரிங் சீட்டில் அமர்ந்தான். அவனை வியப்பாக பார்த்தாள்.

'இதென்ன? வந்த ரெண்டுநாள் கூட ஆகலை அதுக்குள்ளே காரை எடுத்திட்டாரு துரை...என்ன அமெரிக்கான்னு நினைப்போ...சென்னையில எத்தனை மேடு, பள்ளம் இருக்கும்னு அதைவிட டிராபிக் இது தெரியாமல்..அதைவிட மிகமிக முக்கியம் முதல்லே வீட்டுக்கு போக சாருக்கு வழி தெரியுமோ என்னவோ?' அவளது மனச்சாட்சி கிணடலடித்தது. பின் சீட்டு கதவை திறந்தாள். அவன் முன்சீட்டு கதவை திறந்து

'ஏறிக்கோ மாதங்கி'என்றான். வந்த எரிச்சலை அடக்கியபடி ஏறிக்கொண்டாள்.

'இன்னிக்கு நான் வீட்டுக்கு போறேனோ...? இல்லை நேரா மேலே போறேனோ... ஆண்டவா உனக்குத்தான் வெளிச்சம்...' கண்மூடி பிரார்த்தித்துவிட்டு கதவை ஒட்டி அமர்ந்துகொண்டாள். ரோஹித் அவள் முகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டு காரைக்கிளப்பினான். சீரான வேகம் எடுத்து கார் போய்க்கொண்டிருந்தது மாதங்கி நம்பமுடியாமல் ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now