முன்னொரு காலத்தில், மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே சிறிய கிராமம் ஒன்று இருந்தது, அதன் பெயர் தேன்சோலை. தேயிலை பறிப்பதும், தேனெடுப்பதும் தான் அங்குள்ள மக்களின் தொழில். நான்கு திசைகளிலும் மேகம் முட்டும் மலைகள். அடர்ந்து வளர்ந்த மரங்கள். சங்கீதம் பாடும் ஆறு, எப்போதும் வீசும் பனிக்காற்று என பெயருக்கேற்றார் போல் அழகே உருவான கிராமம் தேன் சோலை. அதன் அழகிற்கு அழகாக அந்த ஊருக்கு நடுவே, அழகிய மலை குன்று ஒன்றும் உண்டு. பல அதிசயங்கள் நிறைந்த அந்த மலை குன்றை பார்த்து வியக்காத ஆட்களே இல்லை.
தேன்சோலை கிராமத்தில் அன்று விடியும் வேளை, ஆறு வழக்கம் போல உற்சாகமாக ஓடிக் கொண்டிருந்தது, அதன் மேல் ஆற்றை கடக்க, பாலத்திற்கு பதிலாக ஒரு மரம் வெட்டி சாயக்கப்பட்டிருந்தது. அந்த மரத்தின் மீது கவனமாக நடந்து கொண்டிருந்தான் மாரி. அவனது ஒவ்வொரு அடிக்கும் இடுப்பில் கட்டியிருந்த தேன் பாட்டில்கள் அசைந்து க்ளாங். க்ளாங்.. என சப்தமிட்டு கொண்டிருந்தன.
மாரிக்கு பத்து வயது இருக்கும். மற்ற கிராம மக்கள் போலவே தேன் எடுப்பது தான் அவனது பெற்றோரின் தொழில். கயிறு கட்டி, மலை மீதேறி, உயிரை பணயம் வைத்து தான் வாழ்க்கை ஒடுகிறது. ஒரு பாட்டில் தேன் எடுப்பதற்கு ஒரு பானை வியர்வை சிந்த வேண்டும். சில வருடங்களுக்கு முன், தேன் எடுக்க போன அவன் தந்தை பாம்பு கடித்து இறந்து போனார். இப்போது இவன் அம்மா தான் மலை ஏறி குடும்பத்தை காப்பாற்றுகிறாள்.
மாரிக்கு பத்து வயது தான் ஆகிறது ஆனாலும் மலை ஏறுவதில் கெட்டிக்காரன். அவன் அம்மாவிற்கோ மாரி படித்து நல்ல வேலை பார்க்க வேண்டுமென்று ஆசை. மாரி படிப்பிலும் கெட்டிக்காரன் தான். அவன் தான் இக்குடும்பத்தின் எதிர்காலம். ஒரு வழியாக ஆற்றை கடந்து நகரம் நோக்கி நடக்கலானான் மாரி, யாரும் இல்லாத அந்த ஒத்தையடி பாதையில் அவன் அம்மாவின் வார்த்தைகள் அவனுக்கு
துணையாக வந்தது.'காசு சரியா பாத்து வாங்கிட்டு வந்துருய்யா.. எனக்கு உடம்பு முடிஞ்சா நானே போயிருப்பேன்.. உன்ன சின்னப் பயனு ஏமாத்த பாப்பானுவோ, இருபது ரூபா வாங்காம தேன கொடுத்துராத..'