வீடு புடிச்சிருக்கு..
இந்த வார்த்தையை நான் சொன்னதும் புரோக்கர் முகத்தில் அத்தனை பூரிப்பு, என் மனைவியை விட அவர் தான் மகிழ்ந்திருப்பார் போல, வீடு வாங்க வேண்டும் என முடிவு செய்ததிலிருந்து , அலுவலக விடுமுறை நாட்கள் முழுவதும் வீடு தேடுவதிலேயே கழித்திருக்கிறேன். வீடு தேடுவது எனக்கு சிறு வயதிலிருந்தே பழக்கப்பட்ட விஷயம் தான், எனினும் இம்முறை சொந்த வீடு என்பதால், முகப்பு வாசலிலிருந்து , வாஸ்து வரை அத்தனையிலும் வீட்டில் ஒவ்வொருவருக்கும் பல எதிர்பார்ப்புகள். அனைத்திர்க்கும் சேர்த்து புரோக்கரை அலைக்கழித்தோம். இன்றுடன் அவருக்கு நிம்மதி.
எனக்கு சென்னை தான் சொந்த ஊர், சொந்த ஊரில் சொந்தமாக காணி இடம் கூட இல்லாத சென்னையின் ஆதிவாசிகளில் நானும் அடக்கம். எங்கள் குடும்பத்தில் எவருக்குமே சொந்தமாக வீடு இருந்ததில்லை, ஏன் பலருக்கு வீட்டிறக்கான கனவு கூட இருந்ததில்லை. எனக்கு அப்படியில்லை, எனக்கு நினைவு தெரிந்து வசித்திருந்த முதல் வீடு இன்றும் எனக்கு நினைவிருக்கிறது, ஒரு பெரிய வீட்டின் மாடியில் தற்காலிகமாக கட்டப்பட்டிருந்த சிறிய ஆஸ்பெட்டாஸ் வீடு, அப்பா ஒரு பிரிண்டிங் பிரஸ்சில் வேலை பார்த்தார், அவரது சம்பளத்திற்குள் அந்த வீடு தான் அடங்கியது. எனக்கு மிகவும் பிடித்த வீடு, இப்போது கூட அந்த எரியாவை கடக்கும் பொழுது அந்த வீட்டை நினைத்துக் கொள்வதுண்டு. நான் தொடக்க பள்ளியை முடிக்கும் வரை அந்த வீடு தான், அப்பாவிற்கு உயராத சம்பளம் வீட்டு காரருக்கு உயர்ந்ததால், அவர் இரண்டாம் மாடிக்கு வீட்டை உயர்த்த முடிவு செய்தார், நாங்களும் எங்களுடன் சேர்த்து அந்த வீடும் காலியானது. சைக்கிளில் முன்னாள் நானும் பின்னால் அம்மாவுமாக வைத்துக் கொண்டு அப்பா வீடு தேடி அலைவார். முதன் முறை வாடகை வீட்டின் அர்த்தம் நான் தெரிந்து கொண்டது அப்பொழுது தான். அன்றிலிருந்து இன்று வரை பல வீடுகள் மாறி விட்டோம். ஒவ்வொரு வீட்டையும் காலி செய்கையில் அகற்ற முடியாத நம் நினைவுகளை விட்டே நகர்கிறோம்.