கதிரவன் கனலவனாய் மாறிய நன்பகல் வேளை, தனியார் கம்பெனியின் பின் புறமாக அமைந்திருந்த அந்த ஆந்திரா மெஷ்ஷை, மேல்மூச்சு , கீழ்மூச்சு வாங்க அடைந்தான் அவன். ஐடி கார்டை தவிர உடல் முழுதும் நனைய, வெயிலில் குளித்திருந்தான், சில்லறை எண்ணிக் கொண்டிருக்கும் போதே, உள்ளே பாவைக்காய் பொரியலின் வாசம் அவன் மூக்கை துளைத்தது, கசக்கும் பாவைக்காயை நினைக்கையில் அவனுக்கு மட்டும் ஏனோ இனிப்பு. டோக்கனை வாங்கி விட்டு மெஷ்ஷுக்குள் நுழைந்தான், மேஷ்ஷே காலியாக இருந்தது, இவன் தான் முதல் கஷ்டமர்.. ' நோ டிஸ்டர்பன்ஸ்' என மனதுக்குள் நினைத்துக் கொண்டான், .. பேனுக்கு கீழே நல்ல இடத்தை இவன் தேடிக் கொண்டிருக்க, அவன் நாக்கோ பொரியலை தேடி நெளிய தொடங்கிற்று, ஒரு வழியாக இடத்தை பிடித்து அமர்ந்தவன், பரிமாறுபவனை தேடி சுற்றும் முற்றும் பார்த்தான், அவனோ ஒரு மூலையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். 'லேட் ஆகுமோ' என யோசித்த வேளை. இவன் எண்ண ஓட்டத்தை புரிந்தவராய், மேஷ்ஷின் ஓனர் , வாசலில் இருந்து கர்ஜிக்க,அவர் முழக்கம் , அந்த மெஷ்ஷின் கறை படிந்த சுவர்களில், முட்டி ஓய்வதற்குள், தட்டுடன் உள்ளே சென்ற பரிமாறும் இளைஞன், இவனுக்கு இலை விரித்து விட்டான். இலைக்கு ஒரு காக்கா குளியலை போட்டு இவன் முடிக்கவும்.. ஆவி பறக்க சோறு போடப் பட்டது, அதன் பின்னே கிச்சடி, பருப்பு என ஒவ்வொன்றாக வந்தனம் செய்தன.. கடைசியில் இவன் காத்திருந்த பொரியல் வந்தது, ஆனால் வெறும் அரைக் கரண்டி தான். நிமிர்வதற்குள் பரிமாறுபவன் நகர்ந்து விட்டான்.
' சரி எங்கே போய் விட போகிறான், காலியானதும் கேட்போம்' என நினைத்துக் கொண்டு சாப்பிட தொடங்கினான் . அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஆந்தரா மாணவர் கூட்டம் நுழைய , மேஷ்ஷே நிறைந்து போனது. ஆந்திரா எக்ஸ்பிரஸ், சென்ட்ரல் வந்தது போல, எங்கும் தெலுங்கு இரைச்சல், கேலிகள், சிரிப்புகள், நையாண்டிகள். இரைச்சல்களுக்கு நடுவே சாம்பார், பருப்பு என ஏவல்கள் இங்கும் அங்கும் பாய்ந்து கொண்டு இருந்தன. பரிமாறுபவன் இப்போது பயங்கர பிஷி ஆகி போனான், அத்தனை ஏவலையும் அவன் ஒரே ஆளாக சமாளிக்க, பொரியலுக்கான இவன் கூவல்கள் மட்டும் ஏனோ அவன் செவியை எட்ட வில்லை. ஒரு வழியாக அவனை பிடித்து , பொரியல் கேட்டு விட்டான், பதிலாக அவன் பருப்பை வைத்து விட்டு பறந்தான். பொரியல் இடத்தை நிரப்பிய அந்த பருப்பை பார்க்கையில் இவனுக்கு வெறுப்பாய் வந்தது. அவன் இவன் பக்கம் திரும்புவதாக இல்லை. 'சரி, இப்போதைக்கு பருப்பை வைத்து சமாளிப்போம்' சாப்பிட ஆரம்பித்தான். எதேச்சையாக பின்னால் திரும்பியவன், அங்கே மாணவர்களுடன் பரிமாறுபவன் தெலுங்கில் சிரித்து சிரித்து பேசுவதையும் , அவர்களுக்கு பொரியலை அள்ளி அள்ளி வழங்குவதையும் பார்த்து விட்டான். பச்சை மிளகாயை கடித்தது போல இருந்தது அவனுக்கு. வந்த கோபத்தில் சோற்றை உருண்டையாய் இறுக்கி பிடித்தான். ' ஓனரிடம் புகார் செய்து விட வேண்டி தான் ' முதல் உருண்டையை முழுங்கும் போஅது சொல்லிக் கொண்டான். ' ஆள் வாட்ட சாட்டமாக இருக்கிறானே, நாம் தான் சொன்னோம் என்று தெரிந்து விட்டால், தனியாக வரும் போது நம்மிடம் ஏதும் வம்பு செய்து விடுவானோ.." இரண்டாம் உருண்டையை பிசைகையில் அவனுக்கு தோன்றிற்று. ' ச்சே.. அப்படி செய்தால், நம்மவர்கள் சும்மா விட்டு விடுவார்களா.. தமிழ் நாட்டில் , தெலுங்கன் தமிழனை ஏதும் செய்ய முடியுமா..' இரண்டாம் உருண்டை மென்று கொண்டிருந்தான். ' என்ன.. நம்மால் தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் போர் மூழும்.. அது தேவையில்லை.. கடைசியாக ஒரு முறை முயற்சித்துப் பாப்போம்..' மூன்றாம் உருடையை முடித்து விட்டு, பரிமாறுபவன் பார்வை இவன் பக்கம் விழ காத்திருந்தான். அவன் நினைத்தும் நடந்தது, தண்ணீர் வைக்க வந்த பரிமாறுபவனை லபக்கென அமுக்கி விட்டான். இம்முறையும் பருப்பை வைத்து விட கூடாது என உஷாராக, பொரியல் வேண்டுமென அதனை தொட்டே காட்டி விட்டான். பரிமாறுபவன் முகம் இவனை பார்கையில், ஏனோ இஞ்சி தின்னார் போல ஆகி விட்டது, கரண்டியில் பொரியலை தோண்டி எடுத்து , அரை கரண்டியை மட்டும் இலைக்கு காட்டி விட்டு, மீதத்துடன் மீண்டும் ஓடி விட்டான். இவனுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை, கோபம் கொதிக்க வைத்த குழம்பாக கொப்பளித்தது. அந்த நேரம் பார்த்து ஓணரும் இவன் பக்கம் வர, அவரிடம், அவன் கோபம் தீரும் வரை, புகார் மழையாக பொழிந்து தள்ளி விட்டான். அவர் தெலுங்கில் கார சாரமாக பரிமாறுபவனை ஏதோ திட்ட , இம்முறை பவ்யமாக இவனை அடைந்தான் பரிமாறுபவன், அவன் முகத்தை பார்க்க இவனுக்கு எதோ போல் இருந்தது, தன் பார்வை முழுதையும் இலையின் மீதே வைத்திருந்தான். முதல் கரண்டி முழுவதுமாய் பொரியல் இவன் இலையில் விழுந்தது, அடுத்த கரண்டி விழும்போழுதும் இவன் ஏதும் கூறவில்லை, மூன்றாம் கரண்டி, பொரியல் குவியலை மலையாக மாற்ற, போதும் என கை அசைவில் கூறினான். பரிமாறுபவன் மெதுவாய் நகர்ந்தான். சோற்றை அழகிய உருண்டையாய் பிடித்து அதில் இரத்தின கற்களாக பொரியலை பதித்து, நாவில் ஆசை ஊற , சாப்பிட எத்தனித்த வேளை, அவன் மொபைல் அலறியது. எரிச்சலுடன் அதை எடுத்தவன் , அதில் தெரிந்த பெயரை பார்த்ததும், பவ்யமாக ஆன்வசெய்து காதில் திணித்தான்," யெஸ் தினேஷ்.. ஐ எம் நியர் ஒன்லி.."
" ஆக்சுவலி. அம் ஈட்டி... "
" ஓஓ.. கிளையன்ட் கேம்ம்மா.. சாரி தினேஷ்.."
"அட் ஒன்ஸ் தினேஷ்.. அட் ஒன்ஸ்.." மூன்றாவது அட் ஒன்சின் பொழுது, இலையை அரை குறையாய் மூடி விட்டு நகர்ந்திருந்தான். காற்றில் பறந்த இலையின் இடைவெளி வழியே பொரியல் எட்டி பார்த்த போது , வாஷ் பேஷனில், சரியாக பூட்டப்படாத, தண்ணீர் குழாய் ஒழுகிக்கொண்டிருந்தது.