இதிகாசம்

321 45 43
                                    

சுள்ளென வயிற்றை கிள்ளியது பசி, கால்கள் நடக்க மறுத்து தள்ளாடின, கடைசியாக எப்போது சாப்பிட்டோம் என்று கூட நினைவில்லை. உணவின் ருசி கூட மறந்து விட்டது. பிச்சை எடுக்கலாம் என்றால் கூட இரக்கத்தை சம்பாதிக்க இழந்த கைகளோ, உருக்குலைந்த கால்களோ இல்லை. உடல் நோய்க்கு இறங்குவார் மத்தியில் பசி நோய்க்கு இறங்குவார் இல்லையே.

கண்ணடைக்க அந்த மார்க்கெட் வீதி முழுதும் நடந்தான் அவன். வயிறு முழுக்க பசி, காணும் இடமெல்லாம் பண்டம், இருந்தும் புசிக்க பசியும் பண்டமும் மட்டும் போதுமா.. பணமும் வேண்டுமே. பணத்துக்கு என்ன செய்வான் அவன், செய்வதறியாமல் ஒரு இனிப்பு கடையின் முன் நின்றான். கேட்டால் கிடைக்காது என்று தெரியும் பார்த்தாவது பசியை போக்க முடியுமா என்று அந்த பண்டங்களையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.

" ஏய் .. இங்க என்ன நிக்குற.. "

நிமிர்ந்து பார்த்தான், பழுத்த வயிறும் பளபளக்கும் ஆடையாக கல்லாவிலிருந்து ஒருவன் இவனை முறைத்தான். அவன் கடை ஜாங்கிரி நிறத்திலேயே நெற்றியில் நாமமிட்டிருந்தான்.

" அய்யா.. வேலை ஏதாச்சும் கொடுங்க.."

" வேலையா.. அதெல்லாமில்ல போ.."

" அய்யா.. பசிக்குதய்யா.. எந்த வேலைனாலும் செய்வேன்"

" ம்ம்ம்... " நாமத்தின் கண்கள் தலை முதல் கால் வரை இவனை நோட்டமிட்டது, " எந்த ஊரு நீ.. "

இவன் பதில் சொன்னதும் தான் தாமதம், எப்படி தான் கண்டுபிடித்தானோ..

" சீ.. போ முதல்ல இங்க இருந்து.. " தன் கைத்தடியை எடுத்து ஓங்கினான், இவன் நகராமல் போகவே மற்றுமொரு முறை ஓங்கினான், அவன் அடிக்க போவதில்லை என்பது இவனுக்கு தெரியும் அடித்தால் தான் அந்த கைத்தடிக்கும் தீட்டாகி விடுமே, வெந்நீரை முகத்தில் எறிவானோ.. ம்ஹும்.. மாட்டான் .. மாட்டான். நீருக்கும் தான் தீட்டு உண்டே. இவ்வுலகில் இவனை தொட்டாலும் தீட்டு இல்லாத ஒரே பொருள் பணம் மட்டும் தான் , அதை எரிந்தால் நன்றாக இருக்கும். எண்ணி கொண்டிருக்கையிலேயே மீண்டும் பசி வெகுண்டு நெஞ்சை அடைக்க அங்கிருந்து நகன்றான்.

என் சிறுகதைகள்Where stories live. Discover now