காஷ்மீர் உலகின் மிக அழகிய போர்க்களம், எங்கும் எழில் கொஞ்சும் அழகு, ஆனால் எங்களுக்குத் தான் அதை கொஞ்ச நேரமில்லை. இரண்டு வருடங்கள் பயிற்சி முடித்து விட்டு ஓர் முழு இராணுவ வீரனாய், பணி ஏற்க காஷ்மீர் வந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டது. இன்று தான் என்
முதல் பணி. மணல் மூட்டையை மட்டும் துளைத்த என் தோட்டாக்கள், தேச விரோதிகளின் உடலை மூட்டையென துளைக்கும் நாள், நெருங்கி விட்டதென்ற மகிழ்ச்சி , என் மனதெங்கும் பனியாய் பொழிந்து கொண்டிருந்தது. சீக்கிய ஆபிசர் ஒருவர் தான் என்னுடன் வரப் போகிறார். நான் சீக்கிரமாகவே வந்து விட்டேன். அவர் வர கொஞ்சம் நேரமானதால், பத்து நிமிடம் தாமதமாகவே எங்கள் மிஷன் தொடங்கியது.
சிக்கியர் வண்டியை ஓட்ட, நான் பாதுகாவலாக என் துப்பாக்கியை, குழந்தை போல நெஞ்சோடு அணைத்தபடி இருந்தேன். என்னே அழகு இவ்விடம்..! வெண்பனி ஆடையில் பூமித் தாய் தேவதையாகத் தான் ஜொலித்தாள். அந்த காட்டுப் பாதையில், குலுங்கி குலுங்கி சென்ற எங்கள் ட்ரெக், அவள் தொட்டிலில் தாலாட்டுவது போலவே இருந்தது. சீக்கியர் என்னிடம் அவ்வப்போது பேசிக் கொண்டே தான் வந்தார். இரண்டு வருடங்களில் என் இந்தி இன்னும் பெரிதாக முன்னேறவில்லை. பேசுவது புரியும். பதில் சொல்கையில் தான் இந்தி சேட்டைகளை காட்டும். அச்சா அச்சா மட்டுமே, என் தற்காப்பு ஆயுதம். இன்றும் அது போன்ற ஒரு புரியாத உரையாடல் எனக்கும் அவருக்கும். கொஞ்சம் புரிந்து, கொஞ்சம் யூகித்து, எப்போதும் தலையாட்டலாய் அவ்வப்போது ரெடிமேட் சிரிப்புமாய் மௌனத்தை தேடி செல்லும், அந்த உரையாடலில் இன்று சிறு சுவாரஸ்யம். நாங்கள் கொண்டு செல்வது உணவுப் பொருட்களையோ ஆயுதங்களையோ இல்லை , விசாரணை தீவிரவாதிகள் என்று இந்தியில் தான் சொன்னார், இருந்தும் என் காதில் செந்தமிழை போல் இன்பத் தேன் வந்து பாய்ந்தது. நான் இதுவரை எந்த தீவிரவாதியையும் நேரில் கண்டதில்லை. இதே வாகனத்தில் தான் அவர்கள்இருக்கிறார்கள் என்றதும் என்னால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை , ஒரு முறை பார்க்கலாமா என்று கேட்கவும் துணிந்து விட்டேன். அதற்குள் அவர் 'இரகசியமாக கொண்டு செல்ல வேண்டும், எங்கும் ட்ரெக்கின் கதவை திறக்க கூடாதென உத்தரவு' என்று கூறி என் கேள்விக்கு நான் கேட்கும் முன்பே பதிலளித்து என் வாயை அடைத்து விட்டார். என் ஏக்கத்தை புரிந்து கொண்டாரோ என்னவோ..! திடீரென பாடத் தொடங்கினார் அந்த சீக்கிய அதிகாரி. சீக்கியர்கள் பாடல் இனிமையாக இருக்கும், அவர்கள் குரலுக்காக அல்ல . பாடலின் உற்சாகத்தை முதலில் அவர்கள் முகத்தில் பார்க்கலாம். அதை பார்க்கையில் அந்த புத்துணர்வு நமக்குள்ளும் புகுந்து நம்மையும் ஆட வைத்து விடும், பாடலுக்கு வாத்தியங்கள் தான் குறைவு என்று தான் நினைத்தது தான் பிழையோ, திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கியால் இசைத்தனர். முதல் குண்டு எங்கள் வாகனத்தை துளைக்க எங்களுக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எங்களை சூழ்ந்த பனிமூட்டமும் அவர்களுக்கு சாதகமாய் மாற, எங்கே சுடுவது என தெரியாமல் சத்தம் வந்த திசையெங்கும் சுட்டேன், எந்த பலனும் இல்லை. அடுத்த தோட்டா எங்கள் வாகனத்தின் கண்ணாடியை பதம் பார்க்க, கண்ணாடியெங்கும் சிலந்தி வலை கீரள்கள். நான் சுதாரிப்பதற்குள் அடுத்த குண்டு கண்ணாடியை துளைத்து, சீக்கிய ஆபிசரின் இதயத்தை சுவைத்தது. ஓலத்துடன் அவர் சரிய, வண்டி கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மரத்தின் மீது மோதி அணைந்து போனது. முடிந்த வரை பதுங்கிக் கொண்டு என் தருணத்திற்காக காத்திருந்தேன். இதுதான் என் கடைசி தருணமோ என எண்ணிய வேளை, இயற்கை என் பக்கம் திரும்பியது. எங்களை ஆக்கிரமித்த பனி மூட்டம் சிறிது விலக, அவன் தெரிந்தான் அடுத்த கனம் என் துப்பாக்கி உமிழ்ந்த தோட்டா அவன் உயிரை குடித்தது. மரண ஓலத்துடன் அவன் பேரலையாய் கரை தொட்டு ஓய, அங்கே மீண்டும் அமைதி. சில நிமிடங்கள் பயத்தில் கழிய, என்னை திடப்படுத்திக் கொண்டு வெளியே வந்தேன். அவன் சடலத்தை தவிர அங்கு வேறெதுமில்லை. நான் விட்ட நிம்மதி பெருமூச்சு புகையாய் மாறி காற்றை கிழித்த வேளை, எங்கள் ட்ரெக்கின் பின் கதவில் தட்தட் என தட்டும் ஓசை. உடைந்து போன அந்த கதவு எந்த கனமும் திறந்து கொள்ளலாம் என்ற எண்ணம் மீண்டும் என்னை அச்சத்தில் ஆழ்த்தியது. என் துப்பாக்கியால் குறி பார்த்தவாறே, அந்த கதவை நெருங்கினேன். நான் நினைத்தது போலவே கதவு திறந்து கொள்ள, தீவிரவாதியை எதிர்நோக்க தயாரானேன். தீவிரவாதி நான் நினைத்ததை போல இல்லை, மிகவும் குள்ளமாக இருந்தான். மூன்று அடிதான் இருப்பான். முகத்தில் தாடி மீசை இல்லை, உறைந்த இரத்தம் தான் கரையாக படிந்து இருந்தது. அவனுக்கு ஐந்து வயது தான் இருக்கும். கண்கள் பயத்திற்கு பழகி அலுத்து போய், வெறித்து இருந்தது. என்னை கண்டதும் ஆக்ரோசமாக பாயந்து என் காலை கடிக்க முயன்றான்.
அவனை தடுக்க முயல முடியாமல் கட்டிப் போட்டது, அவனுக்கு பின்னே தெரிந்த அந்த காட்சி. என் உடல் அந்த கடுங்குளிரிலும் உஷ்ணமானது, கண்கள் நிலைகுத்தி உறைந்து போனது. தீவிரவாதிகள் என அடைத்து வைக்கப்பட்ட அந்த அவலை பெண்களை பார்த்து, பரிதவிக்கவோ, அல்லது அவர்களின் அரை நிர்வாண கோலத்தை கண்டு முகம் திருப்பவோ இயலாமல் நான் இறுகிப் போயிருந்தேன். ஒருத்திக்கு நாற்பது வயது இருக்கலாம். கிழிந்த மேலாடைகளை இழுத்து, தன் கீழ் உடலை மறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். அவள் அருகில் ஒரு இளம்பெண் பதினாறு பதினேழு வயது இருக்கும். தலையை தூக்கும் திராணியையும் இழந்திருந்தாள்.நான் அவளை பார்ப்பது தெரிந்ததும், தன் மானத்தை மறந்து இளம்பெண்
ணின் உடலை மறைக்க முயன்ற அந்த நாற்பது வயது மதிக்கத்தக்க பெண், இவளது தாயாக தான் இருக்க வேண்டும். இருவரின் உடலெங்கும் சதை வெறி பிடித்த மிருகங்களுக்கு இறையான தடயங்கள். அருகே ஒரு முதியவள், நிலை குத்திய பார்வையில் என்னை துளைத்துக் கொண்டிருந்தாள். அவளை நெருங்கி பார்த்தேன். சில நிமிடங்களுக்கு முன் தான் இறந்திருக்க வேண்டும். நான் சட்டென திரும்பியதும், அவர்கள் பதறியிருக்க வேண்டும். கைகூப்பி வேண்டிய அந்த தாயின் கதறல்கள் புரிய, எனக்கு காஷ்மீரி தெரிந்திருக்க தேவையில்லை. அங்கிருந்து வெளியேறி, பின்கதவை மூடினேன். இறந்த சீக்கியரை நீக்கி ட்ரைவர் சீட்டில் அமர்ந்தேன். வண்டியை கிளப்பி பனி மூட்டத்தில் புகுந்தேன். என் மனமெங்கும் போர்க்களம், தாயை களங்கமானவள் என வசைபாடியவனின் தலையை கொய்யும் கோபம், அவன் கூறியது உண்மை தான் என நேரில் கண்ட ஆதங்கம். கைகள் பதறின, பெருமிதத்துடன் அணிந்த உடை உடலை உறுத்தியது. அக்னி பிழம்பாய் சிவந்த கண்கள் கண்ணீரால் தன்னை குளிர்வித்துக் கொண்டன. அவர்கள் ஊரையடைந்த போது, அனைத்து கண்களும் என் மீதே இருந்தன. இறந்த முதியவளை தூக்கிக் கொண்டு மற்றவர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டையடைந்தேன். அங்கு அவர்களை ஒப்படைத்து விட்டு நான் திரும்புகையில் அந்த உரார் முன் உடையணிந்தும் நிர்வாணமாக உணர்ந்தேன். ட்ரெக்கில் என்னை அடைத்துக் கொண்டு, செல்லும் வழியை பார்த்தேன். அந்த கடுங்குளிரில் என்னை மூடிய பனி, இப்போது விலகி இருந்தது.