கண்களை மெல்ல திறந்தேன் , எனதருகில் ஒரு டாக்டர் மட்டும் தெரிந்தார், வேறெங்கும் ஒரே இருட்டு. காற்றில் மருந்தின் வாசனை. நான் ஏதோ ஆஸ்பிட்டலில் இருக்கிறேன் என்பது மட்டும் புரிந்தது. கடைசியாக என் கார் விபத்தானது மட்டும் தான் நினைவிருக்கிறது. டாக்டரை பார்க்க முயன்றேன், ஆஆ!!.. சுளீரென வலி.
" திரும்பாதீங்க.. "
என்றது டாக்டர் குரல்
" உங்க கழுத்தில பலமா அடிபட்டுருக்கு, பிழைச்சதே பெரிய விஷயம் ஆனா.." சற்று மௌனமாகி தொடர்ந்தார் டாக்டர்
" சாரி.. உங்க பார்வை பறிபோயிடுத்து .. "
நான் திடுக்கிட்டு என் பக்கம் அமர்ந்திருந்த டாக்டரை பார்த்தேன், அவரது வெள்ளை கோட்டிலிருந்த நேம்பேட்ஜ் மட்டுமே தெரிந்தது.
"அப்போ நீங்க மட்டும் எனக்கு எப்படி தெரியுரீங்க, டாக்டர் சரண்" என்றேன் கோபமாக,
" டாக்டர் சரணா !! அது நீங்க குடிச்சுட்டு காரோட்டி கொன்ற டாக்டர் பெயராச்சே, நான் வசந்த்"உடலெங்கும் பயத்தில் நடுங்க, திரும்பினேன். டாக்டர் சரண் இரத்தம் வழிந்த முகத்துடன் என்னை பார்த்து சிரித்தார்.