படித்த முட்டாள்கள் நிறைந்த அந்த கிராமத்தில் ஒரேயொரு கோயில் இருந்தது, அந்த கோயில் தான், அவ்வூர் மக்களுக்கு பெரிய சொத்து. அக்கோயிலில் வேண்டினால், தான் நினைத்தது நடக்கும் என்று அவ்வூர் செல்வந்தன் முதல் பிச்சைக் காரன் வரை நம்பிக்கை. ஆனால் அக்கோயிலில் வணங்கியதனால் யாருக்கும் பெரிய நன்மை நடந்ததாக தெரியவில்லை. இருந்த போதிலும் அங்கு தவறாமல் சென்று காணிக்கை செலுத்தி தான் வந்தனர் மக்கள். ஆனால் அக்கோயில் கடவுளுக்கோ பூசாரிகள் மீது தான் பிரியம் போல, வந்த காணிக்கைகளெல்லாம் பூசாரிகள் எடுத்துக் கொள்ள, அவர்கள் தொந்தி மட்டும் வளரும் மலையாய் தினமும் கொளுத்தது.
அவ்வூரில் இரு முதன்மை பூசாரிகள் இருவரும் உண்டியலில் கை வைக்காதவர்கள் இல்லை. இருந்தும் மக்களும் இவருக்கு அவர் பரவாயில்லை, அவருக்கு இவர் பரவாயில்லை என மாறி மாறி பூசை செய்ய பணித்தனர்.
இவ்வாறாக இருக்க அவ்விரு பூசாரிகளில் ஒருவர் உண்டியலையே தன் வீட்டு அலமாரிக்கு மாற்ற, அவர் மீது கோபம் கொண்டு அவரை இனி கோயில் வாசலே மிதிக்காதே! என்று கூறிவிட்டனர் மக்கள் . இதனால் இரண்டாம் பூசாரிக்கு மிகுந்த சந்தோசம். போட்டிக்கு ஆளில்லாத்தால் வெகு விமர்சையாக சாமிக்கு பூசையும், தனக்கு உண்டியலுமாக வாழ்ந்து வந்தார் . இது கடவுளுக்கு பொறுக்குமோ , தண்ணி எடுக்க போன போது கால் இடறி ஆற்றில் விழுந்தவர், ஆறோடு ஓடி கடலில் கலந்து காலாவதி ஆகி விட்டார்.
பூசாரி திடீரென காலமானதால் மக்களுக்கு பீதியாகி விட்டது. உண்டியலில் கை வைத்தாலும் உண்டியலை கோயிலிலேயே வைத்திருந்தாறே, அவ்வளவு சில்லறையையும் கஷ்டப் பட்டு வீட்டுக்கு கொண்டு செல்வாறே, ஒத்தை ஆளாக இருப்பதினால் அவர் கொஞ்சம் உண்டியலில் கை வைத்தாலும் தவறில்லையே என மக்கள் ஏகத்துக்கும் காலமான பூசாரியை புகழ்ந்து தள்ள, அடுத்து பூசைக்கு என்ன செய்யவென்று விழித்தனர். அப்போது தான் பூசாரிக்கு மணியடிக்கும் பையன் மீது அவர்கள் கவனம் திரும்பியது, இதை சற்றும் எதிர் பாராத பையனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி , ஆனால் தனக்கு தான் மந்திரமே தெரியாதே ..! அது பரவாயில்லை இதுவரை எந்த பூசாரிக்குத் தான் தெரிந்திருக்கிறது. மணியை வேகமாக அடித்தால் அந்த சத்தத்தில் யாருக்கும் கேட்காதென்று முடிவெடுத்தான். இவ்வாறு சில நாட்கள் ஓங்கி மணி அடித்தே ஊரை ஏமாற்றி விட்டான், தானும் பூசாரியென்று. ஆனால் அவனுக்கு வந்த சோதனை அவன் மந்திரம் தெரியாமல் சமாளிப்பதை கோயிலை கழுவி சுத்தம் செய்யும் வேலைக்காரன் கவனித்து விட்டான். வேலைக் காரனுக்கு பழைய பூசாரியை நன்கு தெரியும் அவர் வீட்டிலேயே அலைந்ததால், சரியான மந்திரத்தை கேட்டால் கண்டு பிடித்துவிடுவான். பையனின் பலவீனத்தை அறிந்து கொண்டதால், மணியடிக்கும் பையனுக்கும் வேறு வழியில்லை வேலைக் காரனை கூட்டு சேர்த்துக் கொண்டான். வேலைக் காரன் இனி சாமியை கழுவி குளிப்பாட்ட , பையன் மணியடித்து பூசை செய்ய வேண்டும் இது தான் அவர்கள் ஒப்பந்தம். இது சில நாட்கள் சென்று கொண்டிருக்க, வேலைக்காரனுக்கு ஓர் யோசனை வந்தது மணியடிப்பது என்ன சீமை வித்தையா! , அது நம்மால் முடியாதா! அதையும் நாமே செய்தாலென்ன என்று நினைத்தான். கோயிலின் மற்ற வேலையாட்களுடன் கலந்து பேசி , இனி தானே பூசாரி ஆகப் போவதாக அறிவித்தான் . ஊர் மக்களுக்கு இது அதிருப்தி என்றாலும் வேறு வழியில்லை கோயிலை நம்பித் தான் ஆக வேண்டும். மணியடிக்கும் பையனுக்கு தனக்கு அடித்த யோகம் திடீரென கலைந்ததால் பெரும் சோகம் , இருந்தாலும் முழு கோயில் ஆள்களையும் எதிர்க்க திடமில்லை, கால் போன போக்கில் நடந்து போய் கடைசியில் ஆற்றங்கரையில் அமர்ந்தான் . வெகு நேரமாக சிந்தித்தான் அவனுக்கு மணியடிப்பதை தவிர வேறு ஏதும் தெரியாது , துவண்டு போன அவனுக்கு , திடீரென ஒரு வழி தோன்றிற்று . உடனே ஊரார்களைக் கூட்டி , சாமி கோயிலில் மிகவும் வெக்கையாக இருப்பதால் வெளி வந்து விட்டாரென்றும் , இப்போது குளிர்ச்சிக்காக இந்த ஆற்றினுள் தான் இருக்காறென்றும் . அவருக்கு பூசை செய்யவே பழைய பூசாரியை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டார் என்றும் கூறினான் , பழைய பூசாரி தான் தண்ணீருக்குள் பூசை செய்கிறார் நான் கரையில் இருந்து மணி மட்டும் அடிப்பேன் என்றான். இதைக் கேட்டு ஊரில் ஒரே பரபரப்பு, ஒருவன் மணியடிப்பவன் சொல்வது தான் உண்மை அவன் பாவம் என்றான், மற்றொருவனோ அவன் தைரியமாக சொன்னான் வீரன் என்றான். இன்னும் சிலர் கோயிலில் தான் இன்னும் கடவுள் இருக்கிறார் என்றனர். இதற்கிடையில் இதற்கு முந்தைய முதிர்ந்த பூசாரி சாமிக்கு கோயிலில் உண்டியல் இருப்பதில் பாதுகாப்பில்லை என பயந்தார் அதனால் தான் எங்கள் வீட்டிற்கு உண்டியலை மாற்றினோம் இப்போது சாமியே எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார் இங்கே வாருங்கள் என்றனர். மூவரும் அடித்துக் கொள்ள சாமியின் தலை கோயிலிலும், கால் ஆற்றங்கரையிலும் , உடல் பூசாரி வீட்டிலும் இடம் பெயர்ந்தது. ஆனால் மக்களிக்கு இன்னும் புத்தி வந்ததாய் தெரியவில்லை. எங்கு முதலில் செல்வது என தெரியாமல் திரு திருவென விழித்துக் கொண்டிருந்தனர், செய்யும் தொழிலே தெய்வம் என்பதை மறந்து.முற்றும்.