கதிரவன் உதிரம் காயுமாறு தன் உக்கிரத்தை அனல் வெயிலாக பொழிந்து கொண்டிருந்த நண்பகல் நேரம். அய்யனார் ஒரு செம்பருத்தி செடியின் நிழலில் , ஆயாசமாக படுத்திருந்தான். காலையில் அய்யர் வீட்டு இட்லியும் , பாய் கடை நல்லி எலும்பும் ருசித்த வயிறு இப்போது மறுபடியும் வற்றி அவனை வறுத்தெடுக்க தொடங்கியிருந்தது.
அண்ணாந்து பார்த்தான் , எஜமானியின் வீட்டு கதவு இன்னும் அடைத்தே இருந்தது. நேற்றிலிருந்து எஜமானியை கண்ணிலேயே காண முடியவில்லை. எங்கோ வெளியூர் பிரயாணம் போல, என்ன தான் இவனுக்கு இந்த தெருவே சொந்தமென்றாலும் இவன் சொந்தமாக நினைப்பது முற்றத்தில் செம்பருத்தி செடி கொண்ட இந்த இரட்டை மாடி வீட்டை தான்.
இவனின் தாய் இவன் பிறந்த சில நாட்களிலேயே கார் ஒன்றில் அடிபட்டு இறந்து போனாள், உடன் பிறந்தவர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக தொலைத்து விட்டான். கடைசியாக உடன் பிறந்தவள் ஒருத்தி மட்டும் இருந்தாள், அவளின் பால் வெள்ளை நிறத்தை கண்டு மயங்கியே ஒருவன் அவளை கடத்தி சென்று விட்டான்., கருப்பாக, நோஞ்சானாக பிறந்ததால் அய்யனாரை யாரும் கண்டுகொள்ள வில்லை.
எஜமானியம்மாள் மட்டும் தான் துவண்டு கிடந்த அவனுக்கு சோறூட்டினாள், தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தாள், ஏன் அழைக்க அய்யனார் என பெயர் கூட வைத்தாள். அவளையன்றி வேறு யாரை எஜமானியாக எண்ணுவது, என்ன தான் தெரு முழுவதும் உணவுண்டாலும், எஜமானி கையால் சாப்பிடாமல், அவன் ஒரு நாள் கூட இருந்ததே இல்லை. இப்போது தான் இரண்டு நாட்களாக அவளை காணாமல் கண்கள் ஓய்ந்தே போய் விட்டது.
சட்டென தொலைவில் ஏதோ ஒலி கேட்க, துடித்து எழுந்தவன், தீர்க்கமாக அந்த ஒலியை ஆராய்ந்தான், பின் சிட்டாக ஒலி வந்த திசை நோக்கி பாய்ந்தான், தொலைவில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது, நன்கு முகர்ந்து பார்த்தான் இது எஜமானியின் கார் தான். அவனை மீறி அந்த தெருவுக்குள் வேறு யாரும் வந்து விட முடியுமா, அப்படியே யாராவது வந்தாலும், கத்தியே ஊரை கூட்டி விடுவானே, இந்த தெருவுக்கே அவன் தானே காவல்.