மலர்மதி அலுவலகத்தின் பழைய பாத்ரூம் கண்ணாடியை நான்காம் முறையாக தண்ணீரில் கழுவினாள். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. முகம் பாதியாவது தெரிந்தது. வட்ட பொட்டினை நெற்றியின் நடுவில் நிறுத்தி. கூந்தலில் பூச்சூடி. சேலையின் மடிப்பு ஒவ்வொன்றையும் தனியாக நீவி விட்டு, முந்தானையை இடையில் தெரிந்தே ஒரு இடைவெளி விட்டு செருகி, தன் அழகை ஒரு முறை மெய் மறந்து பார்ப்பதற்குள்,
" மேடம்.. இன்னும் ஒரு பேசண்ட் இருக்கார் போல.. " என்றாள் நர்ஸு." என்ன விஜிக்கா.. நல்லா பார்த்து சொல்லுங்கன்னு சொன்னேன்ல.. நான் ஒரு ரிசப்ஷன் போனும் . இப்போவே டைம் ஆயிடுச்சே.. |
" நான் கூட நாளைக்கு வாங்கன்னு சொன்னேன் மேடம். அந்த ஆளு பாத்தே ஆகணும் எமர்ஜன்சினு அடம் பிடிக்கிறான். "
சலிப்புடன் வாட்ச்சை திருப்பினாள், அரை மணி நேரம் பாக்கி இருந்தது.
" சரி வர சொல்லுங்க.. "
கடைசியாக தலை முடியை சரி செய்து விட்டு, சீட்டில் அமர்ந்தாள், மலர்மதி சைக்காட்டிஸ்ட் எனற தன் பெயர் பலகையை சரி செய்து வாயிலை பார்த்த படி வைக்கவும் கதவு திறந்தது.முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் வந்தான். இவள் காட்டுவதற்கு முன் இருக்கையில் அவனே அமர்ந்து கொண்டான்.
'பொறுமை இல்லாதவன்ஆர் அதிக பிரசங்கி.. ' மனதிற்குள் எடை போட்டு கொண்டவள், " ஹலோ சார். நான் மலர் மதி.. உங்க நேம்.. "
" அத்துக்குலாம் நேரம் இல்லை.. " கரு வளையமிட்ட தன் கண்களால் பார்த்தான்.
" சார் உங்களுக்கு என்ன ப்ராப்ளம்.. "
" என்னை ஒருத்தன் துரத்துறான்.. "
" யாரு.. எங்கே.. "
" எங்கேயும்.. இப்போ கூட ஆஸ்ப்பிட்டல் வரும் வரைக்கும் என் பின்னாடியே வந்தான். "
" போலீஸ்ட்ட கம்ப்ளைன்ட் பன்னீங்களா.. "
" செஞ்சேன் அவங்க உங்களை பாக்க சொல்லி அனுப்பிட்டங்க.. "
" ஏன்.."
" அவங்க என்னை லூசுன்னு நினைக்குறாங்க.. "