"என் கன்னுக்குட்டி.. ராசா.. முழிச்சாச்சா.. வாடா.. அம்மாட்ட வாடா.." தன் மகனை தோளில் போட்டு தூக்கம் தெளிய ஆட்டினாள் கல்யாணி. தன் மகன் தூங்கி எழும் அழகை எண்ணி அவள் பூரிப்படைந்த வேளை , சட்டென யாரோ அவள் குழந்தையை தட்டி பறிக்க, பரிதவித்து ஏறிட்டாள். அங்கே ஒரு இளம் பெண் இவள் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள், நன்கு பஞ்சாபி திருமண உடையில் தன்னை சிங்காரித்திருந்த அவள், இவள் மகனை கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
" யாரு நீ.. என் மகன என்கிட்ட கொடு.."
" உங்க மகனா .. அதெல்லாம் நேத்திக்கு, இனி இவர் என் புருசன் , என் கூட தான் இருப்பாரு .. ஏங்க ..." என ஈன ஸ்வரத்தில் பாட , இவள் குழந்தை அதற்கு இணங்கி தலை ஆட்டினான்.
" அதெல்லாம் இல்ல, என் பையன் என்கிட்டே தான் இருப்பான், நீ அவனை ஏதோ பண்ணிட்ட .. பாதகி .." என பொங்கி வந்த ஆத்திரத்தை கொட்டி முடித்தாள் கல்யாணி.
" பாத்திங்களா .. உங்க அம்மா என்ன எப்படி பேசுறாங்க.. நீங்களும் பாத்துட்டு சும்மா இருக்கீங்க.." என சிணுங்கினாள் அந்த மோகினி .அவள் சிணுங்களை கேட்டதும் குடை மிளகாயாய் சிவந்தது இவள் செல்வனின், பால் முகம், " அம்மா வயசாயிடுச்சே தவிர உனக்கு பேசவே தெரியல, அவ சின்ன பொண்ணு தானே .. இப்படி பேசுறியே.. பாவம் அவவவ.." என எண்ணையில் போட்ட வத்தலாய் பொரிந்து தள்ளினான்.
கல்யாணி ' தன் மகனா இப்படி பேசுவது..' என மனதிற்குள் பொருமினாள் , இருந்தும் அந்த கைகாரியிடமிருந்து மகனை காக்க வேண்டுமென்ற வேகமும் வந்தது.. வெகுண்டு எழ முயற்சிக்க, கை கால்கள் கட்டுண்டதாய் உணர்ந்தாள், ஆத்திரமும் ஆற்றாமையும் சேர்ந்து கொள்ள கத்தினாள் , " என்னங்க, என்னங்க, என் மகன தூக்கிட்டு போறாங்க.. என் மகன்.. என் மகன்.."
" கல்யாணி.. ஏய் கல்யாணி .. என்ன உளறிட்டு இருக்க.." அவள் கணவன் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள்,
" என்ன ஆச்சு .. கெட்ட கனவா.. இந்தா தண்ணிய குடி "மடக் மடக்கென தண்ணீரை குடித்தவள்,
" ஆமா .. தொட்டில்ல இருந்த மகன காணோம்.." என்றாள் , இதை கேட்டு கொளீர் என சிரித்தான் அவள் கணவன் கணேசன்.
" நம்ம மகன் தொட்டில்ல விட்டு இறங்கி இருபத்தேழு வருஷம் ஆச்சு.. அதான் அமெரிக்கால இருந்து வரானே நாளைக்கு.. வந்ததும் வேணா, தொட்டில்ல போட்டு ஆட்டிக்கோ .." மீண்டும் சிரித்தான்,
அவனை முறைத்து விட்டு திரும்பி படுத்துக்கொண்டாள் .
'. ஆமா அவன் மட்டுமா வரான் .. கூடவே ஒரு இந்தி காரியையும் கூட்டிட்டு தானே வரான் , ச்ச இவனுக்கு எப்படி எல்லாமோ , பொண்ணு பாக்கணும்னு கல்யாண வீடு , சடங்கு வீடா தேடுனேனே.. கடைசில, இப்டி மார்வாடி பொண்ண பாத்துட்டானே.. ம்ம்...அவளுக்கும் ஒன்னும் கொறச்சல் இல்ல, நல்ல மிடுக்கா தான் இருக்கா, இருந்தாலும் அவ ஊரு வழக்கம் என்னவோ.. உள்ளூர்காரிகளே டங்கு டங்குனு ஆடுறாளுக , வடக்க உள்ளவ என்ன ஆட்டம் ஆட போராலோ , நம்மள புடிக்குமோ, என்னவோ.. ' பெரு மூச்சு விட்டவளை, காலண்டரில் இருந்து முருகன் பார்த்து சிரிக்க, 'முருகா என் புள்ள சந்தோசம் தான் எனக்கு முக்கியம், வர்றவளுக்கு என்ன பிடிக்கனும் .. என் புள்ளய என்கிட்ட இருந்து பிரிச்சிட கூடாது.. எப்படியாச்சும் என் மருமகளுக்கு என்ன புடிக்க வை.. உனக்கு சந்தனம் சாத்துறேன்..' மனமுருக காலண்டர் முருகனை வேண்டுதலால் நிறைத்து விட்டு தான் தூங்கினாள்.
மறுநாள் காலை எழுந்ததும் , பம்பரமாய் சுழன்று எல்லா வேலைகளையும் முடித்தாள், மறுமகளுக்கென , பஞ்சாபி ஸ்டைலில் சப்பாத்தியும் குருமாவும் செய்து இருந்தாள் , கணேஷன் காலையிலேயே அவர்களை அழைத்து வர ஸ்டேஷன் சென்று விட்டான், கல்யாணி நல்ல புது புடவை உடுத்தி , ஆங்காங்கே எட்டி பார்த்த வெள்ளை முடிகளையெல்லாம் ஹேர் டையில் மறைத்து , பிரமாதமாக கிளம்பி இருந்தாள், பெட் ரூமோடு சேர்ந்து இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில், தன் அலங்காரங்களை சரி செய்து கொண்டிருந்தாள், இவள் இவ்வளவு நேரம் கண்ணாடி பார்த்து பல வருடம் இருக்கும். இன்று முக்கியாயமான நாள் ஆயிற்றே.. இவள் குடும்பத்தின் இன்னொரு பெண்ணை வரவேற்கும் தருணம் , இதில் எப்போதும் போல இருக்க முடியுமா.. வருடங்கள் உருண்டோடியது கண்ணாடியில் தான் தெரிகிறது , இதே கண்ணாடியின் முன் தான் தன் மகனை அமர வைத்து அவனுக்கு தலை சீவி பள்ளிக்கு அனுப்புவாள், அதற்குள் பெரிய போராட்டமே நடத்தி விடுவான், விடு முறையில் கூட இவளை விட்டு பிரிய மாட்டான்,அம்மா வந்தா தான் வருவேனென அடம் பிடிப்பான், அவன் நடை பழகியதிலிருந்து, சைக்கிள் ஒட்டி கீழே விழுந்தது, பைக் கேட்டு ஒற்றை காலில் நின்றது வரை எல்லாம் நினைவுக்கு வந்தது, நினைவலைகளில் அவள் மூழ்கியிருந்த வேளை , வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம், அவளை நிகழ் காலத்துக்கு இழுத்து வந்தது, சட்டென அவசரமாக வாயில் பக்கம் திரும்பியவள் ஒரு நொடி தாமதித்து, கண்ணாடியில் தன் நெற்றி பொட்டினை கூர்ந்து பார்த்தாள் , அதை நீக்கி விட்டு சின்ன நாகரீக பொட்டினை ஒட்டிக் கொண்டு, ஓட்டமும் நடையுமாய் கதவினை அடைந்தாள், கதவின் தாள் அருகே அவள் விரல் நெருங்கவும் பதற்றம் அவளை ஆட்கொண்டு விட்டது, தன வருங்கால மருமகளிடம் பேச மனப்பாடம் செய்து வைத்த ஆங்கில வாக்கியங்களை நினைவு கூர்ந்தவளாய் கதவை திறந்தாள்.